செவ்வாய், 5 ஜூலை, 2011

சில நிஜங்கள்





        போகப் போக இந்த லோகநாயகி சுபாவமே சரியில்லாம போயிடுத்து மாமி. ஆரம்பத்துல நல்ல பொம்மனாட்டியா, ஆத்துக்கு அடக்கமான மருமகளா இருந்தா, ஆனா இப்ப ரொம்ப மோசமானவளா மாறிட்டா. நேக்கு ரொம்ப கஷ்டமா போயிடுத்து மாமி. குடும்பத்துக்கு குத்து விளக்கா இருக்க வேண்டியவ இப்படியா பொறுப்பில்லாதவளா மாறணும்? மாமியார கொஞ்சம் கூட மதிக்கிறதில்ல. எல்லாத்துக்கும் எதிர் பேச்சு தான். அவா ஆத்துக்காரன் அதான் அந்த வினோத்துப்பய இவள லவ் மேரஜ் பண்றதுக்கு முன்னாடியும் இவள சுத்தி சுத்தி தான் வந்தான். இப்பவும் சுத்தி தான் வாரான். இதுல அவனுக்கு வெளியூர்ல வேல கிடச்சி போயிட்டான். வாரத்துக்கு ஒரு நாளோ ரெண்டு நாளோ தான் அவனால வீட்டுக்கு வர முடியும் . இனிமே இந்த லோக நாயகி பண்ணப்போற கூத்தெல்லாம் எங்க அவனுக்கு தெரியப்போறது?

            அவ அம்மாக்கும், அவ மாமியாக்கும் ஒரே வயசு தானே இருக்கும். அம்மாவுக்கு குடுக்குற மரியாதைல கொஞ்சம் கூடவா மாமியாருக்கு இவ கெடுக்கப்பிடாது? தன் மாமியாருக்கு விஷம் கலந்து குடுக்குற அளவுக்கு துணிஞ்சிட்டாளே பாதகத்தி. எல்லாம் அந்த சிவா, அதான் அவ கள்ள புருஷன், வினோத் சினேகிதன் சொல்லிக்குடுக்குற ஐடியா தான். வினோத்துக்கு உள்ளுர்ல கெடைக்க வேண்டிய வேலைய வெளியூருக்கு மாத்தி விட்டதே இந்த சிவா தான். இந்த சிவா வினோத் ஆத்துல காலடி எடுத்து வச்சத்துக்கு அப்புறம் இந்த பிரச்சனை எல்லாமே. இப்ப பாருங்க தன் சினேகிதன் வீட்டுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டான் சண்டாளன்.

             சிவா மோசமானவன்னு தெரிஞ்சிக்காம அவன வீடு வரைக்கும் வர விட்டது வினோத் தப்பு. சிவா போட்ட சொக்கு பொடியில மயங்கி அவன் வலையில விழுந்தது லோகநாயகி தப்பு. இந்த லோகத்துல மனுசாள நம்பவே முடியிறதில்ல மாமி. யாரு நல்லவா? யாரு கெட்டவா? ன்னே தெரிய மாட்டேங்கிறது. எல்லாரும் பாக்குறதுக்கு நல்லவா மாதிரிதான் தெரியுறா. ஆனா பழகிப்பாத்தா தானே தெரியுறது அவா, அவா யோக்கியதை என்னான்னு.

       என்ன பொம்மனாட்டி இவா? இந்த சிவா ஆத்துக்கு வந்தாலே போதும் எல்லாத்தையும் மறந்து அவன் கூட பேச ஆரம்பிச்சிடுறா. அப்படி என்னத்த தான் பேசிப்பாளோ. நேக்கு ஒரு மண்ணும் புரியல. ஒரு தடவ இப்படித்தான் லோகநாயகி சிவா கூட பேசிட்டு இருந்தா. அப்போ அவ குழந்தைய தேள் கடித்திடுத்து. தொட்டில்ல கெடந்து அந்த பச்ச மண்ணு துடியா துடிச்சி அழுகுது. இது கூடவா அவ காதுல விழாம போகும்? அந்த அளவுக்கு பேசுறா. நல்ல வேள அந்த நேரத்துல பெருமாளா பார்த்து கோவிலுக்குப் போன மாமியார சீக்கிரம் அனுப்பி வைச்சிருக்காரு போல. அவங்க மட்டும் அப்போ வரலன்னா..... நெனச்சி பாக்கவே நெஞ்சு பதறுது மாமி.

     இதெல்லாம் நடந்ததுக்கு அப்புறம் தானே இன்னக்கி அவா மாமியா லோகநாயகிய கண்டிச்சாங்க. எங்க இவங்க இன்னும் இப்படியே கண்டிக்க ஆரம்பிச்சிட்டா நிம்மதி போயிடும். சிவா கூட பேச முடியாது. கள்ள காதல் வெளிய தெரிய வந்துருமோனு பயந்து அவங்க கொல்ல துணிஞ்சிட்டா. அதனால தான் அந்த விஷம் கலந்த பால அவங்களுக்கு குடிக்க கொடுத்தா. அவங்க அத குடிக்கிறதுக்குள்ள இந்த பாவிபய டிவிக்காரன் தொடரும்னு போட்டு முடிச்சிட்டான். இப்பல்லாம் டிவி சீரியலே பார்க்க முடியல மாமி. ரொம்ப விளம்பரமா போட்டு கொல்றா.

     "ஏண்டி புவனா. குழந்த எவ்ளோ நேரமா பசியில அழுதுண்டு இருக்கு. நோக்கு இந்த டிவி சீரியல பத்தி பேச ஆரம்பிச்சிட்டா எதுவுமே காதுல விழாதோ டீ? நானும் எவ்வளவு பிராணண குடுத்து கத்தீண்டு இருக்கேன். கொஞ்சம் உள்ள வா டீ..."

       அட! அட! அட! சித்த நேரமாவது என்ன நிம்மதியா இருக்க விடுதா இந்த கெழம். எனக்குன்னு மாமியாரா வந்து எம் பிராணத்த வாங்கீண்டு..... என் ஆத்துக்காரர்ட்ட இத ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்துட்டு நாம நம்மதியா இருக்கலாம்ன்னு பல தடவ சொல்லி பார்த்தாச்சி. அவரு கேக்குற மாதிரியே தெரியல. இன்னக்கி வரட்டும் அவரு.... ஹ்ம்.... நீங்க நாளக்கி மறக்காம நிஜங்கள் சீரியல் பாருங்கோ மாமி. நான் அப்புறம் வாரேன்.

     ஒரு வழியாக புவனா வீட்டுக்குள் நுழைகிறாள். அவள் குழந்தை இன்னும் அழுகையை நிறுத்தியதாக தெரியவில்லை.


எழுத்து
வெ.அருண் பாரதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக