வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 9வது பாகம்





        பேரறிவாளன் உட்பட 3 பேரை 7 நாளில் தூக்கில் போட ஜனாதிபதி உத்தரவு இது தான் இன்றைய தலைப்புச் செய்தி. ஏற்கனவே அவர்கள் 20 வருடம் சிறை வாசம் அனுபவித்து விட்டார்கள். இதற்கு மேல் தூக்கில் போட என்ன இருக்கிறது?  பேட்டரி எடுத்து கொடுத்ததன் ஒரே குற்றத்திற்காக பேரறிவாளன் காங்கிரஸ் அரசாங்கத்தால் கொலை செய்யப்படப்போகிறார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் அரசாங்கம் நம்மை எதிரியாகப் பார்க்கிறது. வாய் கிழிய அரசியல் பேசும் சிவகங்கைச் சிங்கங்கள் இந்த விசயத்தில் ஊமையாகிப் போனார்கள். ஈழத்தமிழர்கள் என்ன பாவம் செய்து வி்ட்டார்கள்? நாட்டையா கேட்டார்கள்? உரிமை தானே கேட்டார்கள். அதுவும் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமை. மனிதனாக வாழ்வதற்காக உரிமை. உரிமை மறுக்கப்படுவது தீண்டாமை இல்லையா? தீண்டாமை பாவச் செயல் என்று புத்தகங்களில் அச்சடிப்பதோடு ஒரு அரசின் கடமை முடிந்து விடுகிறதா? ஒரு காங்கிரஸ் தலைவரை கொன்றதற்காக தமிழினம் ஒட்டு மொத்தமாக தீவிரவாத இனம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கபட்டது. ஆனால் இதே கட்சியின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்கள் இன்று நாட்டை ஆளும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். திபெத் நாட்டின் பிரச்சனைகளில் தலையிட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மத்திய அரசாங்கம், திபெத் நாட்டின் தலைவர்களுக்கு இடம் கொடுத்த மத்திய அரசாங்கம் தமிழர்களை கை கழுவி விட்டது. நாங்கள் இந்தியர்கள் இல்லையா? நாங்கள் இந்தியாவில் இல்லையா? முதலில் நாங்கள் மனிதர்கள் இல்லையா? உலகத்தமிழினத் தலைவர் எங்கே போனார்? 


      இன்று அன்னாவின் ஊழல் போராட்டம் உலகத் தொலைக்காட்சிகளில் 24 மணி நேர நேரடி ஒளிபரப்புச் செய்திகளாகிறது. இந்தியாவின் பிரதான பிற மொழிச் செய்திகளில் வலம் வருகிறது. ஆனால் வாழ்வதற்கான உரிமை கேட்கும் இந்த 3 பேரின் குரல்....?


       ராதாவைப் பற்றிய கட்டுரையில் இது அவசியம் தானா? என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். ''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்'' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தவன் ராதா. ராதா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் அவன் கனவு நிறைவேறி இருக்கலாம். துரோகிகளை வார்த்தைகளால் சாடி இருந்திருப்பான். வசைமாரி பொழிந்திருப்பான். கலகங்களோடு பிறந்தவன் கனவுகளோடு மாண்டு போனான் .தம் கடைசி வயதில் கூட நாடகங்களில் நடித்தான் படங்களில் நடித்தான். எம்ஜிஆரை சுட்டதாக சொல்லப்பட்ட வழக்கில் தண்டனையாகி விடுதலையான பின்பு தான் வீழ்ந்துவிட்டதாக நினைக்கவில்லை. லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து விடுதலையான எம்கே தியாகராச பாகவதரைப் போல ராதா துவண்டு போகவில்லை. தன் கடைசிப் படமான பஞ்சாமிர்தம் வரையிலும் துவண்டு போகாமல் நடித்தான். எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!


        ராதாவை அசர வைக்கும் துணிவு அன்று யாரிடத்திலும் இருக்கவில்லை. எப்போதும் சுயமனிதனாக இருந்தவன் அன்று ராதா மட்டும் தான். நாட்டில் கம்யூனிஸ்ட் தோழர்களை ஒடுக்க அவசர நிலைப் பிரகடனத்தை மத்திய அரசாங்கம் ஏவி விட்ட போது ஆபத்தானவன் என்று அடையாளம் காணப்பட்டு கைதான ஒரே கலைஞன் எனக்குத் தெரிந்து எம்ஆர் ராதா மட்டும் தான். அதைக் கூட அவன் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டான். ஒரு முறை அவன் மனைவியிடம் "உங்க புருசன் இனிமேல் இது போல் செய்ய மாட்டேன்னு எழுதிக் குடுத்தா விட்டுருவாங்க. உங்க புருசன் தான் வீம்புக்கு எழுதித்தர மாட்டுக்காரு" என்று சிலர் ஊதிவிட்டார்கள். அவர் மனைவியும் இதை நம்பி சிறையில் கணவரைப் பார்க்க வந்தபோது "ஏதோ எழுதிக் குடுத்தா விட்டுருவாங்களாமே" என்று கேட்க அதற்கும் ராதா "அடி போடி விவரம் இல்லாதவளே. என்னய எதுக்கு புடிச்சிட்டு வந்துருக்கான்னு எனக்கே தெரியாது. இதுல என்னத்த நான் எழுதிக் குடுக்க? இப்ப நா தூங்கிட்டு இருந்தேன். இனிமே தூங்க மாட்டேன்னு எழுதிக்குடுக்கட்டா?" என்று யதார்த்தம் கலையாத தூக்க கலக்கத்தோடு பதில் சொல்லியிருக்கிறான் ராதா. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது, கலகங்கள் சூழ்ந்தது, யதார்த்தமானது. சுயத்தன்மையை இழக்காமல் முழு மனிதனாகவே வாழ்ந்திருக்கிறான் ராதா. அவனை விருதுகள் அலங்கரிக்கவில்லை. விருதுகளைத்தான் அவன் அலங்கரித்தான்.

      1966ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார்.


         ஒருமுறை ராதா நாடகம் நடத்தும்போது அவருக்குத் தீராத வயிற்றுப்போக்கு. அவரால் நடிக்க முடியாத நிலை. எனவே தனக்குப் பதிலாகத் தன்மகன் வாசு நடிப்பார் என்று அறிவித்த ராதா, "விருப்பமிருப்பவர்கள் நாடகம் பார்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் கவுண்டரில் சென்று டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்" என்று அறிவித்தார். ஆனால் இன்று இருக்கிற அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகள் தான் தலைவர்களாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களின் கட்சியில் அடிப்படைத் தொண்டனின் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.


       காமராசரின் மீதும், கருணாநிதியின் மீதும் அன்பும் பாசமும் கொண்டிருந்தான். கருணாநிதிக்கு கலைஞர் என்கிற பட்டம் கொடுத்ததே ராதா தான். அதே சமயம் கம்யூனி்ஸ்ட் இயக்கத்தின் மீதும் தீராத காதல் கொண்டிருந்தான் ராதா.  கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட போது ஜீவானந்தத்திற்கு பட்டையடித்து ஒரு வித்தியாசமான தோற்றத்தை வடித்தான் ராதா. சொல்லப்போனால் ஜீவாவின் காதலியாகி பின் மனைவியான பத்மாவதிக்கு காதல் கடிதம் கொண்டு செல்லும் தூதுவனாகவே மாறிப்போனவன் ராதா. ஒருமுறை அந்த கடிதத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று அறியும் ஆசையில் ஜீவாவிடம் கேட்க ஜீவா உண்மையைச் சொல்ல அதற்கு ராதா "நல்ல பொழப்ப எனக்கு குடுத்திய போங்க. நா என்னமோ புரட்சி பண்றீங்கன்னுலா நெனச்சேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். அதற்கு ஜீவா "சாதியென்றும், மதமென்றும் பார்க்கும் இந்தச் சமுதாயத்தில் காதலிப்பதே ஒரு புரட்சி தானே" என்று சொன்னார்.

        
      இப்படி ராதா ஜீவாவின் மேல் வைத்திருந்த அன்பு அளப்பரியது. அன்றைய காலத்தில் வறுமையில் வாடிய இளம் நடிகர்களுக்காகவே நாடகங்களை நடத்தி உதவி செய்து வாழ்ந்தவன் ராதா. இன்று எல்லாம் மாறிப் போனது. நல்லவர்களை நல்லவர்கள் நேசித்தார்கள். இன்று தனிமனித அக்கறை காணாமல் போய்விட்டது. சமூகத்தின் மீதான மக்களின் பார்வை வெகுவாகக் குறைந்து விட்டது. மீண்டும் அந்தப் பழைய சமுதாயம் மலர வேண்டும். 


      இது போன்ற வரலாறுகளை, அரசியல் நிகழ்வுகளை வீட்டில் இருக்கும் பெண்களிடமும் விவாதிக்க வேண்டும். இன்று வெளியில் அரசியல் பேசுகிறோம், டீக்கடையில் அரசியல் பேசுகிறோம். ஆனால் வீட்டிற்கு வந்து விட்டதும் செருப்பை வாசலில் கழற்றிப் போடுவதைப் போல அரசியலையும் வாசலோடு விட்டுவிடுகிறோம். அதனால் தான் இன்று எவன் எவனோ அரசியல் பேசுகிறான். அரசியல் பண்ணுகிறான். எதிர்காலம் இப்படியே இருந்துவிடப்போவதில்லை. மாற்றங்கள் நிகழவேண்டும். அந்த மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும். இனி வரும் காலங்களில் எரியப் போகிற புரட்சி தீபத்தின் ஆரம்ப நெருப்பாக நாம் இருப்போம். நன்றி.

                                                          
                                            தீப் பற்ற வை.
                                            மக்கள் நெருப்பென எழுவார்கள்
                                                                                          - மாவோ




என்றும் புன்னகையுடன் 
வெ.அருண் பாரதி





திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 8



                                           
                                          கோவில்களில் பலியிடுவது
                                           ஆடு மாடுகளைத்தான்; 
                                          சிங்கங்களை அல்ல!
                                                                - டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்


     சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் பராசக்தி வெளிவந்த காலகட்டம் அது. சென்னையில் உள்ள வண்ணார்ப் பேட்டையில் ஒரு எளிய குடிசை வீட்டில் வசித்து வந்த தோழர் ஜீவாவை பதட்டத்துடன் அவரது சிஷ்யர்களில் ஒருவர் காண வந்திருந்தார். "ஜீவா, ஜீவா பராசக்தி படம் பாத்தியா. அது உங்க கத ஜீவா. ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நீ எழுதியிருந்தியே. பணக்கார குடும்பம் ஒன்னு, இருக்குற சொத்துல்லாம் பறி போயி குடும்பம் பிரிஞ்சி காணாம போய்டுவாங்கன்னு..... அது உன் கத ஜீவா. படம் பிச்சிக்கிட்டு போய்ட்டு இருக்கு. கதய திருடிட்டாங்கன்னு கோர்ட்ல கேஸ் போட்டா கோர்ட்டுக்கு போகாம நேரா உன்னத்தான் தேடி வருவாங்க லட்சக்கணக்குல பேசி பணம் வாங்குனா இந்த குடிசைய இடிச்சி பெரிய மாடி வீடா கட்டிடலாம்......." என்று ஒரே மூச்சாக பேசி முடித்தார் அந்த சீடர். 


        ஜீவா பதட்டப்படாமல் மிகவும் பொறுமையாக "ஏ.... யப்பா. பொறு. பராசக்திங்கிற. என் கதன்னு வேற சொல்ற. நான் செய்த வாளை என்னுடையது என்று அறியாமல் பெட்டியில் துருபிடித்துக் கிடந்ததை என் மகன்களில் எவனோ ஒருவன் கூர்மைப்படுத்தி அதை மக்கள் கையில் தந்திருக்கிறான். அந்த மகனின் கைக்கு முத்தம் தராமல் வழக்கு போடச் சொல்கிறாயே" என்றார் ஜீவா.


       பராசக்தி படம் நாம் பார்த்திருப்போம். கலைஞர் கருணாநிதியின் வேலை அந்தப் படத்தின் வசனம் மட்டும் தான். மிகச் சிறந்த கதையம்சத்திற்காகவும், வசனத்திற்காகவும் பேசப்பட்ட படம் அது. அந்த படத்திற்கு கல்கி விமர்சனம் எழுதியிருந்தார். கல்கிக்கும், கருணாநிதிக்கும் முரண்பாடுகள் அதிகம். கல்கி இராஜாஜியின் சீடர். கருணாநிதி பெரியாரின் சீடர். தன்னை பகுத்தறிவுவாதி என்று இன்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்று இருந்தார். ராமாயணத்தை தீயிட்டு கொழுத்து என்றவர் தந்தை பெரியார். ராமாயணத்தை தமிழில் எழுதியது இராஜாஜி. இப்படி எல்லாவற்றிலும் முரண்பாடுகள் இருந்தன கல்கிக்கும், கருணாநிதிக்கும். இருந்தாலும் கல்கி பராசக்தி படம் பார்த்து விமர்சனம் எழுதியிருக்கிறார். 


       "தமிழை இது வரையிலும் காதல் மொழி, பக்தி மொழி என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பராசக்தி பார்த்த பின்பு தான் புரிந்து கொண்டேன், தமிழ் வீரமான மொழி என்று"


        இப்படி எதிர் துருவத்தில் இருந்தவர்கள் கூட ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நேசித்த காலமது. ஆனால் இன்று...............? சமச்சீர் கல்விக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்று செய்திகள் வெளியாயின. ஏதோ சமச்சீர்கல்வியை கண்டுபிடித்தது கருணாநிதி தான் என்கிற அளவில் பேசுகின்றனர். இந்திய மாணவர் சங்கம் உட்பட இடதுசாரிகளின் போராட்டங்கள் இல்லை என்றால் சமச்சீர் கல்வி கனவாகவே போயிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு திமுக கவுன்சிலர் ஒருவர் சொன்னார் "எங்க கலைஞர் கொண்டு வந்தாருன்னு ஒரே காரணத்துக்காகவே அந்த ஜெயலலிதா சமச்சீர் கல்விய நிப்பாட்டப் பாத்திச்சி. இப்ப எங்க கலைஞர் தான் ஜெயிச்சாரு. எங்க கலைஞர் பேரு வந்துடும்ன்னு ஒரே காரணத்துக்காக தான் புதுச கட்டுன சட்டமன்ற கட்டிடத்த ஆஸ்பத்திரிய மாத்தி பேரு வாங்க பாக்குது ஜெயா". இப்படித்தான் ஆட்சியாளர்களின் மனநிலை இருக்கிறது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் பழைய திட்டங்கள் எல்லாம் மூட்டை கட்டப்படுகின்றன. பழைய அரசுக்கு ஜால்ரா அடித்தவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்கிற அண்ணாவின் வார்த்தை உண்மையாக வேண்டும். 


           ஆட்சி அதிகாரங்கள் மாறும் போதெல்லாம் அந்தந்த அரசுக்கு ஏற்ப ஜால்ரா போடுபவர்கள் தான் இன்றைய சினிமாக்காரர்கள் என்று அவர்கள் மேல் ஒரு அவப் பெயர் உண்டு. இதையெல்லாம் தன் வாழ்க்கையின் மூலம் நொறுக்கியவன் தான் ராதா எனும் ஒரு மகா கலைஞன். தன் எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் தன் கருத்தை விட்டுக் கொடுக்காத குணத்தை தான் அவனிடம் பார்க்க முடியும். அது நீதிபதியாக இருந்தாலும் சரி. 


       "விதவையின் கண்ணீர்" நாடகத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் நீதிபதி கணேசன் ஒரு ஐயர். அவர் நாடகத்தைப் பார்க்காமல் தீர்ப்பு வழங்கமாட்டேன் என்று கூறவே அவர் முன் நாடகம் அரங்கேறுகிறது. ராதாவின் உதவியாளர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். வழக்கமாக நடக்கும் அடிதடிகள், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்துவிட்டால் பிரச்சனையாகிவிடுமே என்று பயந்து நடுங்கினர். ஆனால் பயமோ, பதட்டமோ ராதாவிடம் சத்தியமா இல்லை. அன்றைய நாடகத்தில் எந்த வசனங்களையும் ராதா மாற்றவில்லை. அப்படியே போட்டான். ஆனால் ஒரு வசனத்தை அன்று புதிதாக சேர்த்திருந்தான் ராதா. நாடகம் ஆரம்பிக்கும் போது ஒருவர் ராதாவிடம் வந்து (ராதாவின் ஏற்பாடு தான்)  "என்னய்யா நாடகம் போடுத இதல்லாம் எவன்யா பாப்பான்" என்றான். அதற்கு ராதா "அதெல்லாம் பாப்பான் பாப்பான்" (பாப்பான் - பிராமணர்களை குறிக்கும் சொல்)


         இப்படி அந்த பிராமணிய நீதிபதியையும் விட்டுவைக்கவில்லை ராதா. நாடகம் முடிந்ததும் நீதிபதி மேடையேறி பேச வேண்டும் என்றார். ராதாவின் உதவியாளர்கள் முடிவே செய்து வி்ட்டார்கள் "போச்சு போச்சு எல்லாம் போச்சு. ராதாண்ண பேசுன பேச்சுக்கு கண்டிப்பா அவருக்கு ஆறு மாசமோ, ஒரு வருசமோ தான். கோர்ட்டே மேடையேறி வந்துட்டு" இப்படி புலம்பவே ஆரம்பித்து விட்டனர். ஆனால் நடந்தது தான் வேறு.


            "எங்கள் குடும்பங்களில் எங்கள் பெண்கள் அனுபவிக்கிற கொடுமைகளை இந்த நாடகத்தை விட வேறு எந்த நாடகத்தால் சிறப்பாக சொல்ல முடியும்? இந்த நாடகத்தை தடை செய்யச் சொல்லி தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த நாடகம் இங்கு மட்டுமல்லாது தமிழகமெங்கும் போட அனுமதியளிக்கிறேன்" என்று தீர்ப்பு கூறினார். எதிராளி யாராக இருந்தாலும் என் கொள்கையை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்கிற ஒரு கலைஞனையும், தன் சொந்தச் சாதியில் பிறந்தாலும் தப்பை மறைக்காமல் தப்பு என்று ஒத்துக் கொண்ட அந்த உயர்ந்த நீதிபதியையும் அன்றைய தமிழகம் கண்டு ரசித்தது.


        எதையும் கண்டு பயப்படாத துணிச்சல், பகுத்தறிவுக் கொள்கைகளின் மேல் அவன் கொண்டிருந்த தீராத காதல் அவனை யாரிடமிருந்தும் ஒதுக்க முடியாத அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்திருந்தது. 


      தேர்தலின் போது காமராஜரிடம் பெரியார், "ஏ... அந்த ராதாவ கூப்டு பிரச்சாரம் பண்ணச் சொல்லுங்கப்பா. கூட்டம் வரும்" என்கிறார். ராதாவும் பெரியாருக்காக ஒப்புக் கொள்கிறார். பிரச்சாரம் முடிந்து செல்லும் வழியில் ஒருவர் ராதாவிடம் காமராசர் உங்களுக்கு ஒரு இருபதாயிரம் ரூவா கொடுக்கச் சொன்னாரு என்று பணத்தை கொடுக்க முயல்கிறார். அதற்கு ராதா "ஓஹோ என் பேச்சுக்கு வல இருபதாயிரம் ரூவா தானா? உன் தலைவர் காமராசர் கிட்ட போய் சொல்லு. ராதாவுக்கு வில கெடையாதுன்னு. பெரியார் சொன்னதுக்காக மட்டும் தான் வந்தேனே தவிர இந்தப் பணத்துக்கு ஆசப்பட்டு வரவேயில்ல. உன் தலைவன் கிட்ட சொல்லு எவனாலயும் ராதாவ விலைக்கு வாங்க முடியாதுன்னு" என்று பணத்தை வாங்க மறுத்து திரும்ப அனுப்புகிறார். அது தான் ராதா.


தொடரும்..........


என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது





         "மச்சி ஊர் பக்கம் வரணும்னு ரொம்ப ஆசையா இருக்குடா. வர்றதுக்கு நேரமே கெடைக்க மாட்டக்கு. அப்படி வந்தாலும் ரெண்டு நாள் மேல இருக்க முடியிறது இல்ல. கம்பெனில கூப்டு உயிரு எடுத்துருதானுங்க" இது சென்னையில் இருக்கும் என் நண்பன் கனகராஜ் என்னிடம் போனில் பேசும் போதெல்லாம் தவறாமல் சொல்லும் வரிகள். வரிகள் என்பதை விட புலம்பல் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவன் சென்னைக்கு சென்று இன்றோடு 5 வருடங்களுக்கு மேலாகிறது. மூன்று வருடத்திற்கு முன் தீபாவளியன்று அவனை திருநெல்வேலியில் வைத்துப் பார்த்தேன். ரொம்பவும் ஸ்டைலாக இருந்தான். திருநெல்வேலியின் விடலைப் பசங்களுக்குரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் சென்னை இளைஞர்களின் நாகரீகம் அவனை அப்பட்டமாக அப்பியிருந்தன. குறுந்தாடி, ஸ்பைக் ஹேர் ஸ்டைல், கையில் கலர்கலராக கயிறுகள், முழுக்க முழுக்க நாக்குகளில் சரளமான சென்னைத் தமிழ். பள்ளியில் என்னோடு படித்த கனகராஜ் இவன் தானா என்று பலத்த சிந்தனைக்குப் பிறகே முடிவுக்கு வந்தேன். பார்ப்பதற்கு ஓரளவு வசதியானவனாகவே தெரிந்தான். 


         "டேய் மச்சி, நல்ல சம்பாதிக்க ஆரம்பிச்சிட்ட போல இருக்கு. மெட்ராஸ்க்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் ஆளே ஒரு கோப்பா மாறிட்டியேடே. அங்கன எனக்கும் ஒரு வேல கீல இருந்தா சொல்லு. வந்து செட்டிலாகிடுறேன். ஊருக்குப் போனதும் எனக்கு ஒரு வேல ரெடி பண்ணீட்டு போன் பண்ணு" என்றேன் விபரம் புரியாமல். அவனும் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினான். அன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை கனவுகள். சென்னை போய் சேர்ந்ததும் குறைந்தது பதினைந்தாயிரம் சம்பளத்தில் ஒரு வேலைக்குச் சேருவது. முடிந்த வரை வீட்டுக்கு அனுப்புவது. அப்படியே ஒரு பைக் வாங்கி விடுமுறை நாட்களில் ஜாலியாக ஊர் சுற்றுவது. கொஞ்சம் கலராக இருப்பதால் தாராளமாக ஒரு காதலியோ அல்லது தோழியோ கிடைத்துவிடுவாள். அவளோடு பொழுதைக் கழிப்பது போன்று பல எதிர்காலத் திட்டங்கள் மனதுக்குள் வட்டமிட ஆரம்பித்தன. யதார்த்தம் மீறியதாக இருந்தாலும் ஏதோ ஒரு சிறு மயக்கம். சென்னையில் இருக்கும் பெண்கள் ஏதோ என்னைப் போன்ற பசங்களுக்குத் தான் காத்துக் கொண்டிருப்பதாக ஒரு எண்ணம். 


           சென்னை சென்று செட்டிலாகும் முன்பு ஒரு முறையாவது சென்னைக்கு தனியாக சென்று விசிட் அடிப்பது என்று முடிவு செய்தேன். சென்னை செல்வதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே. நண்பனின் அக்காவுக்கு திருமணம் என்றும், நான் வரவில்லை என்றால் அவன் அக்கா கல்யாணமே செய்து கொள்ள மாட்டார்கள் என்கிற அளவில் அப்பாவிடம் கதை விட்டு,  கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக சென்னைக்கு கிளம்பிவிட்டேன். அங்கே எக்மோரை சென்றடைந்ததும் நண்பன் மேளதாளத்தோடு வரவேற்பான் என்ற எதிர்பார்ப்போடு இறங்கி அவனுக்கு போன் செய்தேன். "மச்சி நான் ஆபிஸ் கெளம்புற பிசியில இருக்கேன்டா. நீ ஒண்ணு பண்ணு. நேரா வெளியில வந்து 27G பஸ்ல ஏறி கலைவாணர் ஸ்டாப்புக்கு டிக்கெட் எடுத்து வந்து எறங்கிடு. அங்க வந்து ஒரு முடுக்கு வழியா நேர வா. டிரிப்பிலிகேன் பிக் ஸ்ட்ரீட்க்கு வந்துடலாம். அங்க வந்து அம்பிகா மேன்சன் எங்க இருக்குன்னு கேளு சொல்லிடுவாங்க. அங்க வந்ததும் எனக்கு போன் பண்ணு" என்று சொல்லி போனை கட் செய்து விட்டான். சிறு ஏமாற்றம். என்ன செய்ய இப்போதைக்கு சென்னையில் இவனை விட்டால் வேறு எவனையும் தெரியாதே. கூட படிச்ச பயலுக நெறய பேரு இங்கன தான் கெடக்கானுங்க தெரியும். ஆனா எவனையும் தெரியாதே. வேறு வழியில்லாமல் எனது பையை கஷ்டப்பட்டு தூக்கி வெளியே வந்தது தான் தாமதம். குறைந்தது பத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் மேல் "சார் எங்க போகணும்" என்று மொய்த்து விட்டனர். "ப்ரண்ட் கார் எடுத்துட்டு வந்துட்டு இருக்கான்" என்று சற்றும் பொருந்தாத ஒரு பொய் சொல்லி அந்த காக்கி கூட்டத்திலிருந்து விடுபட்டு பஸ் ஸ்டாப்புக்குச் சென்று அந்த டிரைவர்கள் கண்ணில் படாதவாறு மறைந்து நின்று கொண்டேன். வருகின்ற பஸ் 27G தானா என்று ரோட்டுக்கு வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னையே வெகுநேரம் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் "தம்பி எங்க போகணும்" என்று கேட்டார். "கலைவாணர் அரங்கம் ஸ்டாப்" என்றேன். "தம்பி அந்த பஸ் இங்கன நிக்காது பக்கத்து ஸ்டாப்க்கு போ" என்றார். ஒருவழியாக அங்கேயும் சென்று காத்திருந்ததில் அரை மணி நேரம் வீணானது. பசி களைப்பையும், களைப்பு பசியையும் மாறி மாறி தூண்டியது. 


         பஸ் கிடைத்து ஏறியதும் உள்ளே செம கூட்டம். எல்லோரும் ஏதோ போருக்கு போகிற ராணுவ வீரர்கள் மாதிரி உம்மென்று சென்று கொண்டிருந்தனர். யார் முகத்திலும் சிரிப்போ, சிரிப்பின் அடையாளங்களோ கொஞ்சம் கூட இல்லை. அதில் ஒரு பக்க இடது சீட் காலியாக இருந்தும் யாரும் அமராதது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. கால் வலியெடுக்க சீட்டில் அமர்ந்தேன். நடத்துநர் வந்து "என்னப்பா ஊருக்கு புதுசா? இது லேடிஸ் சீட் உட்காரக்கூடாது" என்று நமட்டுச் சிரிப்பில் சொன்னார். வேறு வழியில்லாமல் ஒரு சிரமமான புன்னகையுடன் எழுந்தேன். பஸ் குலுங்கிக் குலுங்கி சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிக்னல்கள், எரிச்சலூட்டும் காத்திருப்புக்கள், ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டும் இடித்துக் கொண்டும் செல்லும் வாகனங்கள் சென்னை சாலைகளை அடைத்துக் கொண்டிருந்தன. பயணத்தின் இடையில் காற்றில் மிதந்து வந்த நாற்றம் கூவத்தின் இருப்பை உறுதி செய்தது. கண்டக்டரிடம் தனது ஸ்டாப் வந்ததும் ஞாபகப்படுத்தச் சொல்லி அவரது வாயிலிருந்து எந்த வார்த்தை வந்தாலும் எனது ஸ்டாப்பாக இருக்குமோ என்று பதறியபடியே வந்தேன். ஸ்டாப் வந்ததும் கூட்டத்தை விலக்கி இறங்குவதற்குள் கரும்புச் சாறு பிழியும் மிஷினுக்குள் சென்று வந்த உணர்வு. "யப்பா என்னடா வாழக்க இது. சென்னைக்கு வந்து வேல கெடச்சதும் மொத வேலயா ஒரு பைக் வாங்கணும். பஸ்லலாம் போய்ட்டு வந்தா உயிரே போய்டும்"  


    இனி நடப்பதற்கு தெம்பி்ல்லாமல் போனதால் ஆட்டோ பிடிக்க வேண்டியதாகப் போனது. நான் சொன்ன இடத்தில் ஆட்டோக்காரன் இறக்கி விட்டு சுளையாக 80 ரூபாயை உருவிக் கொண்டு போய்விட்டான். மீண்டும்  நண்பனுக்கு போன் போட்டு அவன் ரூம்க்கு போய் சேரும் வரை சத்தியமாக என் உயிர் என்னிடத்தில் இல்லை. மேன்சனி்ல் ஒரே நேர் வரிசையில் 5 அறைகள். 3 மாடிக் கட்டிடம். கனகராஜின் அறை இரண்டாவது மாடியில் இருந்தது.  "டேய் மச்சி, குளிச்சிட்டு ரெஸ்ட் எடு. கீழ பக்கத்துல தான் மெஸ் இருக்கு. சாப்ட மறந்துடாத. ஈவினி்ங் பேசிக்கலாம்" சொல்லிக் கொண்டே விடைபெற்றான் கனகராஜ். ஒரு சிறிய அழுக்கான அறை. ஆங்காங்கே நடிகைகளின் படங்கள். அந்த அறையில் அவனோடு 4 பேர் தங்கியிருந்தனர். பாத்ரூமைத் தேடினேன். 5 அறைகளைத் தாண்டி ஒரு பொதுவான குளியலறை. உடைந்த பிளாஸ்டிக் வாளி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டது. கடலில் குளித்தது போன்று கண்களை எரிச்சலூட்டும் உப்பு நீர். எப்படியோ குளி்த்தாகி விட்டது. 


        கீழே வந்து மெஸ்ஸைத் துழாவினேன். அங்கே இட்லி மட்டும் இருந்தது. அதுவும் ஆறிப்போய்...... ஒரு இட்லி 5 ரூபாய். அநியாயம் தான். வேறு வழியில்லை. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். மீண்டும் மேன்சனுக்கு வந்து களைப்பில் உறங்கிப் போனேன். தூக்கம் கலைந்து எழுந்திரிக்கும் போது மணி 3. நண்பன் வர இன்னும் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக ஆகிவிடும். என்ன செய்வது என்று புரியாமல் வெளியே வந்து நடை போட ஆரம்பித்தேன். மெயின் ரோட்டுக்கு வந்து நேரே சென்றால் மெரினா என்று சொன்னார்கள். வெயில் கொஞ்சம் பயமுறுத்தியது. ரூமில் கிடந்து அல்லாடுவதை விட கடலைப் பார்க்கலாம். நடந்தேன். வழியெங்கும் கடைகள், கரை படிந்த அழுக்கான மனிதர்கள். யாரையும் கண்டுகொள்ளாத தன் வேலையை மட்டுமே பார்க்கும் மனிதர்கள். 


         பீச்சில் ஆங்காங்கே குடைகள் தெரிந்தன. குடைகளுக்குள் இரு உருவங்கள் தெரிந்தன. சில குடைகள் காக்கிகளைப் பார்த்ததும் மடிந்து கொண்டு கிளம்பி வேறு இடம் தேடத் தொங்கின. சில குடைகள் வெயிலின் உஷ்ணத்தோடு தன் உஷ்ணத்தையும் கலக்கிக் கொண்டிருந்தன. எட்டிப் பார்க்க மனமில்லை.  இதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை. நடந்தேன். வெப்பமடிக்கும் கடல் காற்று. ஆங்காங்கே முளைத்திருக்கும் சிறு கடைகள். மிளகாய் பஜ்ஜி, மாங்காய், சுண்டல் விற்கும் சிறுவர்கள். பாவம் ஏழ்மையும், ஏக்கமும் கண்களில் தெரிந்தது. இருந்தாலும் கடல் கொஞ்சம் ஆறுதல் தந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல். நேரம் போகப் போக வெப்பம் தணியத் தொடங்கி பரவசமூட்டும் குளிர் காற்று வீசத் தொடங்கியது. சனிக்கிழமையாதலால் கரைகளெங்கும் மனிதர்கள். சில மனிதர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர். சில மனிதர்கள் கால்களை நனைத்து கடலை அழுக்காக்கிக் கொண்டிருந்தனர். அலைகளும் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டன. நேரம் ஆறைத் தாண்டியது. கடலிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்.


         போகும் வழியில் போதை மனிதர்கள் தன்நிலை மறந்து ரோட்டின் ஓரத்தில் வேறு ஒரு உலகத்தைத் தேடிக்கொணடிருந்தார்கள். அறைக்கு வந்து சேர்ந்தபோது நண்பனின் அறையிலிருந்த மற்றவர்கள் என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு அவர்கள் வேலையில் மூழ்கிப் போனார்கள். எல்லோரும் புதியவர்கள் என்பதால் பேச கூச்சம். நண்பன் வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். உடலின் சக்தி எல்லாம் வற்றிப் போய் மிகவும் களைத்துப் போய் வந்தான் நண்பன். பார்க்கவே பாவமாக இருந்தது. அவனோடு வெளியே ஊர் சுற்றப் போகும் எண்ணத்தை மனதிலேயே புதைத்துக் கொண்டேன். வந்தவன் நேராக முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டான். "என்ன மச்சி இவ்ளோ டையர்டா வந்து பேஸ் மட்டும் கழுவிருக்க. ப்ரெஸ்ஸா குளிச்சிட்டு வரவேண்டியதானேடா" என்றேன். "குளிக்கவா? டேய் இது நம்ம ஊர் இல்ல. மெட்ராஸ். நெனச்ச நேரத்துக்கு தண்ணி வராது. காலைல மட்டும் தான் தண்ணி வரும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் குளி்ச்சிக்கணும். நானே வாரத்துக்கு 4 நாள் தான் குளிப்பேன்னா பாத்துக்கோயேன்" என்றான். உண்மையில் சென்னை அவனை ரொம்பவே மாற்றியிருந்தது. எங்கள் ஊரில் அவனுக்கு க்ளீன் கனகராஜ் என்ற பெயர் உண்டு. பள்ளி நாட்களில் ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது குளிப்பான். சுத்தம் விசயத்தில் ரொம்பவும் அக்கறை காட்டுகிற இவனா இப்படி மாறிப் போனான் என்று ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்.    


         அப்படியே அவனது வேலையைப் பற்றியும், சென்னையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். இரவு உணவை முடித்து விட்டு அறைக்குத் திரும்பியதும் அவன் களைப்பாக இருக்கிறதென்று உறங்கப் போய் விட்டான். மற்றவர்கள் யார் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தனர். உறவுகள் இல்லாத தேசத்தில் அவர்களின் ஒரே ஆறுதல் செல்போன் தானே. நானும் உறங்கலாம் என்று நினைத்து படுக்கையை விரித்தேன். தூக்கம் வரவில்லை. கொஞ்ச நேரத்தில் நண்பனின் செல்போனுக்கு அவன் வீட்டிலிருந்தது கால் வந்தது. அவனை எழுப்பினேன். செல்லை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசி விட்டு எரிச்சலோடு உள்ளே வந்தான். என்னவாக இருக்கும் என்று அறியும் ஆசையில் "என்ன மாப்ள வீட்ல இருந்து கூப்டாங்களா? என்ன சொன்னாங்க?" என்றேன். "அட போடா. அத ஏன் கேக்குற, தங்கச்சி வயசுக்கு வந்துட்டாளாம். நாளைக்கி தண்ணீ ஊத்தப் போறாங்க. செவ்வாய்க் கிழம விசேசம் பண்ணனுமாம். ஊருக்கு கெளம்பி வரச் சொல்றாங்க. இப்ப கம்பெனில செம டைட் ஒர்க். லீவு கெடைக்க சான்ஸே இல்ல. அதோட கையில கொஞ்சம் கூட காசே இல்ல. ஒரு தடவ ஊருக்குப் போய்ட்டு வந்தாலே கொறஞ்சது ரெண்டாயிரம் ரூவா காலியாயிருது. இதுல சொந்தக்காரனுங்க வேற ஊர்ல இருந்து வர்றப்ப அத வாங்கிட்டு வா, இத வாங்கிட்டு வா ன்னு உசுற வாங்கிடுறானுங்க. அவங்களுக்கு பயந்தே ஊருக்கு வர மனசு இல்ல. என்னமோ நா இங்க ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சி வீட்டுக்கு அனுப்புறதா அவங்களுக்கு நெனப்பு. என்ன பண்ணு. இங்கன நா நாய் பொழைப்பு பொழைக்கிறது அங்க எவனுக்கு தெரியப்போவுது. மாசம் ஐம்பதாயிரம் ரூவா சம்பளம் வாங்குனாலும் இங்க காணாது மச்சி. இங்க ரூவா மட்டும் தான் பேசும். ரூவா இருக்குறவனுக்கு மெட்ராஸ் ஒரு சொர்க்கம். என்ன மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு இது நரகம் தான்.........." பேசப் பேச எனக்குள்  நான் கட்டி வைத்திருந்த கோட்டை தவிடு பொடியாகிக் கொணடிருந்தது. சென்னையில் வேலை தேடி செட்டிலாக வேண்டும் என்று மயக்கத்திலிருந்த என்னை எழுப்பி விட்டு அவன் மறுபடியும் உறங்கத் தொடங்கினான். அவன் நிம்மதியாய் உறங்குகிறானா? சந்தேகம் தான்......

தொடரும்...............


என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

          

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 7




        பொதுவாக மேடைகளில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் அதை அவர் முதலில் பின்பற்றுவாரா என்பது சந்தேகம் தான். இப்படிப் பட்டவர்களுத்தான் ஒரு பழமொழி இருக்கிறது ஊருக்குத் தான் உபதேசம், தனக்கு இல்லை. ராதா அப்படிப்பட்டவனல்ல. அவனது வார்த்தைகள், நாடகத்தில் அவன் பேசும் வசனங்கள் எல்லாம் அவன் வாழ்க்கையிலிருந்து தான் எடுத்துக் கொண்டான். இன்று தமிழினத் தலைவர்களாக தன்னை காட்டிக் கொள்பவர்கள், தமிழுக்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்று வீர வசனம் பேசியவர்கள், மக்களுக்காகவே தான் அரசியல் நடத்துவதாக புளங்காகிதம் அடைபவர்கள் யாரும் தன் சொந்த இன மக்கள் அந்நிய தேசத்தில் கொத்துக்குண்டுகளால் கொல்லப்பட்ட போதும், கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளால் கருவறுக்கப்பட்ட போதும் தன் மகன்களுக்கு மந்திரி பதவி கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தினரே தவிர தனக்கு ஓட்டு போட்ட மக்களை நினைக்கவே இல்லை. இன்று இருக்கிற பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஈழப்பிரச்சனையை ஓட்டு அரசியலாக மாற்ற முயன்றனரே தவிர, அப்பிரச்சனையை தங்கள் சுயலாபத்துக்காக மாற்றச் செய்தனரே தவிர நம் சொந்த மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கவேயில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு வார்த்தை வேறு, வாழ்க்கை வேறு.

    
    இன்றைய நடிகர்களாக இருக்கட்டும், மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் கொஞ்சம் பிரபலமாகி விட்டால் போதும் உடனே கட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது நாங்கள் தான் என்று உளர ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் ராதா தன் நாடகங்களைப் பிடித்து, தன் கொள்கைகளைப் பிடித்து தன்னைப் பின்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் வந்தபோதும்  ''போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா''  என்று அவர்களை விரட்டியடித்தாரே தவிர கூட்டம் சேர்க்கவில்லை. இவனைப் போன்ற நல்ல மனிதர்கள் இனி கிடைப்பது என்பது மிகவும் அரிது.


       எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் தன் கருத்தை வெளிப்படையாக சொல்பவனே உண்மையான கலைஞன். யாருக்காகவும் தன் கருத்தை விட்டுக்கொடுக்காதவனே நல்ல தலைவன். ராதா நல்ல கலைஞனாகவும், கூட்டம் சேர்க்காத நல்ல தலைவனாகவும் வாழ்ந்தான். “கலை கலைக்காகவேன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான். வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது”, என்று உண்மையை உரைக்கக் கூறியவன் ராதா. 


             நாடகத்தைப் பார்க்க வந்தவர்கள் நாடகத்தைப் போடச்சொல்லி கத்திய போது கோபம் கொண்டு பாதி மேக்கப்பிலேயே ஒரு நாயைப் பிடித்து மேடைக்கு வந்து ராதா நாயைப் பார்த்துச் சொன்னான் " ஏழு மணியின்னா ஏழு மணிக்கு தான் பிஸ்கட் போடுவேன். இடையில எவ்வளவு கொலைச்சாலும் போட மாட்டேன்" என்று நாடகம் பார்க்க வந்தவர்களையே நாய் என்று யாருக்கும் பயப்படாமல் சொன்னான். கூட்டம் அதற்கும் கை தட்டியது. இதைப் பார்க்கும் போது காசி ஆனந்தனின் ஒரு கவிதை தான் எனக்கு ஞாபகம் வரும். 

                     "ஆடாய், மாடாய் போனாயடா தமிழா என்றேன். 
                       கை தட்டினார்கள்"

        நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, தன் சொந்த வாழ்க்கையிலும் சரி ராதா கொச்சைத் தமிழ் தான் பேசினான். நல்ல தமிழ் பேசிய நடிகர்கள் எல்லாம் நாட்டை குப்பையாக்கிய போது கொச்சைத் தமிழ் பேசிய ராதா தான் நாட்டை சுத்தமாக்குகிற வேலையைச் செய்தான். செல்வந்தர்களை, அதிகாரப் மமதையிலிருப்பவர்களை ராதா மதித்ததே இல்லை. 


             அந்த காலத்தில் ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா  போன்ற கார்கள் மிகப் பிரபலம். இந்த கார்கள் அப்போது சிவாஜி போன்ற பெரும் நடிகர்களிடம் மட்டுமே இருந்தது. ராதாவிடம் கூட இப்படிப்பட்ட கார்கள் இருந்தன. இருந்தாலும் பணக்காரன் என்ற கர்வமோ, ஆணவமோ ராதாவிடம் துளியும் இல்லை. தன் இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்!


          "விதவையின் கண்ணீர்" என்ற நாடகத்தின் மூலம் ஆசாரமான இந்து குடும்பங்களில் வாழும் விதவைப் பெண்கள் சந்திக்கும் அவலங்களுக்கு சாட்டையடி கொடுத்தான் ராதா. நாடகத்தை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. வழக்கின் நீதிபதி ஒரு கணேசன் ஐயர். அவர் நாடகத்தைப் பார்க்காமல் தீர்ப்பு சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டார். நீதிபதி மேடைக்கு கீழே அமர்ந்திருக்க நாடகம் தயாரானது. ராதாவின் நாடகத்தில் நடிக்கின்ற நடிகர்கள் ஒரு வித பதட்டத்திலேயே இருந்தனர். ராதாவிடம் பயமோ, பதட்டமோ துளி அளவும் இல்லை. அன்றைய நாடகத்தில் எந்த ஒரு வசனத்தையும் குறைக்கவில்லை. ஆனால் அந்த பிராமண நீதிபதிக்காகவே சர்ச்சைக்குரிய ஒரு புதிய வசனத்தை சேர்த்திருந்தான் ராதா.

தொடரும்...........

தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்


என்றும் புன்னகையுடன் 
வெ.அருண்பாரதி


 

புதன், 17 ஆகஸ்ட், 2011

ஆடிக்கழிவு


      

"ஆடிக் கழிவுல துணி எடுத்தியளா? வில சவுரியமா கெடைக்கி. நாங்க எல்லாருக்கும் சேர்த்து நேத்துதான் துணி எடுத்துட்டு வந்தோம்" என்று பலர் பலரிடம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவும், வியாபாரத்தைப் பெருக்குவதற்காகவும் ஜவுளிக்கடைக்காரர்கள் கண்டுபிடித்த யுக்தி தான் இந்த ஆடிக்கழிவு விற்பனை. இந்த யுக்தி ஒரளவு வெற்றி பெறவே இதை ஜவுளிக் கடைக்காரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வணிகர்களும் பின்பற்றத் தொடங்கி விட்டனர். தற்போது தங்க வியாபாரிகளும் இந்த யுக்தியை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.


         தங்கத்தை வைத்து தான் ஒரு பெண் புகுந்த வீட்டிற்குள் நுழையும் கலாச்சாரத்தை கண்டுபிடித்தவனை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். அவனை ஆசை தீர அடித்தே கொல்ல வேண்டும். முடியாமல் போகும் பட்சத்தில் திட்டியாவது தீர்க்க வேண்டும். சமீப காலங்களில் பவுன் கணக்கில் மணமகள் விலை பேசப்படுவதும், அளவு குறைந்தால் கொடுமைப்படுத்தப்படுவதும் வாடிக்கையான செய்திகளாகிவிட்டன. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்றாகி விட்ட போதிலும் இன்றைய குடும்பங்களின் கெளரவப் பிரச்சனையாக இந்த வரதட்சணை இருக்கிறது. இருப்பவர்கள் கொடுப்பார்கள். பாவம் இல்லாதவர்கள்? அப்படி என்ன தான் இந்த தங்கத்தில் இருக்கிறது என்று எனக்கு இன்று வரை புரியவே இல்லை. இரும்பு, செம்பு போன்று தங்கமும் ஒரு உலோகம் தான் என்கிற அளவில் மட்டும்தான் தங்கத்தின் மீதான என் பார்வை இன்று வரையும், இனிமேலும் இருக்கிறது. இருக்கப்போகிறது. இன்று தங்கத்தின் விலைவாசியைப் பார்த்தாலே பயமாகத் தான் இருக்கிறது. சர்வசாதாரணமாக கிராம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவது அநியாயம் தான்.  அநேகம் என் மகன் அல்லது மகளின் கல்யாண வயதில் தங்கம் கிராமுக்கு பத்தாயிரத்தைத் தாண்டினாலும் ஆச்சரியம் இல்லை. 


        சரி நம்ம கதைக்கு வருவோம். ஆடிக்கழிவில் எப்படியாவது துணிமணி வாங்கிவிட வேண்டும் என்ற மனநிலைக்கு நம்மில் பலர் வந்து விட்டோம். இன்று துணிகளின் வகைகளும் பல்கிப் பெருகி விட்டன. குறிப்பாக பெண்களின் ஆடை வகைகளுக்கு வாயில் நுழையாத பெயரெல்லாம் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அனார்கலி, சல்வார் கமீஸ், பாட்டியாலா, செமி பாட்டியாலா, பஞ்சாப் கமீஸ், வஸ்த்ரகலா என்றெல்லாம் பல வகைகளில்.... பல பெயர்களில்... விலை தான் சாமானியன் வாங்குவதற்கு ஏற்ப இல்லை. 


           என் சிறு வயதில் தீபாவளி வந்துவிட்டாலே மனதில் ஒரு பட்டாம் பூச்சி பறக்கும். புதுத்துணி, பட்டாசு கனவுகளில் கலர் கலராய் நிறையும். என் தந்தை கடைசி வரை புதுத்துணியோ, பட்டாசோ எளிதில் வாங்கியே தர மாட்டார். வேலை விசயமாக அவர் வெளியூர் சென்று வீடு திரும்பவே தீபாவளியன்று அதிகாலை 4 மணி வரை ஆகி விடும். அப்பா வரும் வரை நாங்கள் தூங்காமலே காத்திருப்போம். எங்கள் வீட்டில் ஆடிக்கழிவில் துணி வாங்கியதாக வரலாறே கிடையாது. தீபாவளி அன்று காலையில் என் பக்கத்து வீட்டு ரமேஷ் புதுத்துணி உடுத்தி பாட்டாசுக் கையோடு எங்களைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பான். நான் ஓரளவு வளர்ந்து விட்டபடியால் அழுகையை அடக்கிக் கொள்வேன். என் தம்பியும் தங்கையும் அழுதே விடுவார்கள். ஒரு வழியாக அப்பா வந்தவுடன் தான் அவர்களின் அழுகை சமாதானம் ஆகியிருக்கும். 


           அப்பா வீடு திரும்பியதும் அவசர அவசரமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு மார்க்கெடில் ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று எங்களுக்குத் தேவையானதை வாங்கிக்குடுப்பார். எப்படியாயினும் விலை 500க்குள் முடிந்து விடும். கடைக்காரன் "என்ன அண்ணாச்சி, புதுத்துணி இப்ப தான் வாங்க வந்தியளா? கொஞ்சம் சீக்கிரமா வந்து வாங்கியிருந்தா நெறய மாடல் பாத்துருக்கலாமே" என்று பேரம் பேச என் தந்தைக்கு நேரம் கிடைத்தை எண்ணிக் கொள்வார். முடிவில் "என்ன அண்ணாச்சி உங்களுக்கும் வீட்டம்மாக்கும் வாங்கலயா?" என்றதும் வழக்கம் போல சொல்கிற "ஏற்கனவே வாங்கியாச்சி" என்று பதில் வரும். விபரம் புரியாத என் தங்கை "அம்மாக்கும் உனக்கும் மட்டும் சீக்கிரம் வாங்கிக்கிறீங்க. எங்களுக்கு மட்டும் ஏன் லேட்டா வாங்குறீங்க" என்று கேட்பாள். பதிலேதும் பேசாமல் தந்தை எங்களை கிளப்புவார். மிளகுவத்தல் வெடி (பிஜிலி) வெடி 2 பாக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பும் போது தவறாமல் தம்பி பொட்டு வெடியும், துப்பாக்கியும் கேட்டு அழுவான். அவனை எப்படியாவது சமாளித்து வீடு வருவதற்குள் அப்பாவுக்கு போதும் போதும் என்று ஆகி விடும்.   


      வீட்டிற்குள் வந்ததும் புதிய துணி உடுத்தும் ஆசையிலும், வெடி போடும் அவசரத்திலும் அரைகுறையாக குளித்து விட்டு உடையணிந்து வெளியே ஓடுவோம். என் அம்மாவும், அப்பாவும் போட்டிருக்கும் துணி அநேகம் அவர்கள் ஒரு வாரமோ அதற்கு முன்போ ஏற்கனவே அவர்கள் உடுத்தியிருந்ததாக இருக்கும். 


     இப்படியான என் சிறு வயது தீபாவளிகள் அழகானவை, அர்த்தங்கள் நிறைந்தவை. அந்த காலத்தில் தீபாவளித் தருணங்களை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தொலைத்ததாய் நினைவில்லை. என் சக நண்பர்களோடு பால்ய வயது தோழிகளோடு தான் கொண்டாடினோம். 


         
     இன்று கொண்டாட வேண்டிய பல விழாக்களை தொலைக்காட்சிப் பெட்டியின் சிறப்பு நிகழ்ச்சிகளும், புதிய திரைப்படங்களும் தின்று விட்டு ஏப்பம் விடுகின்றன. கடந்த தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் முன்பு தான் என் நண்பன் மனோவின் அக்காவுக்கு திருமணமாகி இருந்ததால் மனோவின் அக்காவும், அத்தானும் தலை தீபாவளி கொண்டாட வீட்டுக்கு வந்திருந்தார்கள். தீபாவளிக்கு 2 நாள் முன்பு நான், மனோ, அருண் காசி மனோவின் அத்தானுக்கு துணி எடுக்க திருநெல்வேலியின் பிரம்மாண்ட ஜவுளிக்கடைகளை தேடிச் சென்று அலைந்து கொண்டிருந்தோம். அதில் வண்ணார்ப்பேட்டை கடையில் அதிக நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தோம். நாங்கள் பார்த்த வெரைட்டிகளின் விலை அதிகமாக இருந்ததால் எனக்குப் பார்க்க இஷ்டம் இல்லாமல் துணி வாங்க வந்திருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அதில் ஒரு குடும்பம் வகை வகையாக ஆடைகள் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக நாங்கள் துணி எடுத்து விட்டு கிளம்பவும் அந்த குடும்பம் கிளம்பவும் நேரம் சரியாக இருந்தது. அந்த குடும்பத்தினர் மட்டும் பத்தாயிரம் ரூபாய் வரை துணி எடுத்திருப்பதாக கேஷ் செக்சனில் இருப்பவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 


         மனோவும், காசியும் பைக் எடுக்க சென்றார்கள். நான் வெளியே காத்திருத்தேன். அந்த பத்தாயிரம் துணி வாங்கி குடும்பத்தின் ஒரு பெண் வெளியே பூ விற்கிற ஒரு சிறுமியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார், "என்னம்மா நீ மல்லிப்பூ யான வெல சொல்லுத. ஒரு முழம் பதினஞ்சு ரூபாயா? முழம் எட்டு ரூபாய்க்கு தர்றதா இருந்தா தா, இல்லன்னா பூ வேணாம்". அந்த சிறுமியின் உடை பலமுறை கிழிந்து பலமுறை தைக்கப்பட்டதாய் இருந்தது.  



வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 6






                  ராதா வானத்திலிருந்து குதித்தவன் அல்ல அற்புதங்கள் புரிவதற்கு. பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியவனும் அல்ல. நம்மைப் போன்ற சாதாரண மனிதப்பிறவி தான் அவன். சொல்லப்போனால் சிறு வயதிலிருந்து பல்வேறு அடக்குமுறைகளையும், பிரிவினைகளையும் சந்தித்து கூடிய மட்டும் அனுபவித்து தான் வளர்ந்தான். நமக்கும் அவன் சந்தித்த அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் அவன் அவைகளை எதிர்த்துப் போராடினான். நாம் போராடுவதில்லை. அவ்வளவு தான்.

                
            போராளிகளுக்கு போராடுவதற்கான காரணங்கள் கிடைத்துக் 
           கொண்டே இருக்கின்றன. கோழைகளுக்கும் போராட்டத்தைத் 
           தவிர்ப்பதற்கான காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன 

என்ற கியூபாவின் புரட்சி நாயகன் சேகுவாராவின் வரிகளைப் போல ராதாவிற்கும் இந்த சமூகத்தில் நடக்கும் பிராமணியம், மூடத்தனம், இனபேதம் போன்ற போராடுவதற்கான காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன. சொல்லப்போனால் அவன் அவைகளை அனுபவித்தும் பெற்றுக் கொண்டான். 


        பாகப்பிரிவினை திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது சுனில்தத் 'சிவாஜியின் பாத்திரத்தில் திலீப்குமார் நடிக்கிறார். அவரால் சிவாஜியை விடவும் கூட சிறப்பாக நடித்துவிட முடியும். ஆனால் ராதாவின் பாத்திரத்தில்தான் ராதாவை விட வேறுயாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது" என்றார். தெலுங்கில் அப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டபோதும் ராதாவின் பாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்கினர். ஆனால் பாகப்பிரிவினை படத்தை இந்திய அளவில் மூன்றாவது சிறந்த படமாக தேர்ந்தெடுத்த இந்திய அரசு விருது வழங்கும் விழாவிற்கு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது. ராதா மட்டும் அழைக்கப்படவில்லை.


        நாடகத்தின் காதலரான ராதா சிறுவயதில் நாடகக்கம்பெனியில் பார்ப்பன ஆதிக்கத்தையும் வைதீக மூடத்தனங்களையும் சந்தித்திருக்கிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை எதிர்த்துக் கலகமும் செய்திருக்கிறார். நாடகக்கம்பெனிகளில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவும் காபியும் தயாரிக்கப்பட்டபோது முடிந்தபோதெல்லாம் அதை எச்சில் படுத்தியிருக்கிறார்.


      ஒருமுறை 'கிருஷ்ணலீலா' நாடகத்தில் ராதா சிறப்பாக நடித்திருந்தும் நாடகத்திற்குத் தலைமைதாங்கிய சத்தியமூர்த்தி(அய்யர்) அவரைப் புறக்கணித்துவிட்டு அதே நாடகத்தில் நடித்த டி.ஆர்.மகாலிங்கத்தை மட்டும் புகழ்ந்திருக்கிறார். அப்போதே இந்தப் பார்ப்பனப் புறக்கணிப்பு கண்டு மனம் வெதும்பியிருக்கிறார் ராதா.


    அதே சமயம் அவரது நாடகங்களை தடை செய்வதற்காகவே சட்டம் இயற்றியது காங்கிரஸ் அரசு. ராதாவின் குருநாதரான பெரியாருக்காக அரசயலைமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டி வந்தது. தேசியச் சின்னங்கள் அவமதிப்புச் சட்டம் கொண்டு வந்தது. ராதாவுக்காக நாடகத் தடைச்சட்டம் இயற்றியது. 1954ல் ராதாவின் திரைக்கதை அரசின் அனுமதி பெற்ற பிறகே அதாவது சென்சாருக்குப் பிறகே அனுமதிக்கப்படும் என்று சட்டம் கொண்டு வந்தது.


    இப்படி மக்களை மறந்து விட்டு சின்னங்களுக்கும் உயிரில்லாத மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது காங்கிரஸ் அரசு. மக்களே உயர்ந்தவர்கள், அவர்களே முக்கியம் என்று சிறையையும் அடக்குமுறைகளையும் சந்தித்து வாழ்வன் தான் ராதா எனும் கலைஞன். 


    இன்று ஈழத்தில் நம்முடைய தமிழ் இனங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட காரணமாக இருந்த சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் நம்முடைய மத்திய காங்கிரஸ் அரசாங்கம். அதனால் தான் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இலங்கை எம்.பிக்களை அழைத்து கவுரவிக்க திட்டம் போட்டப்பட்டது. பின் இடதுசாரி எம்.பிக்கள் உட்பட பலரின் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகும் மத்தியஅரசின் சபாநாயகர் மீராகுமார் இலங்கை எம்.பிக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு ஒட்டு மொத்த தமிழினத்தின் தன்மானத்தை காற்றில் பறக்க வைத்து விட்டார்கள். இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று நடவடிக்கை எடுக்கவும் செய்கிறது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் உறவுகளுக்காக குரல் கொடுப்பது இறையாண்மைக்கு எதிரான விசயமா? இல்லை தமிழர்கள் இந்தியர்களே இல்லையா என்பதை தமிழ்மாநில காங்கிரஸ் விளக்க வேண்டும். 


         சரி நம் ராதா கதைக்கு வருவோம். இப்படியாக பல்வேறு அநியாயங்களை சந்தித்து வளர்ந்ததால் தான் ராதாவால் கலகங்களை ஏற்படுத்திய நாடகங்களை உருவாக்க முடிந்தது. நாடகத்தைப் பார்க்க வரும் ரசிகர்களைக் கூட விட்டு வைக்க மாட்டான் ராதா. தனக்குத் தவறென்று தோன்றிவிட்டால் அது யாராக இருந்தாலும் விளாசித்தள்ளும் குணம் ராதாவினுடையது.


      ஒருமுறை நாகப்பட்டினத்தில் நாடகம். 7 மணிக்கு நாடகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 6 மணிக்கே கூட்டம் குமிந்து விட்டது. அலைகடலென மக்கள் வெள்ளம் ராதாவின் நாடகத்தைப் பார்க்க. நமக்கு கூட்டம் சேர்ந்துவிட்டால் தான் என்ன செய்கிறோம் என்று நமக்கேத் தெரியாதே. இது தமிழனைப் பீடித்திருக்கின்ற நோயல்லவா. கூட்டம் கத்தத் துவங்குகிறது. "ஓய் ராதா நாடகத்தப் போடுடா" என்று பலர் கத்தத்துவங்கினர். ராதா மேக்கப் அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். உதவியாளர் மூலம் என்ன நடக்கிறதென்று விசாரிக்கிறான். "என்னயா இது நாடகம் 7 மணிக்கு தானே போடுவாம் ன்னு விளம்பரம் பண்ணிருக்கோம்". "ஆமாண்ணே. இவங்க இப்படித்தான்னே கூட்டமா கூடிட்டாங்கன்னா இப்படித்தாண்ணே பேசுவாங்க. விடுங்கண்ணே".


        ராதா மிகுந்த கோபத்தோடு நேராக பாதி மேக்கப்புடன் மேடைக்குப் போகிறான். கூடவே கையில் ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு போகிறான். விபரீதம் நடக்கப்போவதை ராதாவின் உதவியாளர்கள் உணர்கின்றனர்.




(தொடரும்........)



என்றும் புன்னகையுடன் 
வெ.அருண்பாரதி






திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கலகங்களைக் காதலித்தவன் - 5






                            இன்றைய காலத்தில் ஆட்சியாளர்களாக இருக்கட்டும். நம்மைப் போன்ற சமானிய மக்களாக இருக்கட்டும் வாய்ச்சொல்லில் வீரர்களாக இருக்கிறோம். மற்றவர்களின் செயல்களை தீர்மானிக்கிற நீதிபதியாகவும், நம்முடைய செயல்களுக்கு வழக்கறிஞர்களைப் போலவும் செயல்படுபவர்களாக இருக்கிறோம். தன் தவறுகளை ஒத்துக் கொள்கிற மனப்பக்குவம் கூட நம்மில் யாருக்கும் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் செயல்பாடு என்று வந்துவிட்டால் பூச்சியம் தான். காரணம் நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள். இன்றைய குடும்பங்கள் உறவுச்சூழல்கள் கூட போராடும் குணத்தை, உதவும் மனப்பாங்கை ஊக்குவிப்பதில்லை. தான், தனது, தனக்கு என்கிற மனோநிலை ஏறக்குறைய எல்லாருக்கும் வந்துவிட்டது. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்கிற எண்ணத்தில் வாழ்பவர்கள் இன்று பெருத்துவிட்டனர். அதனால் தான் தேர்தல் என்பதைக்கூட வெற்று சம்பிரதாயமாக பார்க்கிறார்கள். ஓட்டுப்  போடுவது என்பது நம் அனைவரின் கடமை. நாம் உரிமைகளைப் பெறுவதில் எந்த அளவுக்கு நமக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதே ஆர்வம் கடமைகளை நிறைவேற்றுவதிலும் இருக்கவேண்டும்.    


       இன்று யாராவது ஏதாவது வித்தியாசமாக செய்கிறார்கள் என்றால் அவருக்கு எந்தளவுக்கு ஆதரவுக்குரல் வருகிறதோ, அதே அளவுக்கு எதிர்ப்பும் வலுத்து விடுகிறது. எகிப்தின் துனிஷியா போன்ற வெளிநாடுகளில் சாதாரண பதினாறு வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் பேஸ் புக் பதிவு கூட புரட்சியை பற்ற வைக்கும் தீக்குச்சியாகிவிடுகிறது. ஆனால் இங்கே சுதந்திரம் வாங்கி 64 வருடங்கள் ஓடிய பின்பும் இன்னும் அனைத்து மக்களுக்குமான சமூக விடுதலை என்பது நிறைவேறாத கனவாகவே விளங்குகிறது.

                                                 " பாலுக்கு அழும் குழந்தை
                                                கல்விக்கு ஏங்கும் சிறுவன்
                                                வேலைக்கு அலையும் இளைஞன் 
                                                இல்லாத இந்தியாவே உண்மையான
                                                சுதந்திர இந்தியா "

             என்ற மாவீரன் பகத்சிங்கின் கூற்று, கனவு வெறுங்கனவாக, ஏட்டில் எழுதப்பட்ட வெற்று எழுத்தாகவே இருக்கிறது. கண்களை திறக்க வேண்டிய கலைமகளே கண்கள் குருடாக்கப்பட்டு காசுள்ளவர் பாதையில் கயவர்களின் கைக்கோர்ப்பில் போய்விடுகிறாள். ஏழைக்கு கல்வியும், நல்ல உணவும், பாதுகாப்பான வாழ்வும் எட்டாக்கனியாகவே இன்னும் இருக்கிறது. மக்களுக்காகவே தாங்கள் வாழ்வதாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், நித்யானந்தா போன்ற "அவதாரப்புருஷர்"களும் மக்களை என்னவெல்லாம் செய்து ஏமாற்ற முடியுமோ, வாய்ப்பேச்சில் வீழ்த்த முடியுமோ அதைச் செவ்வனே செய்து வருகிறாகள். இன்றைய சினிமாக்காரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. 

          
                  ஆனால் ராதா தான் என்ன நினைத்தானோ அதையே பேசினான். எதைப் பேசினானோ அதையே செய்தான். எதிர்ப்புகளுக்கு அவன் அஞ்சவே இல்லை. மிரட்டல்களுக்கு என்றும் அடிபணிந்ததே இல்லை. அதனால் பெரியார் போன்ற தலைவர்களே வியந்து போகிற அளவுக்கு அவனால் இருக்க முடிந்தது. "விதவையின் காதல்" நாடகத்தைப் பார்க்க வந்த பெரியாரும், அண்ணாவும் வியந்து "நாங்கள் நடத்தும் நூறு மாநாடுக்கு ராதாவின் ஒரு நாடகமே சமம்" என்று வாயாரப் புகழமுடிந்தது. 


                 பொதுவாக பெரியார் என்ற மனிதரிடம் சான்று வாங்குவது என்பது குதிரைக் கொம்பான விசயம். மனதில் பட்டதை நேராகவே பேசிவிடும் குணமுள்ளவர் பெரியார். ஒரு முறை விழுப்புரத்தில் புகையிலை, வெற்றிலை வியாபாரிகள் மாநாட்டிற்குப் பெரியார் தலைமை தாங்க அழைப்பு விடுக்கப்பட்டார். பெரியாரும் கலந்து கொண்டு இப்படி பேச ஆரம்பித்தார் "இந்த மாநாட்டோட தொழில விட்டுறணும். என்னயா வியாபாரம் இது புகையிலை, வெற்றிலை. இது உடம்புக்கு கேடுன்னு தெரியாதாக்கும். இதப்போய் வித்துகிட்டு மாநாடு வேற நடத்துறீங்க. அதுக்கு வெங்காயம் என்னயப் போய் பேசக்கூப்டுருக்கீங்க" அதோடு அவர்கள் விட்டுவிட்டார்கள் தொழிலை அல்ல. பெரியார் போன்ற தலைவர்களை அழைப்பதை.


               இப்படிப்பட்ட பெரியாரே ரசித்த கலைஞன் தான் ராதா. "விதவையின் காதலு"க்குப் ராதா நாடகம் தொடங்குவதற்கு முன்பாக மேடையேறி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் பெரியார். ராதாவும் அதையே விரும்பினார். ஒரு முறை இப்படித்தான் பெரியார் பேச ஆரம்பிக்கிறார். கீழே நாடகத்தைப் பார்க்க வந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. பெரியாரை எதிர்க்கும் எதிர்கட்சிக்காரர்கள் ஒரு சிலர் "ஓய் ராதா நாங்க உன் நாடகத்த தான் பாக்க வந்துருக்கோம், இந்த கெழவனோட பேச்ச கேக்க வரல" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்கள். பெரியாருக்கு சங்கடமாகப் போய் விடுகிறது. ஏனெனில் நாடகத்தைப் பார்க்க வருகிறவர்கள் கட்டணமாக பணம் செலுத்தி அல்லவா நாடகம் பார்க்க வருகிறார்கள். அனுமதி இலவசமாக இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் இது கட்டணம் வசூலித்தல்லவா நடத்தப் படுகிறது. பெரியார் பேச்சை நிறுத்தி கீழிறங்க முயற்சிக்கிறார். 


                   மேக்கப் அறையில் இருந்த ராதா வெளியே வந்து நடந்ததை விசாரிக்கிறான். பின் பெரியாரை நிறுத்தி மேடைக்கே அழைத்து வந்து "நாடகம் இத்துடன் நிறைவு பெற்றது. இனி பெரியார் தான் பேசுவார். இருக்க இஷ்டம் இருந்த இரு. இல்லன்னா எந்திரிச்சி ஓடு. உன் 5 பேருக்காக மட்டும் நா நாடகம் நடத்தல" என்று எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுத்தான். இந்த பதிலை பெரியாரே எதிர்பார்க்கவில்லை. ஒரு நடிகனின் வீரம் அவன் சிந்தனையில் மட்டும் இல்லை. அவன் செயல்பாட்டில் தான் இருக்கிறது என்பதை நிரூபி்த்தவன் ராதா.  


                  அவனின் நாடகங்கள் இந்துத்துவத்தையும், மூடபழக்கங்களையும் காரணம் இல்லாமல் எதிர்க்கவில்லை. காரணங்கள் நிறைய ராதா கைவசம் வைத்திருந்தான்.


(தொடரும்......)


என்றும் புன்னகையுடன் 
வெ.அருண்பாரதி

சனி, 6 ஆகஸ்ட், 2011

கலகங்களின் காதலன் - 4





     ராதாவின் நாடகங்கள் பலரால் எதிர்க்கப்பட்டாலும் யாரும் ராதாவின் நாடகங்களை வெறுக்கவில்லை. அந்த காலத்தில் ராதாவின் நாடகம் ஒரு நாடகம் ஓரிடத்தில் போடப்படுகிறது என்றால் அந்தப் பகுதிகளின் மேல் சர்ச்சைகளும், பரபரப்புகளும் தானாக வந்தமர்ந்து கொள்ளும். ராதாவின் நாடகங்களும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் தட்டுத்தடுமாறி இருக்கும். மறக்காமல் ஒவ்வொரு நாடக கொட்டகையிலும் ஒரு போர்டை எடுத்து மாட்டிவிடுவார் ராதா.

        
       அந்த போர்டில் உள்ள போர்டில் உள்ள வாசகங்களை எழுத்துக் கூட்டி படித்தால் "உள்ளே வராதே" என்று இருக்கும். எனது நாடகத்தைப் பார்த்துவிட்டு யாருடைய மனதாவது புண்படுகிறது என்றால் தயவு செய்து உள்ளே வராதே என்று எல்லா நாடகங்களிலும் சொல்வார் எம்.ஆர்.ராதா.


     அதையும் மீறி நாடகத்திற்குச் சென்றால் மேடையே புத்தகங்களின் நூலகமாக ஆக்கி வைத்திருப்பான். "என் நாடகம் பார்த்துவிட்டு எவனுக்காவது சந்தேகம் வருகிறதென்றால் இதிலிருக்கும் புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்" என்று வெளிப்படையாகவே பேசுவார் எம்.ஆர்.ராதா. ஏறக்குறைய "கீமாயணம்" நாடகமும் அப்படித்தான் நடந்தது. 


        'உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, மானுட விடியலின் சின்னமான அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!


    பெரியாரோடு சேர்ந்ததால் தான் ராதா மதத்தை, பார்ப்பனியத்தை எதிர்த்தார் என்று நீங்கள் நினைக்கலாம். நம்பலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நான் முதல்பதிவிலேயே அந்த சம்பவத்தை சொல்லியிருந்தேன். சொல்லப்போனால் பெரியாரோடு எம்.ஆர்.ராதா சேரவில்லை, எம்.ஆர்.ராதாவோடு தான் பெரியார் சேர்ந்தார். 

                                       "அறிவைத் தடுப்பாரை
                                          மானம் கெடுப்பாரை
                                         மண்ணோடு பெயர்க்க வந்த
                                         கடப்பாறை தந்தை பெரியார்"

என்று பெரியாரைப் பற்றி 4 வரிகளில் முடிக்கிறார் காசி ஆனந்தன். அப்படிப்பட்ட பெரியாரா எம்.ஆர்.ராதாவோடு சேர்ந்தார் என்று நீங்கள் சந்தேகப்படலாம். உண்மை அது தான்.  அதே சமயம் அண்ணாவும் ராதாவின் தீவிர ரசிகன் என்றால் உங்கள் நம்ப முடியாது.


