நினைத்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாக எழுந்தாலும் அவசரம் அவசரமாக குளித்து, கிளம்பி எப்படியோ வண்ணார்பேட்டைக்கு காலை 05.30க்கே வந்து சேர்ந்து விட்டான் வருண். இன்னும் 5 நிமிடத்திற்குள் பஸ் கிடைத்து விட்டால் ஒன்றரை மணிநேரத்தில் சங்கரன்கோவிலுக்கு சென்று விடலாம். பஸ்ஸூம் கிடைத்தாகி விட்டது. ஏறினான். பஸ்ஸில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் கிடந்தன. உட்காருவதற்கு மட்டுமின்றி தூங்குவதற்குக் கூட தாராளமாக பஸ்ஸில் இடம் இருந்தது. வருணோடு பஸ் ஏறிய அந்த நபர் சீட்டில் துண்டை விரித்து தூங்குவதற்கு ஆயத்தமானார். ஆனால் வருணுக்கு அவளை சந்திக்கப் போகின்ற அந்த நினைவுகள் இழையோடிக் கொண்டிருந்ததால் தூக்கம் பிடிபடவில்லை. தனது செல்போனை எடுத்து அவளிடமிருந்து ஏதேனும் எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் வரவில்லை. அவளுக்கு போன் செய்து இப்ப எங்க வந்திட்டு இருக்க என்று கேட்கலாம் தான். ஆனால் அவள் தூங்கிக் கொண்டிருப்பாள். எழுப்ப மனம் வரவில்லை. வேறு வழியில்லாமல் பாடல் கேட்க ஆரம்பித்தான். இளையராஜாவின் "நீ தூங்கும் நேரத்தில்", ஏ.ஆர்.ரகுமானின் "பூங்கொடியின் புன்னகை" இதம் தந்தது. அதிலும் குறிப்பாக கற்றது தமிழ், "பறவையே எங்கு இருக்கிறாய்" அவனுக்காகவே பாடுவதாகத் தோன்றியது. அந்த அதிகாலை நேரத்தில் இளையராஜாவின் அந்த குரலை ஏகாந்தமாக உணர்ந்தான். அவளை சந்திக்கப் போகின்ற அந்த 3 நிமிடங்கள் அவனது ஒன்றரை மணிநேர பயணத்தில் அவனோடு பயணித்துக் கொண்டிருந்தன. சங்கரன் கோவில் பஸ்ஸ்டாண்டில் இறங்கி ஒரு சூடாக ஒரு டீ குடித்தான். சங்கரன்கோவில் பஸ்ஸ்டாண்ட் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸ்டாண்டின் பின்புறம் இருக்கும் கோமதியாபுரம் வழியாக ரயில்வே பீடர் ரோட்டைத் தொட்டு வேகமாக நடைபோட்டால் பத்து நிமிடத்திற்குள் ரயில் நிலையம் வந்து விடும். நடைபோடத்துவங்கினான். போகிற வழியில் தனது செல்போனை எடுத்து போன் செய்தான். எதிர்முனையில் அவள் தூக்கக் கலக்கத்தில் "ஸ்ரீவில்லிபுத்தூர், எஸ்4 24" என்றாள்.
"சீக்கிரம் எந்திரிச்சி பிரஷ் பண்ணு. நா சங்கரன்கோவில் வந்துட்டேன். ரயில்வே ஸ்டேசனுக்கு நடந்து வந்துட்டு இருக்கேன்" என்றான்.
"ம்ம்ம்ம் சரி" பதிலாய் வந்தது.
கால்கள் வேகமாக நடைபோட்டதால் நினைத்ததை விட 7 நிமிடங்களிலேயே ரயில் நிலையம் வந்துவிட்டது. வாசலில் சவாரிக்காக ஆட்டோக்கள் காத்துக் கொண்டிருந்தன. உள்நுழைந்து ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். ரயில்வே ஸ்டேசனில் கூட்டம் அதிகமில்லை எனினும் ஒரு சில ஆட்கள் இருக்கத்தான் செய்தனர். சிலர் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். சிலர் மதுரை பாசஞ்சர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். பின் 5 நிமிடம் கழித்து அங்கு கேண்டினில் இருந்தவரிடம் ''பொதிகை எப்ப சார் வரும்?'' என்று கேட்டான். ''இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும்னு நெனைக்கிறேன் தம்பி'' என்றார் அந்த பெரியவர்.
6 மாதங்கள் கழித்து தனது காதலி பிரியாவைப் பார்க்க போகிறோம் என்ற நினைவு அவனுக்குள் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது. தனது காதலை அவள் ஏற்றுக் கொண்டு இதோடு ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ஒரு வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை. இதுவரை 2 தடவைதான் அவளை நேரில் பார்த்திருக்கிறான். அதுவும் 5 நிமிடங்களுக்குள்ளான சந்திப்பு தான். செல்போன் மட்டும் தான் அவர்களின் காதலை வளர்த்தெடுத்துக் கொண்டிருந்தது. தினமும் காலை 7 மணிக்கு மேல் தான் எழுந்திருக்கும் பழக்கமுடைய வருணுக்கு அன்று யாரும் எழுப்பாமல் 4.30 க்கே எழுந்து குளிக்க முடிந்ததை நினைக்க ஆச்சரியமாகத்தான் இருந்தது. பிரியா வருணுக்கு சொந்தமோ,நெருங்கிப் பழகியவளோ கிடையாது. 2 வருடத்திற்கு முன்பு வரை வருண் யாரோ, பிரியா யாரோவாகத்தான் இருந்து வந்தார்கள். தனக்கு நெருங்கிய தோழியின் மாமா மகள் என்பதைத் தவிர வேறு எந்த அறிமுகமும் பிரியாவிற்கு இருக்கவில்லை. இருந்தாலும் பிரியாவின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு அவள் மேல் தனிப்பிரியம் காட்ட வைத்தது. அதே ஈர்ப்பு வருணின் மீது பிரியாவிற்கும் இருந்தது சற்றே ஆச்சரியம் தான். இருப்பினும் ஆரம்பத்தில் பிரியாவின் மீது வைத்திருந்த காதலை மனதளவில் வருண் தவிர்க்கவே முயற்சித்துக் கொண்டிருந்தான். பிரியாவின் தந்தை அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர். செங்கோட்டையிலேயே சொல்லிக் கொள்ளும் படியாக அந்தஸ்தில் உயர்ந்த குடும்பம். ஆனால் வருணின் நிலைமையோ தலைகீழ். இப்படிப்பட்ட பாகுபாடுகள்,ஏற்றத்தாழ்வுகள் காதலுக்கு தெரியுமா என்ன? ஒரு முறை பிரியாவோடு பேசுகையில் அடக்க முடியாமல் உளறி விட்டான். பிரியாவும் அந்த வார்த்தையைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் போல. சிரித்துக் கொண்டே பச்சைக் கொடி காட்டி விட்டாள். ஆனால் ஓரிரு வருடங்களில் வருண் கஷ்டப்பட்டு படித்து பெரிய அரசாங்கப் பதவியில் அமர்வது, பின் பிரியாவின் தந்தையிடம் பேசுவது. தந்தை சரி என்று சொல்லிவிட்டால் மட்டும் திருமணம் செய்து கொள்வது என்று பிரியா நிபந்தனை வைத்தாள். வருணுக்கும் அதுவே சரி என்று பட்டதால் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இருந்தாலும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமே. படித்து பரீட்சை எழுதி அரசாங்கப் பதவியில் அமர வேண்டுமே? வாழ்க்கை என்ன சினிமாவா? ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்று விடுவதற்கு.....
வருண் திருநெல்வேலியில் இருந்ததாலும், பிரியா சென்னையில் படித்துக் கொண்டிருந்ததாலும் இருவரும் சந்தித்துக் கொள்ளவே முடியாத நிலை. மேலும் செங்கோட்டை அல்லது தென்காசியில் பிரியாவின் தந்தையை பலரும் அறிந்து வைத்திருந்ததால் அங்கு சந்தித்துக் கொள்வதென்பது இயலாத விசயம். என்ன செய்வது என்று யோசித்து பிரியா தன் கல்லூரி விடுமுறையில் பொதிகை எக்ஸ்பிரசில் வீட்டுக்கு வரும் போது சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சந்திப்பதாக முடிவெடுத்துக் கொண்டார்கள். அதனால் தான் வருண் சங்கரன்கோவிலுக்கு வந்திருக்கிறான்.
பொதிகை எக்ஸ்பிரஸ் காற்றை கிழித்துக் கொண்டு தூரத்தில் வருவது தெரிந்தது. எஸ்4 வந்து நிற்கும் இடம் நோக்கி நகரத் துவங்கினான். அதற்குள் எஸ்4 அவனைத்தாண்டி 100 மீ தூரம் தள்ளி நின்றது. அவனது கால்கள் வேகமெடுக்கத் துவங்கின. எஸ்4லிருந்து பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தனர். அவன் எஸ்4 ஐ அடைந்தான். வாசலருகில் பிரியா. தூக்கம் கலையாமல் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் சிரித்தான். யாராவது கவனிக்கிறார்களா என்பதை பார்த்துக் கொண்டே ''நல்லா இருக்கியா?'' என்றான்.
''ம்ம்ம்ம்ம்'' பதில் வந்தது.
''செமஸ்டர் எப்படி எழுதிருக்க?''
''ம்ம்ம்ம்ம்.....நல்லா எழுதிருக்கேன்''
பொதிகை கிளம்பத் துவங்கியது.
"வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு. முடிஞ்சா எஸ்எம்எஸ் அனுப்பு, ப்ளீஸ் இப்ப வீட்டுக்கு போற வரைக்குமாச்சும் அனுப்பு"
ரயில் வேகமெடுத்து அவனுக்கும் பிரியாவிற்குமான இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றது. அவனது கண்ணை விட்டு பொதிகை மறையும் வரை நின்று வேடிக்கை பார்த்து விட்டு பின் சிரித்துக் கொண்டே சங்கரன்கோவில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறத்துவங்கினான் வருண்.
---------------------------------------------------------
ரயில் இன்னும் கொஞ்ச நேரத்தில் சங்கரன்கோவில் சந்திப்பைத் தொட்டுவிடும். இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாலும் பிரியாவிற்கு உறக்கம் மட்டும் வரவில்லை. 5 மணிக்கே எழுந்து அமர்ந்து கொண்டாள். நேரம் போவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தாள். எதுவும் கைகூடவில்லை. வேறு வழியின்றி ஏற்கனவே படித்த சிட்னி ஷெல்டனின் நாவல் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள். நேரம் 6.30 ஆனதும் பல் துலக்கி, முகம் கழுவி, அழகாய் வகிடு எடுத்து தலை வாரினாள். கொஞ்சம் பவுடர் போட்டுக் கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் சங்கரன்கோவில் சந்திப்பை பொதிகை எக்ஸ்பிரஸ் அடைந்து விடும். மனதில் அடைபடாத ஒரு உணர்வு மின்னலாய் தோன்றி மறைந்தது. அடிக்கடி வாசலுக்கும் இருக்கைக்கும் நடைபோட்ட வண்ணம் இருந்தாள். சங்கரன்கோவில் சந்திப்பு கண்ணுக்கு தெரிந்தது. வாசலருகில் வந்து நின்று கொண்டாள். ரயில் நிற்கத் தயாராகும் முன்பே பரிட்சயமான அந்த முகத்தைத் தேடத் துவங்கினாள். எவரும் வருணின் ஜாடையில் இல்லை. 5 வருடத்தில் வருணின் முகம் மாறி இருக்கலாம் என்ற உண்மை பிரியாவிற்கு தெரிந்தாலும் அவளது மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. யாராவது தன்னை கவனிக்கிறார்களா? புன்னகைக்கிறார்களா? தன்னை நோக்கி பேச வருகிறார்களா? என்றெல்லாம் பார்த்தாள். ம்ஹூம் அவளை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய வேலைகளில் மும்மூரமாய் இருந்தனர். மூன்று நிமிடத்தில் ரயில் கிளம்பத் தொடங்கியது. பிரியாவிற்கு அழுகை வருவது போலிருந்தது. வருணைப் பார்த்துப் பழக்கப்பட்ட அந்த சங்கரன்கோவில் சந்திப்பு அவளுக்கு வெறிச்சோடியதாய் தோன்றியது. ரயில் நிலையம் அவள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள். பிரியாவின் கணவன் ரவியும், அவள் குழந்தையும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
என்றும் புன்னகையுடன்
வெ.அருண் பாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக