நேற்று ஒரு முக்கியமான பத்திரம் கிடைக்க வீட்டையே தலைகீழாகப் புரட்டி தேட வேண்டியிருந்தது. வீட்டின் எல்லா அறைகளைகளையும் அலசியாயிற்று. ஆனால் கிடைத்த பாடில்லை. எங்கே போனது என்றும் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் கடைசி முயற்சியாக வீட்டு பரணின் மேல் இருந்த ஒரு பழைய டிரெங்கு பெட்டியை கீழே இறக்க வேண்டியதாகப் போய்விட்டது. மிகக் கடுமையாக பாரம் இருந்தது. ஒரு வழியாக கீழே இறக்கி விட்டேன். இறக்கியதும் பார்த்தேன் பூட்டிக் கிடந்தது. சாவி எங்கே என்று தெரியவில்லை. பூட்டு உடைப்பட்டது.
திறந்து பார்க்கையில் எனக்கான சின்னச் சின்ன அதிசயங்கள் காத்துக் கொண்டிருந்தன. சிறு வயதில் நான் விளையாட பயன்படுத்திய பொருட்கள், பழைய சட்டை, ஏதேதோ டைரிகள் என்று அதிசயங்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன. அவைகளைப் பார்க்க பார்க்க எதற்காக இந்த டிரெங்கு பெட்டியை திறந்தோம் என்ற ஞாபகமே மறந்து விட்டது. பெட்டியிலிருந்த சாமான்களில் பாதியை வெளியே எடுத்து வைத்து விட்டேன். ஒரு மஞ்சள் பையில் மேலும் பல அதிசயங்கள். எல்லாம் பொக்கிஷம்.
சின்ன வயதிலிருந்தே நான் ஒரு பாட்டுப் பைத்தியம். ஏதாவது சினிமாப் பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அந்த பெரிய மஞ்சள் பையில் பழைய பாடல்களின் ஆடியோ கேசட்களும், அப்போது வெளியாகியிருந்த படங்களின் பாடல் கேசட்களும், கதை வசன கேசட்களும் நிரம்பி இருந்தன. கூடவே பாட்டு புத்தகங்களும் இருந்தன. செல்வம், சாந்தி நிலையம், எங்க வீட்டுப் பிள்ளை, மறுபடியும், கும்பகரை தங்கையா போன்ற திரைப்படங்களின் ஆடியோ கேசட்கள், லவகுசா, வசந்த மாளிகை, புதிய பறவை, கேப்டன் பிரபாகரன், ஏழை ஜாதி போன்ற திரைப்படங்களின் கதை வசனம் கேசட், எஸ்.வி.சேகரின் வால் பையன், சின்ன மாப்ளே, பெரிய தம்பி போன்ற நகைச்சுவை நாடகங்களின் ஆடியோ கேசட்கள், ராம்ஜி ஆடியோவின் முற்போக்குப்பாடல்கள், கூடவே திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் என அந்த மஞ்சள் பெரிய பையில் அதிசயங்கள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தன.
3 வயதிலிருந்தே பாட்டு கேட்பது என்பது எனக்கு கொள்ளைப் பிரியம். எனது பக்கத்து வீட்டு ரவி மாமா தன் நெசவு தறிக்கு பக்கத்தில் ஒரு பெரிய ஆடியோ ப்ளேயரை வைத்திருப்பார். அப்போது வெளியான கரகாட்டக்காரன் பாடத்தின் பாடல்கள் செமஹிட் அடித்துக் கொண்டிருந்த நேரம். கரகாட்டக்காரன் என்று என் வாயில் கூட நுழையாத சமயம் அது. அவரின் வீட்டுக்குப் போய் "கட்டன்" பாட்டுப் போடுங்க என்று அவரை பாடாய் படுத்தி எடுத்திருக்கிறேன்.
எனக்கு 7 வயது இருக்கும் போது பெரியம்மை நோயால் கடுமையாக பாதிப்பட்ட போது எனது பொழுது போக்கிற்காக என் தந்தை ரவி மாமாவிடம் இருந்து செய்து வாங்கி ஒரு பழைய டேப் ரிக்கார்டர் தான் எனது முதல் சொத்தாக இருந்தது. அந்த டேப் ப்ளேயரை என்னவெல்லாமோ பாடு படுத்தி இருக்கிறேன். அதில் இருக்கும் கேசட்டை பாடக்கூடிய மெக்கானிசத்தை பல முறை கழட்டி மாட்டியிருக்கிறேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அந்த டேப் என்னை சந்தோசப்படுத்தி வந்திருக்கிறது.
பெரும்பாலும் எங்கள் பகுதியில் ஆரம்ப காலங்களில் நெசவுத் தொழிலே பிரதான தொழில் என்பதால் எல்லா வீடுகளிலும் கேசட் பிளேயர் அல்லது முடிந்த மட்டும் ரேடியோவாவது இருக்கும். டிஎம்எஸின் முருகன் பாடல்கள், சுப்ரபாதம் எல்லா வீடுகளிலும் காலை நேரங்களில் கேட்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான கல்யாண வீடுகளில் ஒலிப்பது புதிய பறவை, தில்லானா மோகனம்பாள் கதை வசன கேசட்கள் தான். தறி நெய்யும் போதும் அலுப்பும், சலிப்பும் ஏற்படாமல் இருக்க பாட்டு கேட்டுக் கொண்டே தறி நெய்வது தான் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு. பகல் முழுவதும் தறி. மாலை நேரங்களில் சினிமா. அதுவும் அந்த அசோக் தியேட்டரில் 80 காசுகளுக்கு தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு படத்தைப் பற்றி அளவளாவிக் கொண்டே வீடு வரை நடந்து வருவதை யாராலும் மறக்கவே முடியாது. படத்தின் இடைவெளியில் சிறுவர்களும், பெரியவர்களும் "கள்ள, முருக்கு..., கள்ள, முருக்கு" என்று நாம் இருக்கும் இடத்திலேயே வந்து விற்பார்கள். அந்த முருக்கும், கடலையும் இந்த உலகின் எந்த மூலையிலும் கிடைக்காது. இப்படியாகத் தான் இருந்தது எங்கள் பகுதியின் மக்கள் வாழ்வும், பொழுதுபோக்கும். ஏறக்குறைய என்னுடையது அப்படி தான். தொழில்நுட்பம் வளர்ந்த பின் சதா சர்வஉலகின் அடிப்படையும் பணமென்று மாறிப் போன பின் எங்கள் பகுதியில் நெசவாளர்களின் எண்ணிக்கையும், கேசட்களும், டேப் ரிக்கார்டர்களும் காணாமல் போய்விட்டது. அந்த அசோக் தியேட்டரில் கடைசிப் படம் திரையிட்டு ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேல் இருக்கும். தியேட்டரில் புல் முளைத்து சிதிலமடைந்து விட்டது. அங்கே இன்று என்று போஸ்டர் ஒட்டும் பகுதியில் செந்தூரப்பூவே போஸ்டர் இன்னும் கிழிபடாமல் பழைய சோகமான கதைகளை போவோர் வருவோரிடம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது இப்பொழுதும்.....
என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

