தினமும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும் சென்று வர நான் பேருந்து பயணத்தையே விரும்புவதுண்டு. அதிலும் பயணம் குறைந்தது 25 நிமிடங்களுக்கு மேலாகும் என்பதால் ஏதாவது புத்தகத்தைத் தூக்கி வாசிக்கவோ அல்லது கூடிய மட்டும் வாசிப்பது போல் நடிக்கவோ ஆரம்பித்து விடுவேன். சன்னலோரத்தில் அமர்ந்தாலும் வேடிக்கை பார்க்கிற பழக்கம் ஆரம்பங்களில் இருந்தாலும், பிற்பாடு ஒரே வழிப் பயணம், பார்த்துப் பார்த்து சலித்த இடங்கள் என்பதால் புத்தகங்களுக்குள் மூழ்க வேண்டியதாகப் போய்விட்டது.
மேலும் யாராவது தெரிந்தவர் பேருந்தில் ஏறி விட்டாலோ, பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ போதும். எனக்கு வேர்த்து விடும். அவரிடம் பேச வேண்டுமே என்ற நிர்பந்தம் என்னை பாடாய் படுத்தி விடும். நன்றாகத் தெரிந்தவர் என்றால் கூட பரவாயில்லை பேசுவதற்கு ஏதாவது இருக்கும். ரொம்ப அறிமுகமில்லாதவர் வந்தால் என் கதி அதோ கதி தான். பெரும்பாலும் நான் ஒரு தனிமை விரும்பி. ஆனால் என்னைத் தெரிந்தவர் அப்படி இருக்க வேண்டும் என்று என்னால் எதிர்பார்க்க முடியாதல்லவா. அதனாலேயே தெரிந்தவர்கள் ஏறிவிட்டால் அவர்களை கவனிக்காதது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதற்காக நான் கண்டுபிடித்த யுக்தி தான் ஒரு புத்தகத்தை விரித்து வைத்து படிப்பது போல் பவ்லா செய்வது என்பது.
ஆனாலும் சிலர் நீ விடாக் கொண்டேன் என்றால் நான் கொடாக் கொண்டேன் என்று நிரூபிப்பதற்காக அழைத்துப் பேச முயற்சிப்பார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைப்பதோடு ஒரு சில குசலம் விசாரிக்கின்றபடியான கேள்விகளைக் கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவேன். இதனாலேயே சில சமயங்கள் பேருந்துப் பயணங்கள் புடிக்காமலே போய்விடும். ஆனாலும் பேருந்தில் செல்லவே மனம் விரும்பும்.
பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டால் நான் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு என்னை மாற்றிக் கொள்வேன். சில்லறைச் சண்டைகள், இருக்கைப் பிரச்சனைகள், சினிமாப் பாடல்களின் சத்தம், குலுங்கி குலுங்கி தள்ளாடும் பேருந்து, வேகமாகப் போய் பிரேக் போடும் போது டிரைவரை வசவு மழையால் அர்ச்சிக்கும் கிழவிகளின் சத்தம், முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவர் அவரோடு வந்திருந்திருந்த நண்பரை தன் அரசியல், சமூகஅறிவு ஞானத்தால் திணற வைத்துக் கொண்டிருக்கும் சூடான விவாதம், குழந்தையின் அழுகை இது போன்ற எந்த சத்தமும் என்னைப் பாதிக்காத மாதிரி தியானத்தில் மூழ்கிப் போயிருக்கும் வசிஷ்டரைப் போலாகிப் போய்விடுவேன்.
இப்படியாக கடந்த என் நாட்களும், பயணங்களும் ஒரு நண்பரால் திசை மாறிப் போன வரலாறு உண்டு. ஒரு முறை என் கல்லூரி நண்பர் ஒருவருடன் சேரன்மகாதேவியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்தேன். வழக்கம் போல கொஞ்ச நேரம் அவரோடு உரையாடிவிட்டு வேறு எங்கும் வேடிக்கை பார்க்காமல் புத்தகத்தில் மூழ்கிப் போய்விட்டேன். என் நண்பரும் தன் பேச்சை முடிக்காமல் ஏதாவது பேசிக் கொண்டே வந்தார். அவரின் பேச்சு என் காதில் விழுந்தது மாதிரி காட்டிக்கொள்ள ம்ம்ம் மட்டும் சொல்லிக் கொண்டு வந்தேன். பேட்டையை கடந்து வண்டி டவுண் தொண்டர் சன்னதியை தொடுவதற்கு தயாராக இருந்தது. நண்பர் இன்னும் பேச்சை நிறுத்தியதாகத் தெரியவில்லை. ஏதோ என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். அவரிடமிருந்து தப்பிக்க செல்போனை எடுத்து எனது நண்பனுக்கு போன் பேச ஆரம்பித்து விட்டேன். அவனும் சரியாக கம்பெனி கொடுப்பது போல நன்றாக பேசினான். ஒரு வழியாக பஸ் டவுண் மேம்பாலத்தில் ஏறி ஜங்சனை நெருங்கிக் கொண்டிருந்தது. இறங்குவதற்கு தயாராக இருந்த சமயத்தில் அந்த நண்பரிடம் "ஏடே ஏதோ அப்பல இருந்து பொலம்பிட்டே வந்தல்லா. அது என்னன்னு இப்ப சொல்லு. எனக்கு அப்ப வேற ஒரு ஒர்க் இருந்ததுனால சரியா கவனிக்க முடியல" என்றேன். அதற்கு அவன் "அடப்பாவி நான் சொன்னது எதுவும் நெசமாவே உன் காதுல வுழலயா? கல்லூர்ல ஒரு செவத்த பொண்ணு ஏறிச்சுயா. அவ ஏறுனதுல இருந்து உன்ன தான் பார்த்துகிட்டே வந்துச்சி. உன் கிட்ட பேச கூட டிரை பண்ணிச்சி கூட்டம் இருந்ததுனால முடியல. அவ பாக்குற பார்த்தா உன் லவ் பண்றவளா இருக்கும்னு நெனைக்கேன். ரொம்ப நேரம் உன்னையே பார்த்துட்டு வந்தா" என்றான். அவன் சொல்லி முடித்ததும் என் கண்கள் தன்னிச்சையாக அவளைத் தேடத் தொடங்கின. பேருந்து ஜங்சன் பஸ்ஸடாண்டை தொட்டு பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக