வெள்ளி, 8 ஜூலை, 2011

கறை படியும் காவல் துறை

      சமீப காலங்களில் வரும் செய்திகளைப் படித்தால் சிரிக்கவா, அழவா, வருத்தப்படவா என்று தெரியவில்லை. செய்திகள் மிக வித்தியாசமாக வருகிறது. "எஸ்.பி அலுவலகத்தில் திருட்டு, சப் இன்ஸ்பெக்டரை போலிஸ் தேடுகிறது" என்பது போன்ற செய்திகள். உலகத்திலேயே மிகச் சிறந்த காவல்துறையின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக பெருமையுடன் சொல்லப்படும் காவல்துறை குற்றங்களின் புகலிடமாக மாறத்துவங்கி இருக்கிறது. காவல்துறையில் இருக்கும் சிலர் செய்யும் குற்றங்கள் ஒட்டுமொத்த காவல்துறையையே சங்கடப்படுத்தும், சந்தி சிரிக்க வைக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டதன் வேதனையை எங்கே போய் சொல்வதென்றே தெரியவில்லை.

        சட்டங்களை நிலைநாட்டி, பொதுமக்களை ரவுடிகளிடமிருந்தும், சமூக விரோதிகளிடமிருந்தும் காவல்துறை பாதுகாத்த காலம் போய் காவல்துறையிடமிருந்து காவல்துறையை பாதுகாக்க புதிதாய் ஏதேனும் வழி பிறக்காதோ எனும் நிலை வந்து விட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு புதிய காவல்துறை அதிகாரி பதவியேற்றவுடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பார். காவல் துறையின் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். பொதுமக்களும் விழிப்போடு இருந்தால் தான் நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஏதுவாக இருக்கும் என்று. ஆனால் தற்போது காவல்துறையில் இருப்பவர்களே பொதுமக்களின் பார்வையில் ஆபத்தானவர்களாக, குற்றம் புரிபவர்களாக மாறத்துவங்கி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் குற்றச்செயல் புரிபவர்களின் பட்டியலில் காவல்துறையே முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.

         திண்டுக்கல்லில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு போதை ஆசாமி குடிபோதையில் சிறப்பு துணை ஆய்வாளரையும், பிற காவலர்களையும் தாக்கிய சம்பவம் ஒட்டு மொத்த காக்கிகளின் சட்டையில் கரியைப் பூசி விட்டது. திருச்சியில் குடிபோதையில் ஒரு இன்ஸ்பெக்டர் ஊருக்குப் போக வந்த ஒரு பெண்ணை கடத்தி காவல் துறையின் மானத்தை கப்பல் ஏற்றி விட்டார். முதுகளத்தூரில் தன் கணவரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையம் சென்று முறையிடப் போய் அங்க ஒரு காவலரின் கொடுமைகளுக்கு ஆளாகிவிட்டார். ஆம்பூரில் தன் சொந்த பெற்றோரையே ஒரு சப்இன்ஸ்பெக்டர் கொலை செய்த சம்பவம் கொடுரத்தின் உச்சகட்டம். இப்படியாக காவல்துறையின் குற்றப்பட்டியலே சீனப்பெருஞ்சுவரின் நீளத்தைத் தாண்டி விடும் போலிருக்கிறது. இது போன்ற செயல்களால் ஏற்கனவே கயவர்களால் பாதிப்புக்குள்ளாகி பயந்து கிடக்கின்ற பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்.

              "காவல்துறை உங்கள் நண்பன்" என்று மானாவாரியாக சொல்லிக் கொள்ளும் காவல்துறை என்று இந்த களங்கங்களை துடைத்துக் கொள்ளப்போகிறது? கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, மோசடி போன்ற குற்றங்கள் என்றும் இல்லாத அளவு பெருகி நாறிக்கிடக்கும் இந்தச் சூழலில் காவல்துறையில் சிலர் செய்துவரும் இது போன்ற குற்றங்கள் குற்றவாளிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைத் தான் காட்டுகிறது. காவல்துறையினருக்கு நிச்சயமாக "கவுன்சிலிங்" தேவைப்படுகிறது. தப்பு செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டுமானால், தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தைத் தொட வேண்டுமானால் முதலில் இது போன்ற கறை படிந்த காக்கிகளை களையெடுக்கவேண்டும். சம்பளத்திற்கு மட்டும் ஆசைப்படுபவர்களாக, மக்களை நேசிப்பவர்களாக, உண்மையான குற்றவாளிகளுக்கு எமனாக காவல்துறை மாறவேண்டும். இதுதான் மக்களின் கருத்து, ஆசையும் கூட...

      குறைக்கப்பட வேண்டியவை காவல்துறை அதிகாரிகளின் தொப்பைகள் மட்டுமல்ல, குற்றங்களும் தான்....... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக