சவரன்கள் இல்லாததால்
வரன்கள் அமையவில்லை
என் மகள் தங்கத்துக்கு....
வெளிச்சம் கிடைக்க
விளக்கை தேடினேன்
விளக்கு கிடைக்க
அங்கே தேவைப்பட்டது
வெளிச்சம்....
நனவாகிறது
ஏழையின் கனவு
சினிமாவில் மட்டும்.....
எத்தனை முறை கல்லெறிந்தாலும்
நகரவில்லை
குளத்தில் நிலா....
அணையப்போகிறது மெழுகுவர்த்தி
பயத்தில் சிறுவன்
நாளைக்குப் பரீட்சை
மழைக்காக ஒதுங்கியும்
நனைந்து விட்டோம்
ஓட்டைப்பள்ளிக்கூடம்....
காலிக்குடங்களுடன் சாலை மறியல்
நீரை பீய்ச்சி அடித்து துரத்தியது
அரசு......
நவீனத்திற்கு மாறியது
மூடத்தனம்
கம்ப்யூட்டர் ஜோசியம்.....
வெள்ளையனானார் காந்தி
காகம் போட்ட
எச்சத்தில்.....
பசியால் இறந்தவனுக்கு
பத்து நாள் விருந்து
பாலுக்கு வழியன்றி
அழுதது குழந்தை
பக்கத்து கோவிலில் பாலாபிஷேகம்.....
கள்ள நோட்டிலும்
கபடமற்ற சிரிப்பு
காந்தி தாத்தா....
நாளை பள்ளி விடுமுறை
வருத்தப்படுகிறாள்
சத்துணவுச் சிறுமி......
மழை நின்ற பிறகும்
தூறல்
மரக்கிளை....
தெரியாமல் பறிபோனது கிடைக்க
தெரிந்தும் பறிகொடுத்தேன்
லஞ்சம்...
வாஸ்து பார்த்து கட்டியும்
பறிபோனது வீடு
கடன்....
உறவினர்கள் வருகை
அடகுக்காய் காத்திருக்கிறது
அண்டா.....
கரையேறிய அலைகள்
காவு கேட்டது உயிர்களை
சுனாமி....
"யார் என்னைத் தத்தெடுப்பார்கள்"
ஏக்கத்தில் என் கவிக்குழந்தைகள்
மரணப்படுக்கையில் நான்....
சோதனைக்குழாய் குழந்தை
பிறப்பதை விசித்திரமாய் பார்த்தது
அநாதை இல்லக் குழந்தை....
யாரிடம் கடன் வாங்க?
என் மனதில்
கற்பனைப் பஞ்சம்....
மழை வர
நடந்தது கழுதைக் கல்யாணம்
வந்தது கழுதைக் குட்டி....
வேட்டையாடப்பட்டது பறவைகள்
அநாதையானது
மரம்.......
விழித்திருந்து வாங்கிவிட்டோம்
வாங்கியதும் உறங்கிவிட்டோம்
சுதந்திரம்.....
மாதந்தோறும் பிரசவிக்கிறது
என் கடன் வட்டி....
மாணவன் அழுவதற்கு முன்பே
மரம் அழுதது
பிரம்புக்குச்சி.....
குளம் வெட்ட வந்த நிதி
பாதியை வெட்டிக் கொண்டார்
மந்திரி.....
என்னைக் கடலில் கரையுங்கள்
அலறியது பிள்ளையார் சிலை
அங்கே மதக் கலவரம்.....
வீட்டில் வலையிருந்தும்
மீன் பிடிக்க முடியாது
சிலந்தி வலை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக