இன்று செப் 5. முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி இராதா கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். அதாவது ஆசிரியர் தினம் என்று சொன்னால் அனைவருக்கும் எளிதில் புரிந்து விடும். எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நமக்கு மொழியைக் கற்றுக் கொடுத்து, அறிவியலைக் கற்றுக் கொடுத்து நம்மை வளர்த்து விட்டு அதே நிலையில் தங்களை நிறுத்திக் கொண்ட ஆசிரியர்களை நினைத்துக் கொள்ளும் தருணம் இது. சொல்லப்போனால் இன்று மட்டும் அல்ல மற்ற எல்லா நாட்களிலும் நினைவில் இருக்க வேண்டியவர்கள். எனது பள்ளி நாட்கள் அழகிய கவிதைகளானது ஆசிரியர்களால் தான். எனது பள்ளி நாட்கள் அர்த்தமுள்ளதாய் இன்றும் என்றும் நிலைத்திருப்பது எனது ஆசிரியர்களால் தான்.
யாரும் என்னைப் பார்த்துக் கேட்டால் எப்பொழுதும் என்னால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும் நான் தூய சவேரியார் பள்ளியின் மாணவன் என்று. இன்று நான் உயர்ந்த இடத்தில் இருக்கின்றேனா என்பதில் சந்தேகம் தான். ஆனால் இதயத்தின் ஈரம் குறையாமல் அனைவரிடம் முடிந்த அளவு மனிதாபிமானத்தோடும், உதவும் மனப்பாங்கோடு இருக்க முடிகிறதென்றால் என் ஆசிரியர்கள் எனக்குள் தூவிய நல்ல விதைகள் தான் அதற்குக் காரணம். வெறும் அருணாசலமாக வெறும் அருண்பாரதியாக இருந்த என்னை கவிஞர் அருண்பாரதி என்றும், எழுத்தாளர் அருண்பாரதி என்றும் அழைக்கக் காரணமாக இருந்தது என் தந்தை எனும் முதல் ஆசிரியன். அடுத்து நான் படித்த பாளை தூய சவேரியார் பள்ளியின் ஆசிரியர்கள் தான்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஏறிய முதல் மேடை எல்கேஜி படிக்கும் போது நடந்த ஆண்டு விழா மேடை. மழலைக்குரலில் நான் பாடிய ரைம்ஸ் என்னால் மறக்க முடியாதது. அன்று முதல் அடுத்தத்த வகுப்புகளில் ஒவ்வொரு ப்ரேயர் மீட்டிங்கிலும் எனது பங்களிப்பு கட்டாயம் இடம் பெறும். 5ம் வகுப்பு முடித்து 6ம் வகுப்பு தூய சவேரியார் பள்ளியில் சேர்ந்தேன். இந்தப் பள்ளி கண்டிப்புக்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர் போனது என்ற எச்சரிப்பிற்கு மத்தியில் பயந்து கொண்டு தான் இந்தப் பள்ளியில் சேர்ந்தேன். இதற்கு முன்பு படித்த பள்ளியில் ஆசிரியைகள் தான் உண்டு. மேலும் அவர்களுக்கு நான் செல்லப்பிள்ளை. என்ன சேட்டை செய்தாலும் என்னை அடிக்கமாட்டார்கள். ஆனால் புதிதாய் நுழையப்போகும் சவேரியார் பள்ளியில் அனைவரும் ஆசிரியர்கள். அதாவது ஆண் வாத்தியார்கள். மேலும் அவர்கள் பிரம்பை கையோடு வைத்திருப்பார்கள் என்ற கூடுதல் செய்தி பீதியைக் கிளப்பியது. ஆரம்பத்தில் மனதில் பயம். பயம் மட்டுமே.
ஒருமுறை 6வது வகுப்பு தமிழாசிரியர் உயர்திரு ஜெரோம் அவர்கள் என்னை பாடத்தை வாசிக்கச் சொன்னார். வாசிக்கும் இடைவெளியில் அவர் என்ன நினைத்தாரோ என்னவோ என்னை தனியாக ஆசிரியர் அறைக்கு வருமாறு சொல்லிவிட்டு இன்னொரு மாணவனை வாசிக்கச் சொல்லி விட்டார். அப்போது நான் அடைந்த பீதியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. " மவனே செத்த நீ. உன்ன அடி வெளுக்கப் போறாரு பாரு. அப்பாவ கூட்டிட்டு வரச் சொல்லப் போறாரு. நீ செத்த" என்று சக மாணவர்கள் தூபம் போட பள்ளியை விட்டு ஓடி விடலாமா என்று தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து பியூன் வந்து "யாருல இங்க அருணாசலம். உன்னய ஜெரோம் சார் கூப்டாராமே. நீயா வரமாட்டியோ. உங்கள கூப்ட நான் தான் வரணுமோ. வால எங்கூட" என்று இழுத்துக் கொண்டு போகாத குறையாக கூட்டிக் கொண்டு போனார். பயத்தில் நான் மூச்சடைத்துப் போனேன். உள்ளே நுழைந்த போது அறை முழுவதும் ஆசிரியர்கள். என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள். ஜெரோம் சார் கம்பீரமாக தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். எனக்கு ஒன்றும் ஓட வில்லை. என்னை ஒரு ஆசிரியரிடம் காண்பித்து "சார் அந்தப் பய இவன் தான் சார்" என்றார். அந்தக் கணம் உணமையிலேயே செத்துப் போனேன். அவர் காட்டிய ஆசிரியர் என் தோளில் கையைப் போட்டு "நாளைக்கு பிரேயர் மீட்டிங்ல உறுதி மொழி வாசிப்பியா?" என்று கேட்டார். நான் "ம்ம்ம்ம்ம்" என்று பயத்தில் தலையை மட்டும் ஆட்டினேன். உடனே அவரிடம் "உங்க பேரு என்ன சார்?" என்று கேட்டது தான் தாமதம். "நானே இன்னும் உன் பேர் தெரிஞ்சிக்கல அதுக்குள்ள வாத்தியார் கிட்டயே பேரு கேக்குற அளவுக்கு வளர்ந்துட்டியோ. நீ பெரிய ஆளா வருவடா" என்று சிரித்துக் கொண்டே "என் பேரு அலங்காரராஜ். உன் பேரு என்ன?" என்று கேட்டார். "அருணாசலம்" என்றேன். "சரி போ. நாளைக்கு காலைல உன் கையேட எடுத்துட்டு சீக்கிரம் ஸ்டேஜ் பக்கம் வந்துடணும்" என்று சொல்லி அனுப்பினார்.
அவர் என்னிடம் பேசிய விதம் ஆசிரியர்கள் மீது நான் வைத்திருந்த வெற்று பயத்தை உடைத்து நம்பிக்கையை விதைக்க ஆரம்பித்தது. அலங்காரராஜ் சார். மனத்தில் குறித்துக் கொண்டேன். பின்னாட்களில் பள்ளியில் நான் அதிகம் சொல்லப் போகும் பெயராக அவரின் பெயர் இருக்கப் போகிறது என்பதை அறியாமல்...........
சொன்னபடி ப்ரேயர் கூட்டத்தில் நான் வாசித்த தேசிய உறுதி மொழி பின்பு முக்கியமான விழாக்களில் வரவேற்புரையாக மாறியது. பின் ஒரு நாள் சிறப்புரையாகக் கூட மாறியது. எந்த பள்ளி விழாக்களிலும் என் உரை இல்லாமல் இருக்காதென்ற அளவிற்கு என்னை அவரும் பிற ஆசிரியர்களும் மாற்றினார்கள். மேலும் பிற பள்ளிகளில் நடக்கும் போட்டிகளுக்கு என்னை அனுப்பி வைத்தனர். பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, நாடகப்போட்டி, வினாடிவினா, நடனப்போட்டி, பாட்டுப்போட்டி என்று எந்தப்போட்டியையும் நான் விட்டுவைக்கவில்லை. பரிசுகள் குவிய ஆரம்பித்தன. வட்டார அளவில் இல்லாமல் மாவட்ட அளவில் ஏன் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கூட பங்கேற்க வைத்து பலமுறை முதல் பரிசு பெற வைத்தது அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், அன்பும். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாது என் தலைமையாசிரியர் கூட எனக்கு நல்ல நண்பராக மாறிப்போனார். பல மாணவர்களே அவரது அறைக்குப் போக தயங்கிய வேளையில் அவரது அறையில் இருக்கும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வகுப்பில் ஸ்கோர் சொல்கிற அளவுக்கு அருட்தந்தைக்கு நெருக்கமாகிப் போனேன்.
அப்போது பள்ளியில் இயங்கும் என்சிசி அதாவது தேசிய மாணவர் படைக்கு பொறுப்பாளர் உயர்திரு அலங்காரராஜ் சார் தான். அவரின் சிறந்த மாணவனான என்னை அவர் 7ம் வகுப்பிலேயே அதில் சேர்த்துவிட்டார். அதிலும் என்னை அவர் சிறந்த மாணவராக விளங்கச் செய்தார். என்சிசி மாணவர்களுக்கிடையே துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் முதலிடம். இரண்டு முறை தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும் என்சிசி முகாம் அங்கு நடைபெற்ற நடைபயிற்சியி்ல் தேசிய அளவில் முதலிடம் போன்ற என் கனவிலும் எட்டிப் பார்க்க முடியாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். இப்போது நான் பள்ளியில் சென்றாலுங்கூட என்சிசி வகுப்பு நடக்கையில் நான் ஹிந்தியில் commamd குடுக்கும் சத்தம் இன்னும் என் காதில் கேட்கும்.
பள்ளி ஆண்டுவிழாவில் நடக்கும் நாடகத்தைப் பொறுத்தமட்டில் எங்கள் பள்ளியின் வேதியில் ஆசிரியர் உயர் திரு சந்திரசேகரின் நாடகங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. ஒலி ஒளி நாடகங்களை நவீன வடிவில் அமைத்து ஒரு சினிமா பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விடுவார். மிகச் சிறந்த நாடக இயக்குநர். அவரின் நாடகங்களில் பெரும்பாலும் எனக்கு ஹீரோயின் ரோல் தான். நான் 9ம் வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற ஆண்டுவிழாவின் நாடகத்தை என்னால் மறக்கமுடியாது. அதில் நான் ஹீரோயின். பிற மாணவர்கள் பயந்து நடுங்கும் எங்கள் தலைமை ஆசிரியர் அருட்தந்தை தான் ஹீரோ. அவரோடு டூயட் பாடி, ஆடியதை நினைத்தால் இப்போது கூட எனக்கு நெகழ்வாகத்தான் இருக்கிறது.
பதினொன்றாம் வகுப்பு சேர்கையில் பள்ளிக்கட்டணம் கட்ட காசில்லமால் தவிக்கையில் என் பள்ளிக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக் கொண்டு என் கல்வியை வாழ வைத்தவர்கள் என் ஆசிரியர்கள். வாழ்க்கையில் சோகம் தலைகாட்டும் போதெல்லாம், தோல்விகள் கண்டு துவளும் போதெல்லாம், வாழ்வின் அர்த்தங்கள் தொலைந்து போய் பாதைகள் மாறும் போதெல்லாம் எனக்கு நல்ல வழிகாட்டிகளாக, வடிகால்களாக இன்று வரையிலும் உயர்திரு சேசு ராசு ஐயா முதற்கொண்டு பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். இப்போது என்னால் அது முடியாதெனினும் ஒரு நல்ல மனிதனாக, அநீதி கண்டு கோபப்படுபவனாக, இயலாதவர்களைக் கண்டு இரங்குபவனாக இவர்களால் தான் மாறினேன் என்று சொல்வதை விட வேறு என்ன கைமாறு சிறந்ததாக இருக்கமுடியும்? வேறு எதை என்னால் செய்யமுடியும்?
தலைமைப்பண்பு சம்பந்தப்பட்ட இயக்கத்தில் என்னை இணைத்து விட்டு என் ஆளுமையை இன்னும் கூர்மையாக்கியவர் ஆசிரியர் உயர்திரு நேவிஸ் அவர்கள். எனது திறமை என்னோடு நின்று விடாமல் எம் பள்ளியோடு நின்று விடாமல் வளர்த்தெடுத்த பிதாமகன்களில் அவரும் முக்கியமான ஒருவர்.
5 மாதங்களுக்கு முன்பு நள்ளிரவில் என் நண்பனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. "டேய் நம்ம நேவிஸ் சார் வட நாட்டுக்கு போயிருந்தபோ நெஞ்சு வலி வந்து செத்துட்டாருடா. பாடி வந்துட்டு இருக்கு. நாளைக்கி நாம கண்டிப்பா போவோம்டா" என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டான். என் இருப்பு கொள்ளவில்லை. என்னமோ ஆகி அந்த நள்ளிரவில் வாய் விட்டு அழவே ஆரம்பித்து விட்டேன். என் தந்தை பதறி எழுந்திரித்து விசயத்தை கேட்டு என்னை அவரின் வீட்டிற்கு உடனே அனுப்பி வைத்தார். அங்கு சென்றதும் என் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கூடி இருந்தார்கள். அடுத்த நாள் நல்லடக்கம் முடியும் வரை கூடவே இருந்தேன். என்னால் அவ்வளவு தானே செய்ய முடியும் அப்போது. ஒட்டு மொத்த பள்ளியே அவரை கண்ணீரோடு அனுப்பி வைத்தார்கள். பின் 2 மாதங்களுக்கு முன்பு வெகுநாள் கழித்து என் பள்ளிக்கு சென்றேன். என் நேவிஸ் சார் சிரித்த முகமும், நடையும் நினைவிற்கு வந்தது, தூரத்தில் ஒரு உருவம் என்னைப் பார்த்து கையாட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டே வந்தது. நிச்சயம் அது நேவிஸ் சாராகத்தான் இருக்க முடியும்............
என்றும் புன்னகையுடன்
வெ. அருண் பாரதி
