சனி, 28 ஜனவரி, 2012

வீடு..........



"நா சாகுறதுக்குள்ள ஒரு வீடு கட்டிடணும் தம்பி. எல்லாம் விலையேறிப் போன இந்த கலிகாலத்துல இது முடியுமான்னு தெரியல. விக்கிற விலையில சம்சாரிங்க வாழ முடியுமான்னு தெரியல. நம்ம காலத்துலயே இப்படின்னா நம்ம பேரனுங்க காலத்துல..... யப்பா நெனச்சாலே இப்பவே செத்துரலாம்னு தோணுது. இருந்தாலும் சாகுறதுக்குள்ள ஒரு வீடு கட்டிடணும் தம்பி" இப்படி எனக்குத் தெரிந்த ராமையா தாத்தா பக்கத்து வீட்டு பெரியவரிடம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சொந்த வீட்டில் வாழ்வதே ஒரு கெளரவம் தான். வீட்டு வாடகை என்ற பிரச்சனை இல்லை. கரண்ட் பில் யுனிட்டை அதிகமாக்கி வீட்டு சொந்தக்காரர்கள் வசூலிப்பதே இல்லை. நினைத்த மாதிரி அறைகளை மாற்றி அமைக்கலாம். அதையும் மீறி மனதிற்குப் புலப்படாத ஏதோ ஒரு சந்தோசம் சொந்த வீட்டில் தான் அமைகிறது.



"ஆணி அடிக்கலாம்,
நினைத்ததை மாற்றி அமைக்கலாம்,
எல்லா சந்தோசங்களை
நிரப்பிக் கொண்டு
தினமும் வருகிறது
சொந்தவீடுக் கனவு.
வாடகை வீட்டில்
வசிக்கலாம்,
ஆனால் வாழமுடியாது"



இப்படியான ஒரு கவிதை அத்தனை வாடகை வீடுகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் பொருந்தும். காலச்சக்கரம் சுழல்கிற வேகத்தில், காந்தி சிரிக்கின்ற அந்த வண்ணக் காகிதங்களை சம்பாதிப்பதற்குள் வாழும் காந்திகள் அழுதே விடுகின்றனர்.



சொந்த வீடு கட்டும் ஆசையில் கடன் மேல் கடன் வாங்கி, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், வீடும் கட்ட முடியாமல் வாழ்வதற்கு வழியுமில்லாமல் கடைசியில் நிராசைகள் நிரம்பியதன் அடையாளமாய் என் நண்பனின் தந்தை தூக்கில் தொங்கிய காட்சி என் கனவுகளில் அடிக்கடி வந்து தூக்கத்தை தூக்கில் ஏற்றி விடுகிறது.



வாழ்க்கை ஒரு பந்தயம், நீ முந்தாவிட்டால் உன்னை ஏறி மிதித்து பலர் முந்தி விடுவார்கள் என்ற விருமாண்டி சந்தானத்தின் குரல்கள் தான் திசைகள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சமன் பாரிவேந்தனை பார்க்கவே முடியவில்லை. "தினசரி குடும்பத்த ஓட்டுறதுக்கே இங்க நரகவேதனையா இருக்கு. இதுல உனக்கு சொந்த வீடு கட்டணும்னு ஆச வேற இருக்கா. போ... உங்க அப்பன் கிட்ட போய் அத கேளு" என்று கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மெகா சீரியல்களின் விளம்பர இடைவேளையில் வரும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மனைவிமார்களால் ஏக்கத்தோடு மட்டுமே பார்க்க முடிகின்றன.



"மாசம் ஆயிரம் ரூவா மட்டும் 5 வருசத்துக்கு கட்டுனா போதும் சார், நான்குநேரி டைட்டல் பார்க் பக்கத்துல 3 செண்ட் இடம் உங்களுக்குத்தான். ஸ்கூலு, காலேஜ், மார்க்கெட்டுன்னு எல்லாம் பக்கத்துல பக்கத்துல வந்துரப்போகுது. சூப்பர் ஃஆபர் சார். அடுத்த 2 மாசத்துல இருந்து ரேட் எகிறுடும்" என்று நண்பர்கள் என்னைத் துளைக்கையில் காலியாகக் கிடக்கும் பர்சும், பளபளக்கும் எம்டி பேலன்ஸ் ஏடிஎம் கார்டும் என்னைப் பார்த்து நக்கலாய் சிரிக்கின்றன. நான்குநேரியும் திருநெல்வேலி புது பஸ்ஸ்டாண்டும் மிகவும் பக்கத்தில் இருக்கிறது என்று ரியல் எஸ்டேட்காரர்களின் மேப் மட்டுமே சொல்கிறது.



திருச்செந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் ஸ்டாப்பைத் தாண்டுகையில் வலது பக்கம் தூரத்தில் இருக்கும் வீடுகளைப் பார்த்து என் தந்தை கண்ணீர் வடிக்கும் ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து கூடு அளவுக்கு 8 க்கு 10 த்தில் ஒரு சின்ன வீடு கட்டி, அவசர காலத்தில் அதை விற்க வேண்டிய நிலைமை. பத்திரத்தோடு வீடும் கைமாறிப் போன சமயத்தில் என் தந்தை மனதிற்குள்ளாகவே தேம்பி தேம்பி அழுததை எந்த இலக்கியங்களில் பார்த்திட முடியும்? இந்த எளவுப் பொறப்புக்கு குருவிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.



எங்கள் பகுதியில் இருக்கும் பெரும்பாலான வீடுகளுக்கு ஊரில் இருக்கும் நான்கு பேர் மட்டும் சொந்தக்காரர்கள். அதில் ஒருவருக்கு ஒரு மனைவி தான் எனினும் அந்த மனைவிக்கு நான்கு பெயர்கள். ஒவ்வொரு பெயரிலும் பல வீடுகள். அவ்வீடுகளை வாடகைக்கு விட்டு "சமூக" சேவை செய்து வருகிறார். ஒன்றாம் தேதி ஆனால் போதும் அவர் ஒவ்வொரு வீடாகச் சென்று வாடகை வசூலிப்பார். தரமுடியாதவர்களுக்கு வசவுகள் பதிலாய்க் கிடைக்கும். உலகப்பொருளாதாரம் நேரடியாக அவரைத்தான் முதலில் தாக்குவதைப் போல வருடாவருடம் சுளையாக 500 ரூபாய் வரை வாடகை ஏற்றி விடுவது அவரது வழக்கம். கேட்டால் "என்ன பண்றது மனுசனுக்கு வயிறுன்னு ஒண்ணு இருக்கே. நானும் சாப்பிடணுமே" என்ற நக்கலாய் பதில் வரும் 8 மாத கர்ப்பிணியைப் போன்ற வயிறு வளர்த்த அவரிடமிருந்து.



எனது உறவினர் ஒருவரும் அவரது வீட்டில் தான் வாடகைக்கு இருக்கிறார். அவரது மனைவி ஒருமுறை என் அம்மாவிடம் வந்து அழுது கொண்டிருந்தது என் காதில் கேட்டது. "பாவிப்பய ஒரு சின்ன ரூம், ஒரு கிச்சனுக்கு ரெண்டாயிரம் ரூவா வாடக வாங்குறான். அடுத்த மாசத்துல இருந்து 300 ரூவா கூட்டப்போறானாம். கட்டமுடியலன்னா வீட்ட விட்டு காலி பண்ணச் சொல்றான். அவன் வெளங்குவானா" என்று திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு நான் "அம்மா நீங்க ஏன் இப்படி வந்து அழுறீங்க தமிழ்நாடு வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு. அதுல இவ்வளவு தான் வாடக வசூலிக்கணும்னு வரம்பு இருக்கு. யாரும் அளவுக்கு அதிகமாக வாடகை வசூல் பண்ண முடியாது" என்றேன். அதற்கு அவர்கள் "சட்டம் எல்லாம் நல்லாதான் இருக்கு. நம்மள மாதிரி ஏழைகளுக்கு எங்க அது உதவப் போகுது? சட்டம் இருக்குன்னு கம்ப்ளைண்ட் குடுத்தா வர்ற ஆபிசர் எப்படியும் அவன்ட்ட காசு வாங்கிட்டு போயிடுவான். அப்புறம் யாரு தம்பி எங்களுக்கு வீடு குடுப்பா?" என்றார் விரக்தியுடன்.


உண்மைதான் சட்டங்கள் பணக்காரர்களுக்கு பூங்கொத்தையும், ஏழைகளுக்கு மலர் வளையத்தையும் தான் வைக்கின்றன.


(தொடரும்........)

என்றும் புன்னகையுடன்
வெ.அருண் பாரதி