புதன், 27 ஏப்ரல், 2011

தமிழக முதல்வருக்கு சில கேள்விகள்.........


      நேற்று தமிழக அரசின் மீது குறை கூறுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று நீங்கள் வழக்கு தொடுத்ததாக கேள்விப்பட்டேன். மிக்க சந்தோசம். உங்கள் முன் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன். நானும் இந்த தமிழ்நாட்டில் பிறந்து இந்தியக்குடிமகன் என்று சான்றிதழ் பெற்று இருப்பதாலும், எனக்கு ஓட்டுரிமை இருப்பதாலும் கேள்வி கேட்க உரிமை இருப்பதாகக் கருதுகிறேன்,




1. மத்திய அரசுக்கு மக்களுக்காக சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சர்களை தெரிவு செய்யும் கடமை உள்ள நீங்கள் எதன் அடிப்படையில் மத்திய தொலை தொடர்பு துறை தான் எங்களுக்கு வேண்டும் என்றும் ஆண்டிமுத்து ராசாவை தான் அதில் அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்? ஒரு தவறான துறை சார்ந்த அறிவு இல்லாத ஒரு நபரை நியமிக்க வைத்ததன் மூலம் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை தவறிவீட்டீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?




2. எந்தத் திருடனும் தனக்காக மட்டும் திருடுவதில்லை. தன் குடும்பத்திற்காகவும் சேர்த்தே திருடுகிறான். அது போல தற்போது மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள ஸ்பெக்டரம் முறைகேட்டின் இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தங்கள் அன்புமகள் கனி மொழி அவர்களின் பெயரும் இடம் பெற்று குற்றச் சதி புரிந்ததாக வழக்கு உள்ளது. உங்கள் மகள் தவறிழைத்தால் அதில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறதா, இல்லையா? கலைஞர் டிவியில் வெறும் 20 சதவீதப் பங்குகள் மட்டுமே வைத்துள்ள உங்கள் மகள் மாட்டிக் கொள்ளும் போது 60 சதம் பங்குகள் வைத்திருக்கின்ற தயாளு அம்மாளின் பெயர் இடம் பெறாதது குறித்து உங்கள் கருத்து என்ன?




3. தமிழினத் தலைவர் என்றும், தமிழர்களை கரை சேர்க்கும் கட்டுமரம் என்றும் உங்களை நீங்கள் புகழ்ந்து கொள்கிறீர்கள். ஆனால் தமிழ் மீனவர்கள் பல பேர் இதுவரை இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போது அதைக் கண்டும் காணாது இருக்கின்ற மத்திய அரசை வெறும் கடிதங்களால் மட்டுமே எச்சரித்து இருக்கிறீர்கள் (சம்பிரதாயத்திற்காக). மத்திய அரசுக்கு நீங்கள் அளித்திருக்கும் வாபஸை திரும்பப் பெறுவதன் மூலம் மத்திய அரசை நிர்பந்தித்து இருக்கலாமே, தமிழக முதல்வர் என்ற முறையில் அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? உங்களின் பிள்ளைகளுக்கு தமிழக மீனவர்களின் நிலைமை வந்திருந்தால் நீங்கள் இது போன்று தான் வேடிக்கை பார்ப்பீர்களா? அப்படியென்றால் குடும்பம் வேறு, ஓட்டு போட்ட தமிழக மக்கள் வேறு. அப்படித்தானே?




4. அரசுப் பொதுத்துறைகள் தனியார்களால் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகமய, தனியார்மய, தாராளமய தருணத்தில் எங்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாயை கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எப்படி நீங்கள் தாரை வார்க்கலாம்?




5. கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத்துறை உங்கள் கட்சியின் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அலட்சியப் போக்கால் ரூ37000 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. மேலும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக மாதந்தோறும் ரூ.1550 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதை நீங்கள் தடுக்க என்ன என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஒட்டு மொத்த தமிழகமே மின்சாரத் தட்டுப்பாட்டால் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற சீரான மின்சாரம் 24 மணிநேரமும் வழங்குவது அநீதியாக உங்களுக்குத் தெரியவில்லையா?




6. தானும், தன் குடும்பமும் எப்போதெல்லாம் இக்கட்டில் மாட்டிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் தன்னை சூத்திரனாக காட்டிக் கொள்ளும் நீங்கள், ஆ.ராசா மீது புகார் எழுந்த போது அவரை காப்பாற்றும் நோக்கில் அவர் தலித் என்று ஒரு பாவம் அற்ற தலித் சமூகத்தை கேவலப்படுத்திய நீங்கள் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான உமா சங்கரை பழி வாங்கும் போது அவர் ஒரு தலித் என்று தெரியவில்லையா? நீங்கள் பேசும் தலித்தியம் வெறும் அரசியலுக்கும் சுயநலத்திற்கும் தானா?




7. பாபர் மசூதிப் பிரச்சனையில் ஒரு சாரருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். நாட்டிலுள்ள ஒட்டு மொத்த சிறுபான்மை முஸ்லீம்களும் அதற்கு எதிராக நின்ற போது, முஸ்லீம்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்கிற நீங்கள் அந்த தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என்றும், அனைத்து சாரரையும் திருப்திப்படுத்தும் தீர்ப்பு என்றும் திருப்தி அடைந்தீர்களே. நீங்களா இஸ்லாமியரின் பாதுகாவலர்?




8. தமிழை வளர்க்கப்போகிறோம் என்று கூறிக் கொண்டு மக்களின் வரிப்பணமான 400 கோடியை செம்மொழி மாநாடு என்ற பெயரில் காலி செய்ய முடிந்த உங்களால் தமிழகத்தில் காலியாகக் கிடக்கின்ற தமிழ்த்துறை பேராசியர்களுக்கான 600 காலிப்பணியிடங்களை ஏன் நிரப்ப முடியவில்லை? மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடம் காலியாகவே இருக்கிறதே இதை எல்லாம் நிரப்பாமல் தமிழ் எப்படி வளரும்? வெறும் காகிதத்தில் சீனி என்று எழுதி அதை நக்கிப்பார்த்தால் இனிக்குமா?




9. சன் குழுமத்தை மிரட்டுவதற்காக நீங்கள் ஆரம்பித்த அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? மக்களின் வரிப்பணம் 150 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்யப்பட்டிருக்கிறதே. உங்களால் வெள்ளையறிக்கை விட முடியுமா?




10. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 3 விவசாயிகள் மட்டுமே பசியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தாங்கள் வெளியிட்ட அறிக்கை சொல்கிறது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய குற்றப்பதிவுகள் துறை முறையாக ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3737 விவசாயிகள் பசியால் தற்கொலை செய்திருப்பதாக உள்ளது. அப்படியெனில் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை முழுப்பூசணியை சோற்றில் மறைக்கின்ற கதை தானே?




11. நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?




12. திருச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர் பேருந்திலிருந்து ரூ5.15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட இருந்ததாக செய்திகள் வெளியாயின. இது தான் தங்கள் கட்சியின் தேர்தல் ஜனநாயகமா?




13. தேர்தல் சமயத்தில் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதிலே பெரும் பொழுதை செலவிட்டு இருக்கிறீர்கள். தங்கள் மகன் மு.க.அழகிரி அவர்கள் மேலூர் தாலுகா அம்பலக்காரன் பட்டியில் தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி சென்றதை படம் எடுத்த வீடியோகிராபரையும், மதுரை தாசில்தாரும் தேர்தல் அதிகாரியுமான காளிமுத்து அவர்கள் தாக்கப்பட்ட போது தாங்க கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.அழகிரி அவர்கைள கண்டித்தீர்களா?


தங்களின் பதில் உடனடியாகத் தேவை.
         


                                                                                                   இப்படிக்கு
                                                                             இன்னும் ஜனநாயகத்தின் மேல்                
                                                                                          நம்பிக்கை கொண்ட
                                                                                           அருண்பாரதி.வெ

4 கருத்துகள்:

  1. அன்பு நண்பர் அருண் பாரதிக்கு,
    கருத்துரை கண்டேன். மிக்க மகிழ்ச்சி.
    உங்கள் வலைதள புகைப்பட வடிவ கவிதை வரிகள்
    இதயத்தை எங்கோ நெருடுகிறது.
    உண்மையின் வலிமை அது.
    சத்தியமான வார்த்தைகள்.
    சிநேகிதம் கவிதையில் பூரித்து போனேன்.
    கிராமப்புறம் குறித்த வரிகளில்
    தொலைந்துவிட்ட அல்ல அது தவறு தொலைத்துவிட்ட
    வாழ்கையின் இனிய பக்கங்களை எங்கு சென்று வாங்க முடியும்
    என்ற அழுத்தமான உணர்வு.
    உங்களிடம் இருந்து வெளிப்படுவது
    வார்த்தைகளல்ல வாழ்க்கை.
    நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
    வாழ்த்துக்கள்.
    ரௌத்திரம் பழகு.
    நிஜம் நாம் பழக வேண்டிய ஒரே விஷயம் அதுதான்.
    நாளைய தமிழ்நாடு ஒரு குடும்ப சொத்தாக கூடாது என்றால்,
    போராளிகள் ஒன்றிணைய வேண்டும். கரம் கோர்க்க
    இங்கிருந்து ஒரு கரம் காத்திருக்கும்.
    வாழ்க பல்லாண்டு!!
    அன்புடன்
    கௌதமன் ராஜகோபால்

    பதிலளிநீக்கு
  2. Hi, I am subash, from coimbatore, tamilnadu, Your blog was so superb. i got new friend in my life... GOWTHAMAN RAJAGOPAL introduced your blogspot to me. great... r u in facebook? vnsubash@gmail.com

    பதிலளிநீக்கு