வெள்ளி, 22 ஜூலை, 2011

மறக்க முடியாத தமிழ் சினிமாக்கள் - (பாகம் - 4)


             ஏறக்குறைய எம்.கே.தியாகராசரின் "ஹரிதாஸ்" செய்த  சாதனையை இது வரை எந்தத் திரைப்படமும் முறியடிக்கவில்லை எனலாம். 1944ல் வெளியான இந்தத்திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் 768 நாட்கள் ஓடியது (ஓட்டப்பட்டது அல்ல). மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே திரைப்படமும் இதுதான். இந்தப் படத்தில் பாகவதரோடு டி.ஆர்.ராஜகுமாரி சேர்ந்து நடித்திருந்தார். 

            இந்த காலத்தில் வரும் படங்கள் 50 நாட்களைத் தாண்டினாலே வெற்றி விழா என்று அலப்பறை பண்ணுகிறார்கள். அதிலும் அந்தப்படத்தில் நாயகிக்கு எந்த வேலையும் இருந்திருக்காது. அந்த நாயகி வெற்றி விழா கொண்டாட்டத்தில் பண்ணுகிற பந்தா இருக்கிறதே. எப்பா தாங்க முடியாது. என்னமோ இவரால் தான் அந்தப் படமே ஓடியதாகவும், தான் இல்லாமல் இந்த வெற்றி இல்லவே இல்லை என்று அளந்து விடுவார். அடுத்ததாக அவரை அணுகும் இயக்குநர்களிடம் அவர் பேசும் சம்பளமும், வைக்கிற கண்டிசன்களும் இயக்குநரை பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடச் செய்து விடும். இப்படி செய்த எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. 
அந்த காலத்தில் நடிகைகள் தனியாக கேரவன் கேட்டார்களா? இது தான் சாப்பிடுவேன் என்று கண்டிசன் போட்டார்களா என்று தெரியவில்லை. அந்த காலத்து நடிகைகளிடம் திறமை இருந்தது, நடிப்பு இருந்தது. ஆனால் இந்த காலத்து நடிகைகளிடம் நடிப்பை விட அதிக "தாராளம்" மட்டும் தான் இருக்கிறது. மொழி, பருத்தி வீரன், பூ போன்று நடிக்க வாய்ப்புள்ள படங்கள் தற்போது குறைவாக வருவதும் ஒரு காரணம். அந்த காலத்தில் பத்மினி, ராஜசுலோச்சனா போன்ற நடிகைகளுக்கு தமிழ் தாய் மொழி இல்லை எனினும் தமிழை கற்றுக் கொண்டு எல்லாப் படங்களிலும் அவர்களே பின்னணியும் பேசி நடித்தும் உள்ளனர். தில்லானா மோகனம்பாள் படத்தில் நடிக்கும் போது பத்மினிக்கு உண்மையில் 39 வயது ஆனால் அந்த படத்தில் வெறும் 18 வயது பெண்ணாக தன் உடலை மெருகேற்றி நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார் பத்மினி. அதில் எல்லாப் பாடல்களையும் அவரைச் சுற்றியே இருக்கும். பெரும்பாலும் பழைய படங்களில் பெரிய நட்சத்திரம் நடிக்கும் படத்தில் ஹீரோவுக்காக பாடல் ஒன்று இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத மரபு. ஆனால் தில்லானா மோகனம்பாள் படத்தில் எந்தப் பாடலும் சிவாஜி பாடுகின்ற மாதிரி வராது. அந்த அளவுக்கு நடிகைகள் அந்த காலத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்து வந்துள்ளனர்.

         சரி நம்ம பாகவதர் கதைக்கு வருவோம்.  1934ல் அவர் நடித்த "பவளக் கொடி" நாடகம் பின்னாளில் திரைப்படமாகவும் வெளி வந்து சக்கை போடு போட்டது. அத்திரைப்படத்தை கே.சுப்பிரமணியம் அவர்கள் இயக்கியிருந்தார். மீனாட்சி சினிடோன் நிறுவனம் தயாரித்திருந்தது. பாகவதரோடு எஸ்டிசுப்புலெட்சுமி அவர்கள் நடித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் எம்.கே.தியாகராசபாகவதர்.

          இந்த நேரத்தில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்கள் 1939ல் இயக்கிய தியாகஞபூமி படத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் அந்தப்படம்
பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம்.  படம் வெளியிடபட்டுவிட்டது.  சில நாட்களில் காங்கிரஸ் பிரசாரப் படம் என்று நினைத்து அரசு தடை செய்ய தீர்மானித்தது.  இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்-இயக்குனர் கே.சுப்ரமணியம் மக்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தடை உத்தரவு வரும் முன் அனுமதி இலவசம் என்று அறிவித்து தொடர்ந்து பல காட்சிகள் நடத்தினார்.  படத்தில் நாயகி, கடைசி காட்சியில் காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் சென்று பாடிக்கொண்டு செல்வது போன்ற காட்சியிருந்தது.  பாரதியார் பாடல்-டி.கே.பட்டம்மாள் பாடல்.  படம் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே பட ஸ்டில்களுடன் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது.

             பின்னாளில் படங்கள் தயாரிக்கக்கூட செய்தார் பாகவதர். 1936ல் வெளிவந்த சத்யசீலன் என்ற படத்தை அவரே தயாரித்தார். திருச்சி தியாகராசா பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வெளியிட்டார். சத்யசீலன் படத்தில் அரசனாகவும், சமூக அவலங்களைப் பாடும் மேடைப் பாடகனாகவும் நடித்திருந்தார் பாகவதர்.

            பாகவதரை வைத்து படம் தயாரிப்பதற்காகவே மதுரையைச் சேர்ந்த சில செல்வந்தர்கள் "ராயல் டாக்கீஸ்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். பாகவதரின் வெற்றிப் படமான "சிந்தாமணி" படத்தை 1937ல் தயாரித்தது இந்த நிறுவனம் தான். சிந்தாமணி வெற்றிக்குப் பிறகு ராயல் டாக்கீஸ் "சிந்தாமணி டாக்கீஸ்" என்று பெயர் மாற்றம் ஆனது. 1936ல் வெளியான நவீன சாரங்கதாரா படத்தில் பாகவதர் பாடிய "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல் தான் இசைத்தட்டில் வெளிவந்த முதல் பாடல் என்ற உண்மையைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அதே 1937ல் பாகவதரின் நடிப்பில் வெளிவந்த படம் "அம்பிகாபதி". தமிழ் இலக்கிய உலகின் காதல் ஜோடிகளான அம்பிகாபதி-அமராவதியின் காதல் கதை தான் இந்தப் படம். 
பொதுவாக பாகவதர் நடித்த படங்கள் எல்லாமே புராணக்கதைகள் உள்ள படங்கள் தான். எல்லா படங்களிலும் இறைவனைப் பாடும் பக்தனாக பாகவதர் நடித்திருந்தார். அசோக்குமார் படமும் ஏறக்குறைய இந்த வகையறா தான். ஆனால் அசோக்குமார் பின்னாளில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் அந்தப்படத்தில் பாகவதரை கைது செய்கிற சிப்பாயாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தவர் பின்னாளில் அசைக்கமுடியாத நடிகராகவும், தமிழகத்தின் மறக்க முடியாத முதலமைச்சராகவும் வலம் வந்தவர் ஒருவர் நடித்திருந்தார். அவர் வேறு யாருமில்லை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். 

             பாகவதரின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் நிறைய உண்டு. அந்த காலத்தில் 42 பாடல்கள் நிறைந்த உன்னத காவியம் ஹரிதாஸ் என்று சாதாரணமாக விளம்பரம் செய்வார். ஒரு படத்தில் எப்படி தான் 42 பாடல்கள் வரை வருகிறது என்பது நமக்கு ஆச்சரியமான விசயமாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் வெறும் 5 பாடல்கள் இருந்தாலே அது பெரிய விசயமாகப் படுகிறது. அதுவும் பாடல்கள் வந்தால் போதும் வெளியே போய் "தம்" அடிக்கிறவர்களைத் தான் தற்போது அதிகம் பார்க்கிறோம். அந்த காலத்தில் மக்கள் இசையை ரசித்தார்கள். ஆனால் தற்போது இசையை ரசிக்கிறவர்கள் குறைந்து விட்டார்கள்.

            இப்படியாக பாகவதர் நடித்த எத்தனையோ படங்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. புகழின் உச்சத்தில் இருந்த பாகவதர் வாழ்க்கையில் விதி விளையாடத்துவங்கியது ஒரு பத்திரிக்கையாளனில் வடிவில். அந்த சம்பவத்திற்குப் பிறகு டைனோசர் சைசில் இருந்த பாகவதர் புகழ் மெதுவாக சுருங்கி சுருங்கி எறும்பு சைசில் மாறிப் போனது ஆன்டி கிளைமாக்ஸ். அது என்ன சம்பவம்? எதனால் நடந்தது? என்று இனி வரும் பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்...........)


தங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.......

என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக