புதன், 22 பிப்ரவரி, 2012

ஒரு எழுத்தாளனின் கதை


         அந்த நம்பரில் இருந்து இவ்வளவு போன் வந்து என்னை நச்சரிக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவரை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. "சார் பார்த்து செய்யுங்க சார், அந்த குரூப் பத்திரிக்கைகளுக்குத்தான் குடுப்பீங்களா எங்கள மாதிரி ஆட்களுக்கு குடுக்கமாட்டீங்களா? நாங்க உங்கள மாதிரி பெரிய பெரிய எழுத்தாளர்களோட படைப்புக்கள போட்டு பிசினஸ்ஸ மட்டும் டெவலப் பண்ணல சார். சர்வீஸ் மைண்ட்ல தான் பண்றோம். உங்க கத எங்க பத்திரிக்கையில வந்திச்சின்னா சேல்ஸ் கொஞ்சம் கூடும். எங்க சர்வீஸ்க்கு அது கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும். அவங்க எவ்வளவு பேமண்ட் தர்றாங்களோ அதையே முதலாளிகிட்ட கேட்டு வாங்கி குடுக்குறது என்னோட பொறுப்பு" என்று கெஞ்சும் குரலில் கேட்டார். "அரைமணி நேரம் கழிச்சு பதில் சொல்றேன்" என்றதும் விடாமல் "அரைமணி நேரம் கழிச்சி நானே கால் பண்றேன் சார்" என்றார். 

      
      நேரம் போனதே தெரியவில்லை. சொல்லியபடி சரியாக அரை மணிநேரத்தில் முதல் கால் வந்தது. நான் கவனிக்கவில்லை. மதிய உணவிற்காக அறையில் இருந்தேன். இரண்டு, மூன்று என்று 5 நிமிடங்களுக்குள் மறுபடியும், மறுபடியும் போன் வரவே  என் மனைவி எரிச்சலுடன் போனை எடுத்து "அவரு சாப்பிட்டுட்டு இருக்காருங்க. அவர்கிட்ட என்ன சொல்றதா இருந்தாலும் கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணுங்க" என்று எதிர்முனையில் இருப்பவரின் பதிலுக்குக் காத்திராமல் தொடர்பை துண்டித்து விட்டாள். 


    பொதுவாக அவளுக்கு நான் சாப்பிடும் போது யாரும் என்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பாள். "சாப்பிடுறப்போ சாப்பாட்டுல கவனம் இருந்தாத்தானே உடம்புல ஒட்டும். போன் பேசிக்கிட்டே சாப்பிட்டா சாப்பிட்ட மாதிரி இருக்குமா என்ன?. ம்ஹ்ம்ம்ம்ம்.... எப்ப பாருங்க எதையாவது எழுதிட்டே இருக்குறது. இல்லன்னா யார் கூடயாவது போன்ல கத அடிச்சிட்டே இருக்குறது. என்னத்த தான் இந்த போன்ல பேசிக்கிறாங்களோ. மந்திரிச்சி விட்ட மாதிரி யாரப் பார்த்தாலும், எப்பப் பார்த்தாலும் காதுல இத வச்சிகிட்டே திரியுறாங்க. மெய் மறந்து பேசுறாங்க. பேசுறப்போ தன்ன சுத்தி என்ன நடக்குறதுன்னே தெரியிறது இல்ல. இதனாலேயே என்னல்லாமோ நடக்குதுன்னு பேப்பர்ல படிக்கிறப்போ கொஞ்சம் பதபதப்பா தான் இருக்கு. இப்ப எந்த இளசுகளப் பாத்தாலும் ஒண்ணுக்கு இரண்டு செல்போன் வச்சிகிட்டு திரியுறாங்க. எத்தன தான் வச்சிருந்தாலும் ஒரே நேரத்துல ஒரு செல்போன்ல தானே பேச முடியும். இந்த எழவக் கண்டிப்பிடிச்சவன் எந்த நேரத்துல இத கண்டுபிடிச்சானோ" புலம்பல்கள் தொடரும். 


           என் மனைவி அப்படித்தான். சுத்த பட்டிக்காட்டான் வகையறா. கிராமத்தில் இயந்திரங்களின் ஆதிக்கத்தையோ, தேவையையோ சிறுவயது முதல் அனுபவிக்காமல் வளர்ந்ததால் அவளுக்கு இந்த சொகுசுப் பொருட்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜியும் கூட. 30 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளும்போது எப்படி இருந்தாளோ இப்பவும் அப்படியே தான் இருக்கிறாள். காலமும், உலகமும் தான் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய நானும் ஆரம்பத்தில் இந்த மாதிரியான வசதிகளை விரும்பாமல், அண்டாமல் தான் இருந்தேன். நண்பர்கள் தான் "என்ன சார்வாள் ஒரு செல்போன் வாங்கி நம்பர் குடுத்திங்கன்னா வசதியா இருக்கும். யார் யாரோ செல்போன் வச்சிருக்காங்க. நீங்க என்னடான்னா......" என்று சிபாரிசு அதிகமானதால் வேறு வழியின்றி அதை வாங்கி இப்போது அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். செல்போன் இருப்பதால் தானே நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் போன் செய்து காரசார எழுத்துலக சர்ச்சைகளைப் பற்றி விவாதிக்க முடிகிறது. எது எப்படியாக இருந்தாலும் ஊர், உலகத்துக்கு தான் நான் எழுத்தாளனே தவிர அவளுக்கு கணவன் தானே. 


      என்னுடைய கதைகள், புகைப்படங்கள், பேட்டிக்கள் பத்திரிக்கைகளில் வரும் போது அதை உள்ளுக்குள் பெருமையாக எடுத்துக் கொண்டாலும் எனது உடல்நிலை குறித்து எப்போதும் கவலை தான் அவளுக்கு. ஆனால் இந்த உடல்நிலை விசயத்தில் மட்டும் அவளோடு என்னால் ஒத்துப்போகவே முடிவதில்லை. கூட்டங்கள் முடித்து வீட்டுக்கு தாமதமாகச் செல்வது, பெரும்பாலும் வெளியிலேயே சாப்பிடுவது. சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்த புகைக்கும் பழக்கம் வேறு. இது மட்டுமின்றி பெரும்பாலும் எழுதுவதற்கு தனிமையையும், இரவையும் தான் நான் தேர்ந்தெடுப்பேன். எழுதவேண்டும் சிந்தனை வந்துவிட்டால் எழுதிக் கொண்டே இருக்க விரும்புபவன் நான். சிறுகதை என்று எழுத தொடங்கி விட்டால் எனக்கு ஒரே அமர்வில், ஒரே மூச்சில் அதை எழுதி முடித்தாக வேண்டும். இல்லையெனில் அக்கதையை என்னால்  முடிக்கவே முடியாது. அந்த நேரத்திலிருந்த மூட் பின்னால் செட் ஆகாது. பல கதைகளை இப்படி எழுதி முடிக்க முடியாமல் பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கின்றன. இதனாலேயே எழுத ஆரம்பித்து விட்டால் உணவு, உறக்கம் எதையும் பொருட்படுத்தாமலேயே எழுதிக் கொண்டிருப்பேன். இதுவே வழக்கமாகிப் போனதாலோ என்னவோ என் மனைவிக்கு நான் எழுதுவது பெரும்பாலும் பிடிக்காது. அப்படி எழுதத் தொடங்கினாலும் சாப்பிட்டுட்டு எழுதுங்க என்று கட்டாயபடுத்துவாள். மறுத்தால் "இந்த கத, கவித எல்லாம் எழுதி என்னத்த கண்டீங்க. ஏற்கனவே உடம்புல 4 தடவை கத்தி வச்சி அறுத்து தச்சி போட்டாச்சி. டாக்டர் நல்ல ரெஸ்ட் எடுக்க சொன்னதுனால தானே வி.ஆர்.எஸ் வாங்கி வீட்ல ரெஸ்ட் எடுக்குறீங்க. இந்த நேரத்துலயும் சும்மா இருக்க மாட்டீங்களா? நமக்கு இப்ப என்ன குறை இருக்கு. இப்படி அன்ன, ஆகாரம் இல்லாம கடந்து அல்லாடணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன? நீங்க எழுதுறதுனால தான் தினமும் பொழுது விடியுதுன்னு யாராச்சும் சொன்னாங்களா? நீங்க தான் இப்படி கோட்டி பிடிச்சி அலையிறீங்கன்னு பார்த்தா உங்ககூட சேர்ந்த எல்லாரும் அப்படி தான் இருக்காங்க போல. அதுலயும் அந்த ஜோல்னா பை வச்சவரு வந்துட்டார்ன்னா போதுமே நேரம், காலம் தெரியாம பேசுவீங்க. இந்த கோட்டிக்காரன்கள எல்லாம் முதல்ல நாடு கடத்தணும்" என்று ஒரே மூச்சில் ஒட்டு மொத்த எழுத்தாளர்களையும் காலி செய்து விடுவாள். அதனாலேயே பெரும்பாலும் சாப்பிடும் போது வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. செல் போனைக்கூட டைனிங் ஹால்க்குள் கொண்டு வரமாட்டேன். இந்த விசயம் என்னிடமிருந்து வழக்கமாக படைப்புகளை வாங்கிக் கொள்ளும் என் இலக்கிய உலக நண்பர்களுக்குத் தெரியும். அதனாலேயே இந்த நேரத்தில் என்னை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டார்கள். பாவம் அந்த ரகசியம் எல்லாம் இவருக்கு தெரியவில்லை. அதான் போன் செய்து என் மனைவியிடம் அர்ச்சனை வாங்கிக் கொண்டார். 


    ஒரு வழியாக சாப்பிடும் வைபவம் முடிந்தது. இப்பவாவது அந்த பத்திரிக்கைக்காரரிடம் பேச வேண்டும். இதற்குப் பின்பும் அவரை காக்க வைப்பது நல்லதல்ல. செல்போனில் டயல் செய்தேன். 


"தம்பி, சாப்பிட்டுட்டு இருந்ததுனால போன் அட்டண்ட் பண்ண முடியல. கோவிச்சுக்காதீங்க" 


"பரவாயில்ல சார். அம்மா ரொம்ப கோவமா இருக்காங்களோ? என்னால உங்களுக்கு எதுவும் திட்டு கிடைக்கலயே?"


"அத விடுங்க தம்பி. அவங்க அப்படித்தான். நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க..... ஆமா நீங்க நடத்துற பத்திரிக்கை பேரு என்னன்னு சொன்னீங்கன்னு மறந்துட்டேன்"


"...........", 


"ம்ம்ம்ம்ம். ரொம்ப வருசமா இந்த பத்திரிக்கை போய்ட்டு இருக்கே. ஆனா என்ன நீங்க இப்ப தான் காண்டாக்ட் பண்றீங்க போல......."


"ஆமா சார். இப்ப பத்திரிக்கை குழுவ மாத்தி அமைச்சிருக்கோம். நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துருக்கோம். இதுக்கு முன்னாடி அந்த செக்மண்ட் எழுதிட்டு இருந்த அந்த எழுத்தாளருக்கும், எங்க முதலாளிக்கும் முட்டிக்கிச்சின்னு எல்லாருக்கும் தெரியும். அவர விட பெஸ்ட்டா இப்ப யாரு இருக்காங்கன்னு ஐயா கேட்டதுக்கு உங்க பேரு தான் எல்லாரும் சொன்னாங்க. நீங்களும் இந்த மாதிரி விசயங்கள தான் எழுதிட்டு வாரீங்க. நானும் உங்க பேர தான் சொன்னேன். நீங்க எங்க பத்திரிக்கையில எழுதுனா நல்லா இருக்கும்"


"சரி தம்பி. கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒரு மேட்டர எழுத ஆரம்பிச்சேன். கிரைம் நாவல் ஒண்ணு. எழுத முடியாம அப்படியே இருக்கு. எழுதுனது வரைக்கும் அனுப்புறேன். உங்க ஐயா கிட்ட காட்டி ஓகேன்னா தொடர்ச்சியா எழுத ஆரம்பிச்சிடலாம். வந்து வாங்கிக்கிறீங்களா?"


"சரிங்க சார். ரொம்ப சந்தோசம்"


சொன்னபடி வந்து வாங்கிச் சென்று 4 நாட்களுக்குப் பின் போன் செய்தார்.


"சார். உங்க கதைய ஐயா கிட்ட காட்டுனேன். பூரிச்சி போய்ட்டாரு. உடனே இந்த வாரமே விளம்பரம் குடுத்துடலாம்னு சொல்லிட்டாரு. உங்க அக்கவுண்ட் நம்பர அனுப்பி வைங்க சார். உடனே அமவுண்ட் போட சொல்லிடுறேன். என்ன கத சார் இது. ஆரம்பமே அமர்க்களப்படுது. கதை ஓட்டத்த கணிக்கவே முடியல சார். உங்க ப்ராஜெக்ட்லயே இது கிளாசிக்கல்னு தைரியமா சொல்லலாம் சார். நிஜமாவே செம ஹிட் அடிக்கும் சார். அந்த போலிஸ் இன்ஸ்பெக்டர துரத்திட்டு போற கார் யாரோடதுன்னு சத்தியமா கண்டுபிடிக்கவே முடியல சார். ஆனா வாசகர்கள் எதிர்பார்க்குற ஆளா அந்த கார்ல இருக்குறவன் இருக்க மாட்டான்னு தான் எனக்கு தோணுது சார். நீங்க அடுத்த செட்ட முடிச்சதும் சொல்லுங்க சார். வந்து வாங்கிக்கிறேன். எனக்கே அடுத்த பார்ட் என்னன்னு தெரியாம மண்ட காயுது. கொஞ்சம் சீக்கிரமாவே எழுதுங்க சார்" வார்த்தைகளிலும், பேச்சுத் தொனியிலும் ஆர்வம் தெரிந்தது அவரிடமிருந்து. 


"தம்பி அனுப்பிடலாம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு உண்மைய சொல்லியாகணும். இது நா ஆரம்ப காலத்துல எழுதி ஏற்கனவே உங்க பத்திரிக்கைக்கு அனுப்புன கத தான். கதைய திருத்தி அனுப்புங்கன்னு வாசிக்கிற நடையில இல்லன்னு உங்க பத்திரிக்கையில இருந்து திருப்பி அனுப்பிட்டாங்க. அந்த கதைய தான் கொஞ்சம் கூட திருத்தாம இப்ப அனுப்புனேன். இது நல்ல கத தான்னு இப்ப தான் உங்க ஐயாவுக்கு தெரியுது"
அந்த நண்பர் இளிப்பது தெரிந்தது.  


என்றும் புன்னகையுடன் 
அருண் பாரதி வெ