             ''திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 1967-ல் தமிழகத்தை ஆண்டு வந்தது காங்கிரஸ். பக்தவச்சலம்     முத( ை)லமைச்சராக இருந்தார். அப்போது ஏற்பட்ட அரிசிப் பஞ்சமும், காங்கிரஸின் அலட்சியமும் காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டியடித்தது. தேர்தலில் காங்கிரஸூக்கு மக்கள் சரியான பாடம் புகட்டினார்கள். பின் 1967ல் அண்ணாவின் திராவிடர்கழக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தது. அப்போது ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார் என்பது தனிக்கதை.


             ஒருமுறை பேரறிஞர் அண்ணா  ராதாவின் ஒரு நாடகத்தைப் பார்த்து விட்டு பெரியாரின் காதில் ஒரு விசயத்தைச் சொல்கிறார். "ராதான்னு ஒருத்தன் நாடகம் போடுறான். பார்த்துருக்கீங்களா?", "இல்லை" என்று பதில் வருகிறது. "அவன் உங்களோட கருத்த தான் நாடகமா போடுறான். கூட்டம் அள்ளுது" என்றார். பெரியாரும் ஆவலாக ராதாவின் நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெரியாரும், அண்ணாவும் விழுப்புரத்திற்கு வருகிறார்கள். நாடகத்தைப் பார்க்கிறார்கள். மெய்சிலிர்ந்து போகிறார் தந்தை பெரியார். நாடகம் முடிந்ததும் பெரியார் மேடையேறி ராதாவைப் புகழ்ந்து பேசுகிறார். ஏற்கனவே ராதாவின் மனதில் பெரியார் எனும் பிம்பம் மதிப்பு மிகுந்ததாக வரையப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் பெரியார் ராதாவின் தலைவர், நண்பர் ஆனார். அதற்குப் பிறகு ராதாவின் நாடகம் தொடங்குவதற்கு முன்னர் பெரியாரின் உரை கட்டாயம் தவறாமல் இடம் பெறும். 


            இப்படித்தான் ஒருமுறை ராதாவின் நாடகம் தொடங்குவதற்கு முன்பு பெரியார் பேச ஆரம்பித்தார். அப்போது தான் பெரியாரே எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. அது என்னவெனில்..........

(தொடரும்.........)


என்றும் புன்னகையுடன் 
வெ.அருண் பாரதி  




  

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 3






           People laugh, Becasue am different; 
           i laugh because they are all same.

                                          - Vivekanandar


                     மேற்கண்ட இந்த வரிகள் மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ,  நிச்சயம் ராதாவிற்குப் பொருந்தாமல் போகாது. ஒரு கலைஞனின் வீரம் என்பது அவனது படைப்புக்களில் விட அவன் அதை வெளிக்கொணர்கிற விதத்தில் தான் தெரியும். இன்று ஆட்சியாளர்கள் மாறும்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தவறாமல் புகழந்து தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ளத்துடிக்கும் திரையுலகம் ஒரு நிமிஷமேனும் ராதாவை நினைத்துப் பார்க்க வேண்டும். ஆட்சி அதிகாரம், மக்கள், மதம், பார்ப்பனியம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை ராதா. தடைகள் ஆயிரம் வந்தாலும் தன் கருத்தை ஓங்கியே சொல்லி வந்திருக்கிறான். இன்று "silent" என்பதைக் கூட சத்தமாகத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

                          
                  ராதாவின் "கீமாயணம்" சந்தித்த தடைகள் இதுவரை எந்த நாடகமும் சந்தித்த வரலாறு இல்லை. திரையிட்ட எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள். ராதாவின் நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை அவனது எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை. அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பான். 'நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில் எழுதியும் வைப்பான்!

         
            அந்த காலத்தில் நடிகர்களுக்கு குறிப்பாக நாயகர்களுக்கென்று ஒரு எழுதப்படாத இலக்கணம் உண்டு. ஒரு பிரபலமான நாயகன் என்றால் அவன் கடவுளுக்கு நிகரானவன். மனிதனுக்குரிய குணங்கள் எதுவும் அந்த நாயகனுக்கு இருக்காது. அந்த காலத்தில் எந்த படத்திலும் அறிமுகக் காட்சியில் நடிகன் கைகால்களை சொறிந்து கொண்டு அறிமுகம் ஆகிறபடியான காட்சிகள் இருக்காது. எந்த நடிகனும் முதுகைக் காட்டி நடிக்க மாட்டான். சாதாரண மனிதனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கே இந்த நிலைமை என்றால் கடவுள் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகனின் அறிமுகக்காட்சி எப்படி இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த இலக்கணத்தை எல்லாம் தூக்கி எறிந்தான் ராதா. 


          தனது "கீமாயணம்" நாடகத்தின் அறிமுகக் காட்சியே ராதாவின் தனித்தன்மையை காட்டி விடும். அந்த நாடகத்தில் ராமனாக நடித்தார் ராதா. ராமன் தன் அறிமுகக் காட்சியில் மேசையில் தன் காலை வைத்து "பரக்.... பரக்...." என்று சொறிவான். போகப் போக ராமனும் ஒரு மனிதன் தான் என்பதை சொல்லாமல் சொன்னான் ராதா. கீமாயணத்தில் சீதை ராமனைப் பார்த்து "ராமா, ராமா" என்று ஒருமையில் தான் அழைப்பதாக காட்சிகள் வைத்தான். இப்போது வரையிலும் எந்த வீட்டிலும் கணவனின் பெயரையே சொல்ல முடியாத நிலைமை தானே இருக்கிறது. இதில் கணவனை எப்படி ஒரு மனைவி ஒருமையில் அழைக்கமுடியும்? உண்மை என்னவெனில் கன்னட ராமாயணத்தின் படி ராமனை விட சீதாவுக்கு வயது அதிகம். ஆகவே கீமாயணத்தில் சீதா ராமனை ஒருமையில் அழைத்ததாக காட்சிகள் வைத்தான் ராதா. சும்மா விடுமா ஆணாதிக்க, மதம் எனும் போதை ஏறிப்போன தமிழ்சமூகம். ராதா கடவுளை கொச்சைப் படுத்துவதாக வழக்கு போட்டது. 


                       கும்பகோணத்தில் கீமாயணத்தை திரையிட்ட போது ராதாவை கைது செய்ய போலிஸ் வந்தது. கைது செய்ய வந்தவர்களை ராதா கொஞ்சம் காத்திருக்க சொன்னான். உள்ளே போய் ராமனின் வேஷத்தில் வந்து "இப்ப கைது பண்ணிக்க.ஏன்னா மேடையில பேசுனவன் ராதா இல்ல ராமன். நீ கைது பண்றதா இருந்தா ராமன தான் கைது பண்ணனும். இப்ப நான் ராமன் வேசத்துல இருக்குறதுனால நான் ராதா இல்ல ராமன். இப்ப கைது பண்ணிக்கடா" என்றான். 

               
               உலக நாடக வரலாற்றில் முதன்முறையாக இந்துக்களின் கடவுளான ராமன் காவல்துறையால் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை கும்பகோணம் தெருக்கள் பார்த்துக் கொண்டிருந்தன.


(தொடரும்..........)

என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 1




அந்த காலத்தில் நாடகங்கள் போடுவதற்கு மூல ஊற்றாக இருந்தது ஜெனரேட்டர்கள் தான் என்று சொன்னால் மிகையல்ல. அந்த காலத்திய ஜெனரேட்டர்கள் என்றால் இப்போது இருப்பதைப் போன்று சிறிய அளவில் இருக்காது. ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கும் அந்த காலத்திய ஜெனரேட்டர்கள். ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் விளக்குகளை எரிய வைப்பார்கள். அதற்கு முன்னால் ஜெனரேட்டர்களை மேனுவலாக சுத்த விட்டு ஆன் செய்வார்கள். அந்த காலத்தில் நாடகக் கம்பெனி வைத்திருந்த ஜெகநாதன் ஜெனரேட்டர் ஆன் பண்ணுவதை மிகவும் பக்திமயமாக செய்வார். ஜெனரேட்டர் ஆன் செய்யும் போது அதற்கு தீப ஆராதனை காட்டும் வழக்கம் அவருக்கு இருந்தது. இதை ரொம்ப நாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் புதிதாக சேர்ந்த அந்த இளைஞன். 

ஒருமுறை ஜெனரேட்டர் ஆன் ஆக வில்லை. கம்பெனி முதலாளி ஜெகநாதன் அந்த இளைஞனை அழைத்து சரி செய்யச் சொன்னார். ஏனெனில் அந்த இளைஞனுக்கு எலக்ட்ரிக்கல் வேலைகளும் கொஞ்சம் தெரியும். அவன் வந்து அந்த ஜெனரேட்டரில் தன் தலையை விட்டுப் பார்க்கிறான். பிரச்சனை வேறு ஒன்றும் இல்லை. ஒரு வயர் அறுந்து கிடக்கிறது. அதை இணைத்தால் ஜெனரேட்டர் ரெடியாகிவிடும். ஆனால் அந்த வேலையை அவன் நேரடியாகச் செய்யாமல் ஏதோ தேர்ந்த வேலைக்காரன் போல் பாவ்லா செய்து பத்து நிமிடங்கள் கழித்து அந்த வயரை இணைத்து சரி செய்கிறான்.

வேலை முடிந்ததும் முதலாளியிடம் செருப்பைக் கேட்கிறான். பதறிப் போன முதலாளி ஏன் செருப்பைக் கேட்கிறாய் என்று கேட்கிறார். "சும்மா குடுங்க முதலாளி" என்கிறான். செருப்பு கையில் கிடைத்ததும் அந்த ஜெனரேட்டரை செருப்பால் அடி அடி என்று அடித்து ஸ்டார்ட் பண்ணச் சொல்கிறார். ஜெனரேட்டர் ஸ்டார்ட் ஆகிறது. முதலாளியிடம் "என்ன முதலாளி ஜெனரேட்டர் இது. தீபராதனை காட்டுனாலும் ஸ்டார்ட் ஆகுது. செருப்பால அடிச்சாலும் ஸ்டார்ட் ஆகுது" என்று சர்வ சாதாரணமாக ஒரே நிமிடத்தில் கண்மூடி வழக்கத்தை மண்மூடிப் புதைக்கிறான்.

அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல.  ராதாகிருஷ்ணனாக நாடகத்துறையில் இளம் வயதில் நுழைந்து பின்னாட்களில் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் பல்வேறு கலகப் புரட்சிகளை ஏற்படுத்திய எம்.ஆர்.ராதா தான்.