வியாழன், 11 அக்டோபர், 2012

மழைக்குறிப்புகள்

எண்ணிலடங்கா சந்தோசத்தையும்,
நடைபாதைவாசிகளின் மீதான கவலையையும்
கிளறியபடி
ஒரு சேரப் பெய்துவிட்டுப் போகிறது
மழை!!!!!
 
நனைந்து கொண்டே
குடை பிடிக்கையில்
மழலையாய் மாற்றி விடுகிறது
மழை!!!!!
 
விவசாயிக்கு சொர்க்கமென்றும்
மண் பாண்ட தொழிலாளிக்கு
நரகமென்றும்
இரு முகங்கள் காட்டுகிறாய்
எது தான் உன் நிஜ முகம்
பதில் கூறு
என் மழையே!!!!
 
பல நேரங்களில்
காதலியைப் போல
சூடு கிளப்பியும்,
சில நேரங்களில்
மனைவியைப் போல
நனைத்தும்
முத்தமிட்டுப் போகிறது
மழை.


"குடைய எடுத்துப் போடா" என்ற அம்மாவின் குரல் செவியில் நுழைந்த அளவுக்கு மனசுக்குள் நுழையாமல் போனதால் வழக்கம் போல மறதியும், கொஞ்ச தூரம் போனதும் பெருமழையும் எட்டிப் பார்த்தது. முதன்முறையாக மறதிக்காக சந்தோசப்படுகிறேன்.



"அதிகமா அரிசியைத் திங்காதடா. அப்புறம் கல்யாணம் அன்னைக்கி மழை பெய்யும்" என்று அம்மா சொன்னதற்குப் பிறகு தான் முன்பை விடவும் அரிசி திங்க அதிகமாகப் பிடிக்கிறது எனக்கு.
 
 
 

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சங்கரன்கோவில் சந்திப்பு





       நினைத்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாக எழுந்தாலும் அவசரம் அவசரமாக குளித்து, கிளம்பி எப்படியோ வண்ணார்பேட்டைக்கு காலை 05.30க்கே வந்து சேர்ந்து விட்டான் வருண். இன்னும் 5 நிமிடத்திற்குள் பஸ் கிடைத்து விட்டால் ஒன்றரை மணிநேரத்தில் சங்கரன்கோவிலுக்கு சென்று விடலாம். பஸ்ஸூம் கிடைத்தாகி விட்டது. ஏறினான். பஸ்ஸில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் கிடந்தன. உட்காருவதற்கு மட்டுமின்றி தூங்குவதற்குக் கூட தாராளமாக பஸ்ஸில் இடம் இருந்தது. வருணோடு பஸ் ஏறிய அந்த நபர் சீட்டில் துண்டை விரித்து தூங்குவதற்கு ஆயத்தமானார். ஆனால் வருணுக்கு அவளை சந்திக்கப் போகின்ற அந்த நினைவுகள் இழையோடிக் கொண்டிருந்ததால் தூக்கம் பிடிபடவில்லை. தனது செல்போனை எடுத்து அவளிடமிருந்து ஏதேனும் எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் வரவில்லை. அவளுக்கு போன் செய்து இப்ப எங்க வந்திட்டு இருக்க என்று கேட்கலாம் தான். ஆனால் அவள் தூங்கிக் கொண்டிருப்பாள். எழுப்ப மனம் வரவில்லை. வேறு வழியில்லாமல் பாடல் கேட்க ஆரம்பித்தான். இளையராஜாவின் "நீ தூங்கும் நேரத்தில்", ஏ.ஆர்.ரகுமானின் "பூங்கொடியின் புன்னகை" இதம் தந்தது. அதிலும் குறிப்பாக கற்றது தமிழ், "பறவையே எங்கு இருக்கிறாய்" அவனுக்காகவே பாடுவதாகத் தோன்றியது. அந்த அதிகாலை நேரத்தில் இளையராஜாவின் அந்த குரலை ஏகாந்தமாக உணர்ந்தான்.  அவளை சந்திக்கப் போகின்ற அந்த 3 நிமிடங்கள் அவனது ஒன்றரை மணிநேர பயணத்தில் அவனோடு பயணித்துக் கொண்டிருந்தன. சங்கரன் கோவில் பஸ்ஸ்டாண்டில் இறங்கி ஒரு சூடாக ஒரு டீ குடித்தான். சங்கரன்கோவில் பஸ்ஸ்டாண்ட் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸ்டாண்டின் பின்புறம் இருக்கும் கோமதியாபுரம் வழியாக ரயில்வே பீடர் ரோட்டைத் தொட்டு வேகமாக நடைபோட்டால் பத்து நிமிடத்திற்குள் ரயில் நிலையம் வந்து விடும். நடைபோடத்துவங்கினான். போகிற வழியில் தனது செல்போனை எடுத்து போன் செய்தான். எதிர்முனையில் அவள் தூக்கக் கலக்கத்தில் "ஸ்ரீவில்லிபுத்தூர், எஸ்4 24" என்றாள்.

"சீக்கிரம் எந்திரிச்சி பிரஷ் பண்ணு. நா சங்கரன்கோவில் வந்துட்டேன். ரயில்வே ஸ்டேசனுக்கு நடந்து வந்துட்டு இருக்கேன்" என்றான்.

"ம்ம்ம்ம் சரி" பதிலாய் வந்தது.

       கால்கள் வேகமாக நடைபோட்டதால் நினைத்ததை விட 7 நிமிடங்களிலேயே ரயில் நிலையம் வந்துவிட்டது. வாசலில் சவாரிக்காக ஆட்டோக்கள் காத்துக் கொண்டிருந்தன. உள்நுழைந்து ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். ரயில்வே ஸ்டேசனில் கூட்டம் அதிகமில்லை எனினும் ஒரு சில ஆட்கள் இருக்கத்தான் செய்தனர். சிலர் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். சிலர் மதுரை பாசஞ்சர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். பின் 5 நிமிடம் கழித்து அங்கு கேண்டினில் இருந்தவரிடம் ''பொதிகை எப்ப சார் வரும்?'' என்று கேட்டான். ''இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும்னு நெனைக்கிறேன் தம்பி'' என்றார் அந்த பெரியவர்.

     
      6 மாதங்கள் கழித்து தனது காதலி பிரியாவைப் பார்க்க போகிறோம் என்ற நினைவு அவனுக்குள் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது. தனது காதலை அவள் ஏற்றுக் கொண்டு இதோடு ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ஒரு வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை. இதுவரை 2 தடவைதான் அவளை நேரில் பார்த்திருக்கிறான். அதுவும் 5 நிமிடங்களுக்குள்ளான சந்திப்பு தான். செல்போன் மட்டும் தான் அவர்களின் காதலை வளர்த்தெடுத்துக் கொண்டிருந்தது. தினமும் காலை 7 மணிக்கு மேல் தான் எழுந்திருக்கும் பழக்கமுடைய வருணுக்கு அன்று யாரும் எழுப்பாமல் 4.30 க்கே எழுந்து குளிக்க முடிந்ததை நினைக்க ஆச்சரியமாகத்தான் இருந்தது. பிரியா வருணுக்கு சொந்தமோ,நெருங்கிப் பழகியவளோ கிடையாது. 2 வருடத்திற்கு முன்பு வரை வருண் யாரோ, பிரியா யாரோவாகத்தான் இருந்து வந்தார்கள். தனக்கு நெருங்கிய தோழியின் மாமா மகள் என்பதைத் தவிர வேறு எந்த அறிமுகமும் பிரியாவிற்கு இருக்கவில்லை. இருந்தாலும் பிரியாவின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு அவள் மேல் தனிப்பிரியம் காட்ட வைத்தது. அதே ஈர்ப்பு வருணின் மீது பிரியாவிற்கும் இருந்தது சற்றே ஆச்சரியம் தான். இருப்பினும் ஆரம்பத்தில் பிரியாவின் மீது வைத்திருந்த காதலை மனதளவில் வருண் தவிர்க்கவே முயற்சித்துக் கொண்டிருந்தான். பிரியாவின் தந்தை அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர். செங்கோட்டையிலேயே சொல்லிக் கொள்ளும் படியாக அந்தஸ்தில் உயர்ந்த குடும்பம். ஆனால் வருணின் நிலைமையோ தலைகீழ். இப்படிப்பட்ட பாகுபாடுகள்,ஏற்றத்தாழ்வுகள் காதலுக்கு தெரியுமா என்ன? ஒரு முறை பிரியாவோடு பேசுகையில்  அடக்க முடியாமல் உளறி விட்டான். பிரியாவும் அந்த வார்த்தையைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் போல. சிரித்துக் கொண்டே பச்சைக் கொடி காட்டி விட்டாள். ஆனால் ஓரிரு வருடங்களில் வருண் கஷ்டப்பட்டு படித்து பெரிய அரசாங்கப் பதவியில் அமர்வது, பின் பிரியாவின் தந்தையிடம் பேசுவது. தந்தை சரி என்று சொல்லிவிட்டால் மட்டும் திருமணம் செய்து கொள்வது என்று பிரியா நிபந்தனை வைத்தாள். வருணுக்கும் அதுவே சரி என்று பட்டதால் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இருந்தாலும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமே. படித்து பரீட்சை எழுதி அரசாங்கப் பதவியில் அமர வேண்டுமே? வாழ்க்கை என்ன சினிமாவா? ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்று விடுவதற்கு.....


        வருண் திருநெல்வேலியில் இருந்ததாலும், பிரியா சென்னையில் படித்துக் கொண்டிருந்ததாலும் இருவரும் சந்தித்துக் கொள்ளவே முடியாத நிலை. மேலும் செங்கோட்டை அல்லது தென்காசியில் பிரியாவின் தந்தையை பலரும் அறிந்து வைத்திருந்ததால் அங்கு சந்தித்துக் கொள்வதென்பது இயலாத விசயம். என்ன செய்வது என்று யோசித்து பிரியா தன் கல்லூரி விடுமுறையில் பொதிகை எக்ஸ்பிரசில் வீட்டுக்கு வரும் போது சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சந்திப்பதாக முடிவெடுத்துக் கொண்டார்கள். அதனால் தான் வருண் சங்கரன்கோவிலுக்கு வந்திருக்கிறான்.


         பொதிகை எக்ஸ்பிரஸ் காற்றை கிழித்துக் கொண்டு தூரத்தில் வருவது தெரிந்தது. எஸ்4 வந்து நிற்கும் இடம் நோக்கி நகரத் துவங்கினான். அதற்குள் எஸ்4 அவனைத்தாண்டி 100 மீ தூரம் தள்ளி நின்றது. அவனது கால்கள் வேகமெடுக்கத் துவங்கின. எஸ்4லிருந்து பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தனர். அவன் எஸ்4 ஐ அடைந்தான். வாசலருகில் பிரியா. தூக்கம் கலையாமல் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் சிரித்தான். யாராவது கவனிக்கிறார்களா என்பதை பார்த்துக் கொண்டே ''நல்லா இருக்கியா?'' என்றான்.

''ம்ம்ம்ம்ம்'' பதில் வந்தது.

''செமஸ்டர் எப்படி எழுதிருக்க?''

''ம்ம்ம்ம்ம்.....நல்லா எழுதிருக்கேன்''

பொதிகை கிளம்பத் துவங்கியது.

"வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு. முடிஞ்சா எஸ்எம்எஸ் அனுப்பு, ப்ளீஸ் இப்ப வீட்டுக்கு போற வரைக்குமாச்சும் அனுப்பு"

  
        ரயில் வேகமெடுத்து அவனுக்கும் பிரியாவிற்குமான இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றது. அவனது கண்ணை விட்டு பொதிகை மறையும் வரை நின்று வேடிக்கை பார்த்து விட்டு பின் சிரித்துக் கொண்டே சங்கரன்கோவில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறத்துவங்கினான் வருண்.


---------------------------------------------------------


    ரயில் இன்னும் கொஞ்ச நேரத்தில் சங்கரன்கோவில் சந்திப்பைத் தொட்டுவிடும். இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாலும் பிரியாவிற்கு உறக்கம் மட்டும் வரவில்லை. 5 மணிக்கே எழுந்து அமர்ந்து கொண்டாள். நேரம் போவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தாள். எதுவும் கைகூடவில்லை. வேறு வழியின்றி ஏற்கனவே படித்த சிட்னி ஷெல்டனின் நாவல் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள். நேரம் 6.30 ஆனதும் பல் துலக்கி, முகம் கழுவி, அழகாய் வகிடு எடுத்து தலை வாரினாள். கொஞ்சம் பவுடர் போட்டுக் கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் சங்கரன்கோவில் சந்திப்பை பொதிகை எக்ஸ்பிரஸ் அடைந்து விடும். மனதில் அடைபடாத ஒரு உணர்வு மின்னலாய் தோன்றி மறைந்தது. அடிக்கடி வாசலுக்கும் இருக்கைக்கும் நடைபோட்ட வண்ணம் இருந்தாள். சங்கரன்கோவில் சந்திப்பு கண்ணுக்கு தெரிந்தது. வாசலருகில் வந்து நின்று கொண்டாள். ரயில் நிற்கத் தயாராகும் முன்பே பரிட்சயமான அந்த முகத்தைத் தேடத் துவங்கினாள். எவரும் வருணின் ஜாடையில் இல்லை. 5 வருடத்தில் வருணின் முகம் மாறி இருக்கலாம் என்ற உண்மை பிரியாவிற்கு தெரிந்தாலும் அவளது மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. யாராவது தன்னை கவனிக்கிறார்களா? புன்னகைக்கிறார்களா? தன்னை நோக்கி பேச வருகிறார்களா? என்றெல்லாம் பார்த்தாள். ம்ஹூம் அவளை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய வேலைகளில் மும்மூரமாய் இருந்தனர். மூன்று நிமிடத்தில் ரயில் கிளம்பத் தொடங்கியது. பிரியாவிற்கு அழுகை வருவது போலிருந்தது. வருணைப் பார்த்துப் பழக்கப்பட்ட அந்த சங்கரன்கோவில் சந்திப்பு அவளுக்கு வெறிச்சோடியதாய் தோன்றியது. ரயில் நிலையம் அவள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள். பிரியாவின் கணவன் ரவியும், அவள் குழந்தையும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தனர்.


என்றும் புன்னகையுடன் 
வெ.அருண் பாரதி

புதன், 22 பிப்ரவரி, 2012

ஒரு எழுத்தாளனின் கதை


         அந்த நம்பரில் இருந்து இவ்வளவு போன் வந்து என்னை நச்சரிக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவரை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. "சார் பார்த்து செய்யுங்க சார், அந்த குரூப் பத்திரிக்கைகளுக்குத்தான் குடுப்பீங்களா எங்கள மாதிரி ஆட்களுக்கு குடுக்கமாட்டீங்களா? நாங்க உங்கள மாதிரி பெரிய பெரிய எழுத்தாளர்களோட படைப்புக்கள போட்டு பிசினஸ்ஸ மட்டும் டெவலப் பண்ணல சார். சர்வீஸ் மைண்ட்ல தான் பண்றோம். உங்க கத எங்க பத்திரிக்கையில வந்திச்சின்னா சேல்ஸ் கொஞ்சம் கூடும். எங்க சர்வீஸ்க்கு அது கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும். அவங்க எவ்வளவு பேமண்ட் தர்றாங்களோ அதையே முதலாளிகிட்ட கேட்டு வாங்கி குடுக்குறது என்னோட பொறுப்பு" என்று கெஞ்சும் குரலில் கேட்டார். "அரைமணி நேரம் கழிச்சு பதில் சொல்றேன்" என்றதும் விடாமல் "அரைமணி நேரம் கழிச்சி நானே கால் பண்றேன் சார்" என்றார். 

      
      நேரம் போனதே தெரியவில்லை. சொல்லியபடி சரியாக அரை மணிநேரத்தில் முதல் கால் வந்தது. நான் கவனிக்கவில்லை. மதிய உணவிற்காக அறையில் இருந்தேன். இரண்டு, மூன்று என்று 5 நிமிடங்களுக்குள் மறுபடியும், மறுபடியும் போன் வரவே  என் மனைவி எரிச்சலுடன் போனை எடுத்து "அவரு சாப்பிட்டுட்டு இருக்காருங்க. அவர்கிட்ட என்ன சொல்றதா இருந்தாலும் கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணுங்க" என்று எதிர்முனையில் இருப்பவரின் பதிலுக்குக் காத்திராமல் தொடர்பை துண்டித்து விட்டாள். 


    பொதுவாக அவளுக்கு நான் சாப்பிடும் போது யாரும் என்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பாள். "சாப்பிடுறப்போ சாப்பாட்டுல கவனம் இருந்தாத்தானே உடம்புல ஒட்டும். போன் பேசிக்கிட்டே சாப்பிட்டா சாப்பிட்ட மாதிரி இருக்குமா என்ன?. ம்ஹ்ம்ம்ம்ம்.... எப்ப பாருங்க எதையாவது எழுதிட்டே இருக்குறது. இல்லன்னா யார் கூடயாவது போன்ல கத அடிச்சிட்டே இருக்குறது. என்னத்த தான் இந்த போன்ல பேசிக்கிறாங்களோ. மந்திரிச்சி விட்ட மாதிரி யாரப் பார்த்தாலும், எப்பப் பார்த்தாலும் காதுல இத வச்சிகிட்டே திரியுறாங்க. மெய் மறந்து பேசுறாங்க. பேசுறப்போ தன்ன சுத்தி என்ன நடக்குறதுன்னே தெரியிறது இல்ல. இதனாலேயே என்னல்லாமோ நடக்குதுன்னு பேப்பர்ல படிக்கிறப்போ கொஞ்சம் பதபதப்பா தான் இருக்கு. இப்ப எந்த இளசுகளப் பாத்தாலும் ஒண்ணுக்கு இரண்டு செல்போன் வச்சிகிட்டு திரியுறாங்க. எத்தன தான் வச்சிருந்தாலும் ஒரே நேரத்துல ஒரு செல்போன்ல தானே பேச முடியும். இந்த எழவக் கண்டிப்பிடிச்சவன் எந்த நேரத்துல இத கண்டுபிடிச்சானோ" புலம்பல்கள் தொடரும். 


           என் மனைவி அப்படித்தான். சுத்த பட்டிக்காட்டான் வகையறா. கிராமத்தில் இயந்திரங்களின் ஆதிக்கத்தையோ, தேவையையோ சிறுவயது முதல் அனுபவிக்காமல் வளர்ந்ததால் அவளுக்கு இந்த சொகுசுப் பொருட்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜியும் கூட. 30 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளும்போது எப்படி இருந்தாளோ இப்பவும் அப்படியே தான் இருக்கிறாள். காலமும், உலகமும் தான் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய நானும் ஆரம்பத்தில் இந்த மாதிரியான வசதிகளை விரும்பாமல், அண்டாமல் தான் இருந்தேன். நண்பர்கள் தான் "என்ன சார்வாள் ஒரு செல்போன் வாங்கி நம்பர் குடுத்திங்கன்னா வசதியா இருக்கும். யார் யாரோ செல்போன் வச்சிருக்காங்க. நீங்க என்னடான்னா......" என்று சிபாரிசு அதிகமானதால் வேறு வழியின்றி அதை வாங்கி இப்போது அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். செல்போன் இருப்பதால் தானே நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் போன் செய்து காரசார எழுத்துலக சர்ச்சைகளைப் பற்றி விவாதிக்க முடிகிறது. எது எப்படியாக இருந்தாலும் ஊர், உலகத்துக்கு தான் நான் எழுத்தாளனே தவிர அவளுக்கு கணவன் தானே. 


      என்னுடைய கதைகள், புகைப்படங்கள், பேட்டிக்கள் பத்திரிக்கைகளில் வரும் போது அதை உள்ளுக்குள் பெருமையாக எடுத்துக் கொண்டாலும் எனது உடல்நிலை குறித்து எப்போதும் கவலை தான் அவளுக்கு. ஆனால் இந்த உடல்நிலை விசயத்தில் மட்டும் அவளோடு என்னால் ஒத்துப்போகவே முடிவதில்லை. கூட்டங்கள் முடித்து வீட்டுக்கு தாமதமாகச் செல்வது, பெரும்பாலும் வெளியிலேயே சாப்பிடுவது. சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்த புகைக்கும் பழக்கம் வேறு. இது மட்டுமின்றி பெரும்பாலும் எழுதுவதற்கு தனிமையையும், இரவையும் தான் நான் தேர்ந்தெடுப்பேன். எழுதவேண்டும் சிந்தனை வந்துவிட்டால் எழுதிக் கொண்டே இருக்க விரும்புபவன் நான். சிறுகதை என்று எழுத தொடங்கி விட்டால் எனக்கு ஒரே அமர்வில், ஒரே மூச்சில் அதை எழுதி முடித்தாக வேண்டும். இல்லையெனில் அக்கதையை என்னால்  முடிக்கவே முடியாது. அந்த நேரத்திலிருந்த மூட் பின்னால் செட் ஆகாது. பல கதைகளை இப்படி எழுதி முடிக்க முடியாமல் பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கின்றன. இதனாலேயே எழுத ஆரம்பித்து விட்டால் உணவு, உறக்கம் எதையும் பொருட்படுத்தாமலேயே எழுதிக் கொண்டிருப்பேன். இதுவே வழக்கமாகிப் போனதாலோ என்னவோ என் மனைவிக்கு நான் எழுதுவது பெரும்பாலும் பிடிக்காது. அப்படி எழுதத் தொடங்கினாலும் சாப்பிட்டுட்டு எழுதுங்க என்று கட்டாயபடுத்துவாள். மறுத்தால் "இந்த கத, கவித எல்லாம் எழுதி என்னத்த கண்டீங்க. ஏற்கனவே உடம்புல 4 தடவை கத்தி வச்சி அறுத்து தச்சி போட்டாச்சி. டாக்டர் நல்ல ரெஸ்ட் எடுக்க சொன்னதுனால தானே வி.ஆர்.எஸ் வாங்கி வீட்ல ரெஸ்ட் எடுக்குறீங்க. இந்த நேரத்துலயும் சும்மா இருக்க மாட்டீங்களா? நமக்கு இப்ப என்ன குறை இருக்கு. இப்படி அன்ன, ஆகாரம் இல்லாம கடந்து அல்லாடணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன? நீங்க எழுதுறதுனால தான் தினமும் பொழுது விடியுதுன்னு யாராச்சும் சொன்னாங்களா? நீங்க தான் இப்படி கோட்டி பிடிச்சி அலையிறீங்கன்னு பார்த்தா உங்ககூட சேர்ந்த எல்லாரும் அப்படி தான் இருக்காங்க போல. அதுலயும் அந்த ஜோல்னா பை வச்சவரு வந்துட்டார்ன்னா போதுமே நேரம், காலம் தெரியாம பேசுவீங்க. இந்த கோட்டிக்காரன்கள எல்லாம் முதல்ல நாடு கடத்தணும்" என்று ஒரே மூச்சில் ஒட்டு மொத்த எழுத்தாளர்களையும் காலி செய்து விடுவாள். அதனாலேயே பெரும்பாலும் சாப்பிடும் போது வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. செல் போனைக்கூட டைனிங் ஹால்க்குள் கொண்டு வரமாட்டேன். இந்த விசயம் என்னிடமிருந்து வழக்கமாக படைப்புகளை வாங்கிக் கொள்ளும் என் இலக்கிய உலக நண்பர்களுக்குத் தெரியும். அதனாலேயே இந்த நேரத்தில் என்னை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டார்கள். பாவம் அந்த ரகசியம் எல்லாம் இவருக்கு தெரியவில்லை. அதான் போன் செய்து என் மனைவியிடம் அர்ச்சனை வாங்கிக் கொண்டார். 


    ஒரு வழியாக சாப்பிடும் வைபவம் முடிந்தது. இப்பவாவது அந்த பத்திரிக்கைக்காரரிடம் பேச வேண்டும். இதற்குப் பின்பும் அவரை காக்க வைப்பது நல்லதல்ல. செல்போனில் டயல் செய்தேன். 


"தம்பி, சாப்பிட்டுட்டு இருந்ததுனால போன் அட்டண்ட் பண்ண முடியல. கோவிச்சுக்காதீங்க" 


"பரவாயில்ல சார். அம்மா ரொம்ப கோவமா இருக்காங்களோ? என்னால உங்களுக்கு எதுவும் திட்டு கிடைக்கலயே?"


"அத விடுங்க தம்பி. அவங்க அப்படித்தான். நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க..... ஆமா நீங்க நடத்துற பத்திரிக்கை பேரு என்னன்னு சொன்னீங்கன்னு மறந்துட்டேன்"


"...........", 


"ம்ம்ம்ம்ம். ரொம்ப வருசமா இந்த பத்திரிக்கை போய்ட்டு இருக்கே. ஆனா என்ன நீங்க இப்ப தான் காண்டாக்ட் பண்றீங்க போல......."


"ஆமா சார். இப்ப பத்திரிக்கை குழுவ மாத்தி அமைச்சிருக்கோம். நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துருக்கோம். இதுக்கு முன்னாடி அந்த செக்மண்ட் எழுதிட்டு இருந்த அந்த எழுத்தாளருக்கும், எங்க முதலாளிக்கும் முட்டிக்கிச்சின்னு எல்லாருக்கும் தெரியும். அவர விட பெஸ்ட்டா இப்ப யாரு இருக்காங்கன்னு ஐயா கேட்டதுக்கு உங்க பேரு தான் எல்லாரும் சொன்னாங்க. நீங்களும் இந்த மாதிரி விசயங்கள தான் எழுதிட்டு வாரீங்க. நானும் உங்க பேர தான் சொன்னேன். நீங்க எங்க பத்திரிக்கையில எழுதுனா நல்லா இருக்கும்"


"சரி தம்பி. கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒரு மேட்டர எழுத ஆரம்பிச்சேன். கிரைம் நாவல் ஒண்ணு. எழுத முடியாம அப்படியே இருக்கு. எழுதுனது வரைக்கும் அனுப்புறேன். உங்க ஐயா கிட்ட காட்டி ஓகேன்னா தொடர்ச்சியா எழுத ஆரம்பிச்சிடலாம். வந்து வாங்கிக்கிறீங்களா?"


"சரிங்க சார். ரொம்ப சந்தோசம்"


சொன்னபடி வந்து வாங்கிச் சென்று 4 நாட்களுக்குப் பின் போன் செய்தார்.


"சார். உங்க கதைய ஐயா கிட்ட காட்டுனேன். பூரிச்சி போய்ட்டாரு. உடனே இந்த வாரமே விளம்பரம் குடுத்துடலாம்னு சொல்லிட்டாரு. உங்க அக்கவுண்ட் நம்பர அனுப்பி வைங்க சார். உடனே அமவுண்ட் போட சொல்லிடுறேன். என்ன கத சார் இது. ஆரம்பமே அமர்க்களப்படுது. கதை ஓட்டத்த கணிக்கவே முடியல சார். உங்க ப்ராஜெக்ட்லயே இது கிளாசிக்கல்னு தைரியமா சொல்லலாம் சார். நிஜமாவே செம ஹிட் அடிக்கும் சார். அந்த போலிஸ் இன்ஸ்பெக்டர துரத்திட்டு போற கார் யாரோடதுன்னு சத்தியமா கண்டுபிடிக்கவே முடியல சார். ஆனா வாசகர்கள் எதிர்பார்க்குற ஆளா அந்த கார்ல இருக்குறவன் இருக்க மாட்டான்னு தான் எனக்கு தோணுது சார். நீங்க அடுத்த செட்ட முடிச்சதும் சொல்லுங்க சார். வந்து வாங்கிக்கிறேன். எனக்கே அடுத்த பார்ட் என்னன்னு தெரியாம மண்ட காயுது. கொஞ்சம் சீக்கிரமாவே எழுதுங்க சார்" வார்த்தைகளிலும், பேச்சுத் தொனியிலும் ஆர்வம் தெரிந்தது அவரிடமிருந்து. 


"தம்பி அனுப்பிடலாம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு உண்மைய சொல்லியாகணும். இது நா ஆரம்ப காலத்துல எழுதி ஏற்கனவே உங்க பத்திரிக்கைக்கு அனுப்புன கத தான். கதைய திருத்தி அனுப்புங்கன்னு வாசிக்கிற நடையில இல்லன்னு உங்க பத்திரிக்கையில இருந்து திருப்பி அனுப்பிட்டாங்க. அந்த கதைய தான் கொஞ்சம் கூட திருத்தாம இப்ப அனுப்புனேன். இது நல்ல கத தான்னு இப்ப தான் உங்க ஐயாவுக்கு தெரியுது"
அந்த நண்பர் இளிப்பது தெரிந்தது.  


என்றும் புன்னகையுடன் 
அருண் பாரதி வெ

  

சனி, 28 ஜனவரி, 2012

வீடு..........



"நா சாகுறதுக்குள்ள ஒரு வீடு கட்டிடணும் தம்பி. எல்லாம் விலையேறிப் போன இந்த கலிகாலத்துல இது முடியுமான்னு தெரியல. விக்கிற விலையில சம்சாரிங்க வாழ முடியுமான்னு தெரியல. நம்ம காலத்துலயே இப்படின்னா நம்ம பேரனுங்க காலத்துல..... யப்பா நெனச்சாலே இப்பவே செத்துரலாம்னு தோணுது. இருந்தாலும் சாகுறதுக்குள்ள ஒரு வீடு கட்டிடணும் தம்பி" இப்படி எனக்குத் தெரிந்த ராமையா தாத்தா பக்கத்து வீட்டு பெரியவரிடம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சொந்த வீட்டில் வாழ்வதே ஒரு கெளரவம் தான். வீட்டு வாடகை என்ற பிரச்சனை இல்லை. கரண்ட் பில் யுனிட்டை அதிகமாக்கி வீட்டு சொந்தக்காரர்கள் வசூலிப்பதே இல்லை. நினைத்த மாதிரி அறைகளை மாற்றி அமைக்கலாம். அதையும் மீறி மனதிற்குப் புலப்படாத ஏதோ ஒரு சந்தோசம் சொந்த வீட்டில் தான் அமைகிறது.



"ஆணி அடிக்கலாம்,
நினைத்ததை மாற்றி அமைக்கலாம்,
எல்லா சந்தோசங்களை
நிரப்பிக் கொண்டு
தினமும் வருகிறது
சொந்தவீடுக் கனவு.
வாடகை வீட்டில்
வசிக்கலாம்,
ஆனால் வாழமுடியாது"



இப்படியான ஒரு கவிதை அத்தனை வாடகை வீடுகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் பொருந்தும். காலச்சக்கரம் சுழல்கிற வேகத்தில், காந்தி சிரிக்கின்ற அந்த வண்ணக் காகிதங்களை சம்பாதிப்பதற்குள் வாழும் காந்திகள் அழுதே விடுகின்றனர்.



சொந்த வீடு கட்டும் ஆசையில் கடன் மேல் கடன் வாங்கி, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், வீடும் கட்ட முடியாமல் வாழ்வதற்கு வழியுமில்லாமல் கடைசியில் நிராசைகள் நிரம்பியதன் அடையாளமாய் என் நண்பனின் தந்தை தூக்கில் தொங்கிய காட்சி என் கனவுகளில் அடிக்கடி வந்து தூக்கத்தை தூக்கில் ஏற்றி விடுகிறது.



வாழ்க்கை ஒரு பந்தயம், நீ முந்தாவிட்டால் உன்னை ஏறி மிதித்து பலர் முந்தி விடுவார்கள் என்ற விருமாண்டி சந்தானத்தின் குரல்கள் தான் திசைகள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சமன் பாரிவேந்தனை பார்க்கவே முடியவில்லை. "தினசரி குடும்பத்த ஓட்டுறதுக்கே இங்க நரகவேதனையா இருக்கு. இதுல உனக்கு சொந்த வீடு கட்டணும்னு ஆச வேற இருக்கா. போ... உங்க அப்பன் கிட்ட போய் அத கேளு" என்று கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மெகா சீரியல்களின் விளம்பர இடைவேளையில் வரும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மனைவிமார்களால் ஏக்கத்தோடு மட்டுமே பார்க்க முடிகின்றன.



"மாசம் ஆயிரம் ரூவா மட்டும் 5 வருசத்துக்கு கட்டுனா போதும் சார், நான்குநேரி டைட்டல் பார்க் பக்கத்துல 3 செண்ட் இடம் உங்களுக்குத்தான். ஸ்கூலு, காலேஜ், மார்க்கெட்டுன்னு எல்லாம் பக்கத்துல பக்கத்துல வந்துரப்போகுது. சூப்பர் ஃஆபர் சார். அடுத்த 2 மாசத்துல இருந்து ரேட் எகிறுடும்" என்று நண்பர்கள் என்னைத் துளைக்கையில் காலியாகக் கிடக்கும் பர்சும், பளபளக்கும் எம்டி பேலன்ஸ் ஏடிஎம் கார்டும் என்னைப் பார்த்து நக்கலாய் சிரிக்கின்றன. நான்குநேரியும் திருநெல்வேலி புது பஸ்ஸ்டாண்டும் மிகவும் பக்கத்தில் இருக்கிறது என்று ரியல் எஸ்டேட்காரர்களின் மேப் மட்டுமே சொல்கிறது.



திருச்செந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் ஸ்டாப்பைத் தாண்டுகையில் வலது பக்கம் தூரத்தில் இருக்கும் வீடுகளைப் பார்த்து என் தந்தை கண்ணீர் வடிக்கும் ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து கூடு அளவுக்கு 8 க்கு 10 த்தில் ஒரு சின்ன வீடு கட்டி, அவசர காலத்தில் அதை விற்க வேண்டிய நிலைமை. பத்திரத்தோடு வீடும் கைமாறிப் போன சமயத்தில் என் தந்தை மனதிற்குள்ளாகவே தேம்பி தேம்பி அழுததை எந்த இலக்கியங்களில் பார்த்திட முடியும்? இந்த எளவுப் பொறப்புக்கு குருவிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.



எங்கள் பகுதியில் இருக்கும் பெரும்பாலான வீடுகளுக்கு ஊரில் இருக்கும் நான்கு பேர் மட்டும் சொந்தக்காரர்கள். அதில் ஒருவருக்கு ஒரு மனைவி தான் எனினும் அந்த மனைவிக்கு நான்கு பெயர்கள். ஒவ்வொரு பெயரிலும் பல வீடுகள். அவ்வீடுகளை வாடகைக்கு விட்டு "சமூக" சேவை செய்து வருகிறார். ஒன்றாம் தேதி ஆனால் போதும் அவர் ஒவ்வொரு வீடாகச் சென்று வாடகை வசூலிப்பார். தரமுடியாதவர்களுக்கு வசவுகள் பதிலாய்க் கிடைக்கும். உலகப்பொருளாதாரம் நேரடியாக அவரைத்தான் முதலில் தாக்குவதைப் போல வருடாவருடம் சுளையாக 500 ரூபாய் வரை வாடகை ஏற்றி விடுவது அவரது வழக்கம். கேட்டால் "என்ன பண்றது மனுசனுக்கு வயிறுன்னு ஒண்ணு இருக்கே. நானும் சாப்பிடணுமே" என்ற நக்கலாய் பதில் வரும் 8 மாத கர்ப்பிணியைப் போன்ற வயிறு வளர்த்த அவரிடமிருந்து.



எனது உறவினர் ஒருவரும் அவரது வீட்டில் தான் வாடகைக்கு இருக்கிறார். அவரது மனைவி ஒருமுறை என் அம்மாவிடம் வந்து அழுது கொண்டிருந்தது என் காதில் கேட்டது. "பாவிப்பய ஒரு சின்ன ரூம், ஒரு கிச்சனுக்கு ரெண்டாயிரம் ரூவா வாடக வாங்குறான். அடுத்த மாசத்துல இருந்து 300 ரூவா கூட்டப்போறானாம். கட்டமுடியலன்னா வீட்ட விட்டு காலி பண்ணச் சொல்றான். அவன் வெளங்குவானா" என்று திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு நான் "அம்மா நீங்க ஏன் இப்படி வந்து அழுறீங்க தமிழ்நாடு வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு. அதுல இவ்வளவு தான் வாடக வசூலிக்கணும்னு வரம்பு இருக்கு. யாரும் அளவுக்கு அதிகமாக வாடகை வசூல் பண்ண முடியாது" என்றேன். அதற்கு அவர்கள் "சட்டம் எல்லாம் நல்லாதான் இருக்கு. நம்மள மாதிரி ஏழைகளுக்கு எங்க அது உதவப் போகுது? சட்டம் இருக்குன்னு கம்ப்ளைண்ட் குடுத்தா வர்ற ஆபிசர் எப்படியும் அவன்ட்ட காசு வாங்கிட்டு போயிடுவான். அப்புறம் யாரு தம்பி எங்களுக்கு வீடு குடுப்பா?" என்றார் விரக்தியுடன்.


உண்மைதான் சட்டங்கள் பணக்காரர்களுக்கு பூங்கொத்தையும், ஏழைகளுக்கு மலர் வளையத்தையும் தான் வைக்கின்றன.


(தொடரும்........)

என்றும் புன்னகையுடன்
வெ.அருண் பாரதி