(செப்டம்பர் 10 - உலக தற்கொலை தடுப்பு தினம்)
கடவுள் புன்னகைத்தார்....
வழக்கம் போல் அல்லாமல் அன்று
விண்ணுலகத்தில் பெருங்கூட்டம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் நடக்கப்போகும் அந்த விவாதத்தைத் கேட்க எல்லோரும் கூடி
விட்டனர். இரண்டு, மூன்று அரசியல்கட்சித் தலைவர்களை அழைத்து
விவாதம் என்கிற பெயரில் கூச்சல் போட வைத்து, சண்டை போட வைத்து அதையே ப்ரோமோவில் காட்டிக் காட்டி டிஆர்பி ரேட்டை ஏற்றி விடும்
தொலைகாட்சிகளின் தந்திரம் எப்போது விண்ணுலகில் பரவியதென்று தெரியவில்லை.
இருப்பினும் கடவுளுக்கும்,
சாத்தானுக்கு
நடக்கப்போகும் இந்த விவாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்று அனைவரும்
நம்பினர்.
ஒருவழியாக விவாதம் தொடங்கியது. சாத்தான்
தான் முதலில் ஆரம்பித்தார். "பூமியில் இப்பொழுது எல்லாரும் என்கட்சியில்
சேரத் தொடங்கி விட்டனர். கடவுளின் கட்சியில் இருக்கும் ஒன்றிரண்டு பேர்
பழமைவாதிகளாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஏன் மனிதனாய் வாழ லாயக்கே
இல்லாதவர்களாகவும் தெரிவதற்கு என் கட்சியினர் செய்யும் வேலைகள் மகத்தானது. இனி
பூமியில் கடவுளின் கட்சிக்கு டெபாசிட் காலியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை".
சாத்தான் வகையறாக்களின் கை தட்டலில் விண்ணுலகம் அதிர்ந்தது. கடவுளின் கட்சிக்காரர்களுக்கு முகம் தொங்கிப் போனது. இருப்பினும்
தலைவர் பேச ஆரம்பித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அமைதியாக இருந்தனர்.
ஒருவழியாக கடவுள் செருமிக்கொண்டே பேச்சைத் தொடங்கினார். "சாத்தான் சொல்வது
சரியாக இருக்குமென்று எல்லோருக்கும் தோன்றலாம். ஆனால் அது சரியல்ல. ஏனெனில்
தற்பொழுது பூமியில் எங்கள் கட்சிக்காரர்கள் எண்ணிக்கையில் குறைந்து இருக்கலாம்.
ஆனால் அவர்களின் உழைப்பு, தியாகம், உணர்வை யாராலும் அழிக்க முடியாது. என்ன தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடினாலும், அதிகார வர்க்கத்தின் ஆட்டம் அதிகமானாலும், லஞ்சம் வாங்காத என் கட்சிக்காரர்களை
உங்களால் இடமாற்றமோ, துறை மாற்றமோ மட்டும் தான் செய்ய முடியுமே தவிர கட்சி மாற்றம் செய்ய
முடியாது. வேறெந்த சகாயமான வழியும் உங்களுக்கு கிடைக்காது. எங்கள் கட்சிக்காரர்கள்
எண்ணிக்கையில் குறைந்தாலும்,
இயங்கிக்கொண்டே
தான் இருப்பார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், ஏன் உயிரே போய்விடும் சூழல் வந்தாலும் எங்களை
உங்களால் உங்கள் கட்சிக்கு மாற்ற முடியாது", சாத்தான் குறுக்கிட்டு "கஷ்டமும், பசியும், தோல்வியும், விரக்தியும் வந்துவிட்டால் உங்களையே கூட
என் கட்சி உறுப்பினராக்க முடியும். மனிதன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும்
பணக்கஷ்டம் வந்து விட்டால் திருடனாக மாறிவிடுகிறான். மனக்கஷ்டம் வந்து விட்டால்
கொலைகாரனாகக் கூட மாறிவிடுகிறான். காதலில் தோல்வியுற்றவனுக்கு தற்கொலை என்பதே
தீர்வாக இருக்கிறது. ஆகவே சூழ்நிலையால் ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றி
விட முடியும்" கடவுள் பதில் ஏதும் பேசாமல் புன்னகைத்தார். இதைப் பார்த்த சாத்தானுக்கு கோபம் தலைக்கேறியது.
"வேண்டுமானால் கடவுளுக்கு ஒரு நேரடியான சவால் விடுக்கிறேன். உண்மையிலேயே
அவருக்கு தைரியம் இருந்தால் எனது சவாலை ஏற்றுக் கொள்ளட்டும். ஒரு இளைஞனுக்கு
காதல் தோல்வியைக் கொடுத்து அவனை தற்கொலைக்குத் தூண்டி விடுகிறேன். ஒரே ஒரு
வாய்ப்பில் அவன் மனதில் இருக்கும் தற்கொலை எண்ணத்தை களைந்து, அவனை ஒரு நல்ல காரியம் செய்ய வைத்து, அவனது பிரச்சனையையும் கடவுளால் தீர்த்து
வைக்க முடியுமா? ஞாபகம் இருக்கட்டும் கடவுளுக்கு நான்
கொடுப்பது ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தான்" கடவுள் மீண்டும் புன்னகைத்தார்.
சவாலை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அனைத்து விண்ணுலகவாசிகளின் கண்களும் பூமியை
நோக்கித் திரும்பியது.
அந்த இளைஞனின் பெயர் பாஸ்கரன். காதல்
வரும் பருவத்தை எல்லாம் தாண்டிவிட்ட 28 வயதுக்கு சொந்தக்காரன் அவன். வேலை எதுவும்
இல்லாததால் தன் கண்ணுக்கு அழகாய்த் தெரிந்த ஒரு பெண்ணை கெஞ்சிக் கூத்தாடி காலில் விழாத குறையாக காதலில் விழ வைத்தான்.
இவனது இம்சைகள் தாங்க முடியாமல் பொறுத்துப் பார்த்த அந்த பெண்ணும் சமயம் கிடைத்த போதெல்லாம் இவனிடம்
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு கடைசியில் "டாடா" காட்டிவிட்டாள்.
இவனுக்கோ ஒரு பக்கம் பயங்கர கோபம், இன்னொரு பக்கம் காதல் கூட தன் வாழ்க்கையில் நிலைக்க வில்லையே என்ற
விரக்தி. பெண்களைத் திட்டுவதையே ஃபேஷனாகக் கொண்ட சில சினிமாப் பாடல்கள் இவனுக்கு
ஆறுதல் தந்தது. இருந்தாலும் தான் தற்கொலை செய்து கொண்டால் எப்படியாவது
பத்திரிக்கையின் முதல் பக்கத்தை நிரப்பி தன் காதலை புனிதமாக்கி விட முடியும். காதலித்து ஏமாற்றும் ஒவ்வொரு
பெண்ணுக்கும் அது பாடமாக இருக்கும். ஆகவே தற்கொலை தான் சரியான வழி என்று முடிவுக்கு
வந்தான்.
தற்கொலை செய்து விடலாம். ஆனால் எப்படி? சுருக்குக் கயிற்றில் தலையை மாட்டி
குறுக்கு வழியில் சாகவா? ஓடும் ரயிலில் தலையை விட்டு ரணவேதனையில் சாகவா? கத்தியால் கழுத்தை அறுத்துச் ரத்தம்
சொட்டச் சொட்டச் சாகவா? விஷத்தை "மொடக்" என்று
குடித்து "படக்" என்று சாகவா? சிந்தனையில் ஆழ்ந்தான். எல்லாவற்றையும் சீட்டில் எழுதி இங்கி, பிங்கி, பாங்கி போட்டுப் பார்த்ததில் "விஷம்" வந்தது. "என் வழி
எதுவென்று கடவுள் தீர்மானித்துவிட்டார்" என்றான்.
கடவுளுக்கு கோபம் வந்தது. "அடப்பாவி
மனுசா. உன்ன சாகச் சொல்றது இந்த சாத்தான். அவன விட்டுட்டு நான் தான் என்னமோ உனக்கு வழிகாட்டுனேன்னு
சொல்ற". சாத்தான் சிரித்தார். "பார்த்தீர்களா கடவுள் அவர்களே இந்த
உலகத்தில் நீங்கள் நல்லது மட்டுமே செய்கிறீர்கள். ஆனால் என் செயலுக்கும் சேர்த்து
நீங்கள் தான் பெயரைச் சுமக்கிறீர்கள். இதற்குப் பெயர் தான் சொந்தக் காசில்
சூனியம் வைத்துக் கொள்வது என்பது. சரி சரி காட்சிக்கு வருவோம்".
மதுவில் விஷம் கலந்து குடித்தால்
சடக்கென்று சாவு வருமென்று எந்த சினிமாவிலோ பார்த்த ஞாபகம் பாஸ்கரனுக்கு வந்து
தொலைக்க, முதலில் விஷம் வாங்கி பின்னர் அதை மதுவில்
கலந்து குடிக்க முடிவு செய்து வீட்டை விட்டுக் கிளம்பினான்.
"இந்த மனிதர்கள் சாப்பிடும் மது
என்பதே ஒரு விஷம் தான். அந்த விஷத்தில் வேறொரு விஷத்தை கலந்து
சாப்பிடப்போகிறான். சாவதற்கு ஒரு நல்ல வழி. சரி கடவுள் அவர்களே! உங்களுக்கான வாய்ப்பை நீங்கள்
பயன்படுத்தவே இல்லையே. என்ன! விஷத்தை அமுதமாக மாற்றப்போகிறீர்களா? அப்படிச் செய்தால் அது போங்கு ஆட்டம்.
உங்களின் மாய வித்தைகளை இந்த சவாலில் காட்டக்கூடாது. லாஜிக் இல்லையென்றால் படம்
மொக்கையாக இருக்கிறதென்று ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு பேயாட்டாம்
ஆடிவிடுவார்கள் பார்வையாளர்கள். பார்த்துக் கொள்ளும்" என்றார் சாத்தான்.
கடவுள் புன்னகைத்துக் கொண்டே "wait and see" என்றார்.
வீட்டை விட்டு கிளம்பும் முன் "உன்
பிரிவால் நான் சாகப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம்" என்று தன் (முன்னாள்)
காதலிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு, சாகப் போகிற எனக்கு செல்போன் எதற்கு?" என்று செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு கிளம்பினான். வீட்டை விட்டு
நான்கு தெரு தான் தாண்டி இருப்பான். யாரோ ஒரு ஆட்டோக்காரர் ரோட்டில் விழுந்து
கிடந்த ஒரு மனிதனை ஆட்டோவில் ஏற்றி வைக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தது
அவனுக்குத் தெரிந்தது. பாஸ்கரனைப் பார்த்த அந்த ஆட்டோக்காரர் "சார், சார் ப்ளீஸ் சார். இவன கொஞ்சம் ஆட்டோவுல
ஏத்த உதவி பண்ணுங்க சார். பாவிப் பய பொண்டாட்டி கோவிச்சி கிட்டு போய்ட்டான்னு
விஷத்த குடிச்சி தொலைச்சிட்டான். இப்ப இங்க வந்து சாகக் கெடக்கான். இவன் என்
ஃப்ரெண்டு தான் சார். இந்தப் பக்கம் சவாரி வந்தப்போ தற்செயலா பார்த்தேன். நல்லா
இருப்பீங்க. உங்களப் பாத்தா படிச்சவர் மாதிரி தெரியுது. புண்ணியமா போகும்.
கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்" என்று கதறினார். பாஸ்கரனுக்கு என்ன
செய்வதென்றே தெரியவில்லை. ஆட்டோகாரரின் கெஞ்சல் தாங்க முடியாமல் சரி சாகுறதுக்கு முன்னாடி ஒரு நல்ல காரியம் பண்ணிட்டு
சாவோம் என்று உதவ ஆரம்பித்தான்.
"இந்த சீன் நம்ம ஸ்க்ரிப்ட்லயே
இல்லயே" என்று அதிர்ச்சியோடு கடவுளைப் பார்த்தார் சாத்தான். கடவுள் தன்
வெண்தாடியை தடவிக் கொண்டே அழகாகப் புன்னகைத்தார். சாத்தானுக்கு ஒன்றும்
விளங்கவில்லை.
ஒரு வழியாக ஆட்டோவில் அந்த தற்கொலை
வாலிபனை ஏற்றியாகி விட்டது. ஆட்டோகாரர் தொடர்ந்தார் "சார், சார். இப்ப நீங்க எனக்கு இன்னொரு பெரிய
உதவி பண்ணனும் சார். உங்களுக்கு இப்ப எதுவும் வேலை இல்லன்னா என் கூட ஹாஸ்பிடல்
வரமுடியுமா சார்? எனக்கு ஹாஸ்பிடல்ல என்ன பண்ணனும்னுலாம்
தெரியாது சார். உங்களப் பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. ப்ளீஸ் சார்.
ஒரு உயிரக் காப்பாத்துறத விட முக்கியமான வேலை உங்களுக்கு எதுவும் இருக்காதுன்னு
நெனைக்கிறேன். நீங்களும் ஆட்டோவுல ஏறுங்க சார்" பாஸ்கரனை பேசவிடாமல்
அனைத்தையும் ஆட்டோகாரரே பேசி முடித்தார். ஆட்டோ கிளம்பியது. "சார் இவன்
பேரு மாதவன் சார். நான் இருக்குற தெருவுல தான் இருக்கான். பெரிய குடிகாரன்.
எப்பவும் வீட்ல ஒரே சண்ட. இவன் பொண்டாட்டி பாவம் சார். இவனோட எல்லா
சம்பாத்தியத்தையும் குடிச்சே அழிக்கிறதுனால அவ வேலைக்கு போக ஆரம்பிச்சி, இவனுக்கும் சேர்த்து கஞ்சி ஊத்திக்கிட்டு
இருக்குறா. தெருவுக்கு தெரு டாஸ்மாக் தொறந்ததுக்கு அப்புறம் பலபேர் குடும்பத்துல
அடுப்பு எரியுறதுக்கு பதிலா பல பேரோட வயிறு தான் சார் எரியுது. நாங்க முருகன்
குறிச்சியில 2வது தெரு சார். ஹாஸ்பிடல்ல அட்ரஸ்
கேப்பாங்க சார். சொல்லிடுங்க சார்"
ஒரு வழியாக ஹாஸ்பிடல் வந்தது. மாதவனை
மருத்துவமையில் சேர்த்து விட்டு எப்படியாவது எஸ்கேப் ஆகிவிடுவது தான் பாஸ்கரனின்
எண்ணம். ஐசியு வார்டு வாசலில் ஆட்டோ நின்றதும் மருத்துவமனை தள்ளுவண்டியில் மாதவன்
படுக்க வைக்கப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்பட்டான். "சார். இவனோட அண்ணன், சித்தப்பா எல்லாம் பக்கத்து தெருவுல தான்
இருக்காங்க. நான் தகவல் சொல்லி அவங்கள கூட்டிட்டு வந்துடுறேன். எப்படியாச்சும்
அது வரை பார்த்துக்கோங்க சார்" என்று சொல்லிக்கொண்டே அந்த ஆட்டோக்காரர்
அங்கிருந்து நகர்ந்து விட்டார். பாஸ்கரனின் எண்ணம் தவிடுபொடியானது. தன் தற்கொலை
எண்ணத்தை கொஞ்ச நேரத்துக்கு தள்ளி வைத்தான்.
அந்த இரவு நேரத்திலும் ஐசியு வார்டு பரபரப்பாக இயங்கிக்
கொண்டிருந்தது. உள்ளே வரக்கூடிய ஒவ்வொருவர் முகத்திலும் உயிர் வாழ்வதற்கான
ஆசையும், துணைக்கு வருபவர்களிடம் எப்படியாவது
பிழைக்க வைக்க வேண்டுமே என்ற பதட்டமும் தெரிந்தது. வார்டில் இருந்த ஒரு
கம்பவுண்டர் பாஸ்கரனிடம் மாதவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். விபரம் தெரிந்து
கொண்டு, அட்மிஷன் இத்யாதிகள் முடிந்தபின், "டாக்டர் சூசைடு கேஸ் சார். பாய்சன்
சாப்டுருக்கான்" என்றார்.
"என்ன பாய்சன்னு தெரியுமா சார்?" பாஸ்கரன் பதில் தெரியாமல் முழித்தான்.
"நீங்க யாரு? அவருக்கு என்ன வேணும்? சொந்தக்காரங்க யாரும் வரலயா? போலிஸ்க்கு இப்ப ரிப்போர்ட்
குடுக்கணும். இன்வெஸ்டிகேசன் பண்ண வருவாங்க. நீங்க இருந்து பதில் சொல்லிடுங்க.
நர்ஸ் கேஸ பெஞ்ச்ல படுக்க வைங்க. stomach
washக்கு ரெடி
பண்ணுங்க" என்றார் டாக்டர் கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல்.
அதற்குள் இன்னொரு ஆம்புலன்ஸ் வண்டி
அலறிக்கொண்டே உள்ளே வந்தது. வண்டியிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவரை
ஸ்டெரச்சரில் போட்டு உள்ளே கொண்டு சென்றனர். "நர்ஸ் உடனே வென்டிலேசன் ரெடி
பண்ணுங்க. injury
heavyஆ இருக்குற
மாதிரி இருக்கு. இந்த ஆக்சிடென்ட் கேஸ்க்கு "airway breathing
circulation" check பண்ணுங்க. MRI scanக்கு ரெடி பண்ணுங்க. தலையில காயம் பட்டுருந்தா உடனே தகவல் சொல்லுங்க.
முதல்ல இரத்தப்போக்க நிப்பாட்டுறதுக்கு பாருங்க. Pressure குறைக்க "Mannitol" inject
பண்ணிட்டே இருங்க. normal injuryயா இருந்தா டிரஸ்ஸிங் பண்ணுங்க. Bone injury இருக்குற மாதிரி இருந்தா operation ரெடி பண்ணுங்க" டாக்டரிடமிருந்து கட்டளைகள்
பறந்து கொண்டே இருந்தன. நர்ஸ் பெண்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டது போல் ஓடிக் கொண்டே இருந்தனர்.
பாஸ்கரனுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை.
அங்கிருந்து நகரலாம் என்று நினைத்து லேசா நகர்ந்தபோது, "சார். பேஷண்ட்ட விட்டுட்டு எங்க போறீங்க? பேஷண்ட் கூட தானே வந்தீங்க. இங்க இப்படி
தான் இருக்கும். இவர் தலைய நல்லா புடிங்க சார். வாமிட் எடுக்க
வைக்கணும். அப்ப தான் உள்ள ஸ்டோர்
ஆகிருக்குற பாய்சன் வெளிய வரும்" ஒரு நீளமான ட்யூப்பை ஒரு நர்ஸ் எடுத்து
வந்து மாதவனின் வாயில் நுழைக்கப் பார்த்தாள். மாதவன் சரியாக ஒத்துழைக்கவில்லை. அதற்கான
எதிர்வினை நர்ஸிடமிருந்து பாஸ்கரனுக்குக் கிடைத்தது. "என்ன சார் உங்காளு
இப்படி இருக்காரு. சரியா ஒத்துழைச்சா தானே காப்பாத்த முடியும். பிரச்சனன்னு விஷத்த
குடிச்சிடுறது. அப்புறம் பல பேர் உயிர எடுக்குறது. நீங்க ஒழுங்கா தலையப் புடிங்க
சார்" என்றாள். ஒரு வழியாக ட்யூப் உள்ளே நுழைக்கப்பட்டு சோப்புக் கரைசல்
உள்ளே செலுத்தப்பட்டது. ஆனால் மாதவனால் வாந்தி எடுக்க முடியவில்லை. மாதவனுக்கு
வராத வாந்தி கூடிய சீக்கிரம் தனக்கு வந்துவிடப்போவதாக பாஸ்கரன் உணர்ந்தான்.
பின்னர் விஷத்தை வெளியே எடுக்க
வைப்பதற்கான அடுத்த முயற்சியாக ஒரு நீளமான பச்சை கலர் ட்யூபை நர்ஸ் எடுத்துக்
கொண்டு வந்தாள். "இந்த ட்யூப இப்ப இவர் மூக்கு வழியா உள்ள நுழைக்கப் போறேன்.
நீங்க கவனமா புடிச்சா தான் ட்யூப் உணவுக்குழல் வழியா வயிற்றுக்குள்ள போகும்.
பேஷண்ட் கண்டிப்பா ஒத்துழைக்க மாட்டாங்க. அதுனால கவனமா தலைய கீழ சாய்ச்சி நல்லா
புடிங்க சார்" என்று பாஸ்கரனை எச்சரித்தாள். பாஸ்கரன் "இன்னக்கி பொழுது
இங்க தான் போல" என்று நொந்து போனான். பச்சை ட்யூப் மூக்கில்
நுழைப்பதற்குள் ஏழெட்டு தடவை மாதவன் தும்மல் எடுத்து விட்டான். பாஸ்கரன் அவன்
தலையைப் பிடிக்கவும், மாதவன் திமிறிக் கொண்டு தலையை அசைக்கவும், ட்யூப்பை உள்ளே செலுத்த முடியாமல் நர்ஸ்
கோபத்தில் பாஸ்கரனைத் திட்டவும் இப்படியான காட்சியை அங்கே இருப்பவர்கள் பலமுறை பார்க்க முடிந்தது. ஒரு வழியாக பச்சை
ட்யூப்பின் ஒரு முனை முக்கின் வழியே சென்று உணவுக்குழல் வழியாக வயிற்றை அடைந்தது.
"ஏ அந்த முருகேசன்... அதாம்லே போன வாரம்
தலையில அடிபட்டதுன்னு அந்த பெரிய தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்து லட்சம் லட்சமா
செலவு பண்ணி கடைசியில செலவு பண்ண வழியில்லாம இங்கன கொண்டு வந்து
செத்துப்போனான்லாடே. பாவம் அவன் வீட்டுக்காரி எல்லாத்தையும் வித்துப்புட்டு இப்ப
வெறுங்கையோட நிக்கிறா. சில தனியார் ஆஸ்பத்திரிகளே இப்படித்தான். காசு இருக்குற
வரைக்கும் தான் வைத்தியம் பாக்க முடியும். காசு இல்லாட்டா சில ஆஸ்பத்திரியில
பாவிப் பயலுக பொணத்த கூட தராம இழுத்தடிச்சிருவானுங்க. பொணத்துக்குல்லாம்
வைத்தியம் பார்த்து அதுக்கும் காசு வாங்கிக்கிறாங்கன்னு பேப்பர்ல படிக்கிறப்போ
பதட்டமா தான் இருக்கு. ஹ்ம்ம்! இந்த தர்மாஸ்பத்திரிக்கு எவன் வாரான். கையில்
கொஞ்சம் காசு இருந்தா, வைத்தியம் நல்லா பாப்பாங்கன்னு தனியார்
ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய்ட்டு பணத்தையும் தொலைச்சிடுறான், சில சமயம் உசுரு போனாலும் கேப்பார் இல்ல.
இப்பல்லாம் தர்மாஸ்பத்திரியிலயும் நல்லாத்தாண்டே பாக்குறாங்க. இதெல்லாம் எவனுக்கு
புரியப்போவுது" அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் அமர்ந்து கொண்டு
இரண்டு பெருசுகள் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் சத்தம்
கேட்ட வார்டு பாய் "இருக்குறவங்கள வேல செய்ய விடாம இங்க என்னத்த கறச்சல் பண்ணிகிட்டு. வெளிய போங்க. இங்கன இருக்கணும்னா
அமைதியா இருக்கணும். பெரியவரே நீங்க வெளிய போங்க" என்று ஒரு பெரியவரை வெளியே
அழைத்துக் கொண்டு சென்றார்.
டாக்டர் வந்து மாதவனின் வயிற்றைத்
தொட்டுப் பார்த்தார். பின்னர் அந்த பச்சைக் கலர் ட்யூபின் மறுமுனையில் ஊசியில்
வெறும் காற்றை நிரப்பி அதில் செலுத்தினார். மாதவனின் வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு
சத்தம் கேட்டது. பின்னர் ஒரு fluid மாதிரியான திரவம் கொண்டு வரப்பட்டு அந்த பச்சை ட்யூபில்
செலுத்தப்பட்டது. பின்னர் ஊசியை வைத்து உறிஞ்சி எடுக்க எடுக்க சாப்பிட்ட விஷம்
வெளியே வரத் தொடங்கியது. இப்பொழுது பாஸ்கரனுக்கு குமட்டிக் கொண்டு வர வெளியே
ஓடி வந்து வாந்தி எடுத்தான்.
பின் பாஸ்கரன் உள்ளே வந்து பார்க்கும்
போது மாதவன் குடித்திருந்த விஷம் செரிமானம் அடையாத உணவோடு கலந்து பாதி வாளியை
நிறைத்திருந்தது. "நல்லவேளை இவர் danger
zoneஅ cross பண்ணிட்டாரு. What a idiotic person he is..!!! விஷம் குடிச்சா உடனே உயிர் போய்டும்னு
நெனைக்கிறாங்க. விஷம்லாம் குடிச்சா உடனே உயிர் போயிடாது. தொண்டையில் இருந்து
நெஞ்சு வரை தாங்க முடியாத எரிச்சல் வந்து, உணர்வுகள் கொஞ்சம்,
கொஞ்சமாக
அறுந்துபோய், சமயத்தில வலிப்பு கூட வந்து அதுக்கு
அப்புறமா உசுரு போகும். இதவிட மோசம் ஹேர் டை குடிச்சிட்டு சாகுற கேஸ்கள். விஷம் வயித்துக்குள்ளயும்
இறங்காம, உணவுக்குழல், மூச்சுக்குழல்ன்னு அங்கங்க ஒட்டிக்கிட்டு, குழல சுருக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட வச்சி நரக வேதனையோட
தான் சாக வைக்கும். இந்த முடிவுக்கு வர்றதுக்கு பதிலா, வந்த பிரச்சனைய ஆயிரம் தடவ சமாளிச்சிடலாம். சார் நீங்க பேஷண்ட்க்கு என்ன Relation? எஸ்.ஐ வந்துருக்காரு" டாக்டர்
கேட்டார். "இவர் யாருன்னே தெரியாது டாக்டர். ரோட்ல வழியில விழுந்து
கிடந்தாரு. இவர இங்க கூட்டிட்டு வந்த ஆட்டோ டிரைவர்க்கு தான் இவர நல்லா தெரியும்.
ஒரு மணி நேரம் முன்னாடி வரைக்கும் இவர் யாருன்னே எனக்கு தெரியாது சார்"
என்றான் பாஸ்கரன். தலையை குனிந்து கொண்டு இருந்த பாஸ்கரனின் தோளில் கையைப்
போட்டு "Very good sir. what a kind
manner! இந்த காலத்துல இப்படி ஒரு ஆளா!!.
உங்களுக்கு ஒரு அவார்டே குடுக்கலாம் சார். keep
it up" என்று சொல்லிக் கொண்டே டாக்டர் அந்த
இடத்தை விட்டு நகர்ந்தார். பாஸ்கரன் குனிந்த தலையை நிமிர்த்தி நேராகப் பார்க்க
ஆரம்பித்தான்.
அப்போது விண்ணுலகில் சாத்தானின் தலை தொங்கிப் போயிருந்தது. ஆனால் இந்த முறை கடவுள் புன்னகை செய்யவில்லை. அந்த வேலையை ஆஸ்பத்திரியில்
இருந்த அந்த நர்ஸ் எடுத்துக் கொண்டாள். கொஞ்சம் அழகாயிருந்த அந்த நர்ஸ் புன்னகை செய்ய பதிலுக்கு பாஸ்கரனும் புன்னகைத்தான். தற்கொலை செய்யும் எண்ணம் பாஸ்கரனுக்கு
மறந்து போயிருந்தது கடவுளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஏன் நமக்கும் தான்!
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு
- திருக்குறள் : 630
(தற்கொலைக்கு எதிரான மனநிலையோடு வாழும் அனைத்து உயிர்களுக்கும் இந்தக்
கதை சமர்ப்பணம்)
என்றும்
புன்னகையுடன்
வெ.அருண்பாரதி
கடவுள் புன்னகைத்தார்....- வெ.அருண்பாரதி - இளைஞர், சுறுசுறுப்பானவர். மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். முகநூலில்
பதிலளிநீக்குArun Bharathi Ramalakshmi என்ற பெயரில் இருக்கிறார். கவனிக்கப்பட வேண்டிய இளைஞர். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு
Arun Bharathi Ramalakshmi
Mikka nandri ayya.
நீக்கு