புதன், 3 ஆகஸ்ட், 2011

கிறுக்கன்


          விபரம் புரியாத சிறிய வயதில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவளை பலமுறை சீண்டிப் பார்த்திருக்கிறேன் நான். மற்ற பையன்கள் அவளிடம் 100ரூபாய்க்கு சில்லறை இருக்கா என்று கேட்டு அவளால் துரத்தப்படுவதை பார்த்திருக்கேன். அதையே நானும் செய்தேன். "பாலம்மா கிட்ட அத கேக்காத அடிக்க வருவா" என்று வீட்டில் திட்டு வாங்கிய பின்பே நிறுத்திக் கொண்டேன். 

            பாலம்மா என்று அவளைச் சொன்னால் யாருக்கும் தெரியாது "பையத்தியக்காரி பாலம்மா" (பிசி பாலம்மா - செளராஷ்டிரா மொழியில் பிசி என்றால் பைத்தியக்காரி என்று அர்த்தம்) என்று சொன்னால் தான் தெரியும். பழைய கிழிந்த புடவை, கைகளில் நிறைய வளையல். இது தான் அவளின் தோற்றம். 

               பலர் அவளை கிண்டல் செய்தாலும் பசி என்று வந்து விட்டால் எந்த வீட்டில் கூட அவளுக்கான உணவு தயாராக இருக்கும். இருந்தாலும் யார் வீட்டிலும் அவள் கேட்டு வாங்கி சாப்பிட்டதாக நான் பார்த்தது இல்லை. மதிய நேரத்தில் அவள் எந்த வீட்டிற்குப் போகிறாளோ அங்கு அவளுக்கு கேக்காமலே மதிய உணவு கிடைக்கும். எல்லா கல்யாண வீடுகளிலும் பத்திரிக்கை குடுக்காமலே ஆஜராகும் ஒரே ஜீவன் இவளாகத்தான் இருப்பாள். இத்தனைக்கும் இவளுக்கு சொந்தங்கள் நிறைய உண்டு என்று என் அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றேன். இவளது அக்கா இவளுக்குச் சேர வேண்டிய சொத்தை திட்டமிட்டு அபகரித்துக் கொண்டதால் இப்படி ஆகினாள் என்றும், கரண்ட் ஷாக் அடித்ததால் பித்து பிடித்தவள் போலாகிவிட்டாள் என்றும் கூறுவோர் உண்டு. இருந்தாலும் இவளது சொந்தங்கள் ஏன் இவளைப் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு அம்மாவிடம் இருந்து பதில் வரவில்லை. நாங்கள் வீடு மாறி வேறு தெருவிற்கு வந்து பல வருடங்கள் ஆகி விட்டதால் அவள் இருக்கிறாளா என்று கூட தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டால் கூட அவர்களும் தெரியாது என்ற பதிலையே என் முன் வைக்கின்றனர்.

              இதே போல் எங்கள் தெருவில் இன்னொரு பையன் இருந்தான். அநேகம் அவனைத் தெரியாதவர்கள் எங்கள் தெருவில் இருக்கவே முடியாது. இன்னும் அதே தெருவில் தான் இருக்கிறான். "ஏ அந்த புள்ள யார் கூட ஓடிப் போச்சி, அந்த மாடி வீட்டுப் பொண்ண யாருக்கு நிச்சயம் பண்ணிருக்கானுவோ, அடுத்த தெருவுல விஎம்ஆர் வீட்டுக்கு புதுசா யாரு குடி வந்துருக்கா" இது போன்ற கேள்விகளுக்கு யாரிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் "அந்த வில்சனிடம்" பதில் இருக்கும். 

                     நேற்று முன்தினம் எங்கள் பழைய தெருவிற்குச் சென்ற போது அவனைப் பார்க்க நேரிட்டது. ஓரளவு உயரம் வளர்ந்திருக்கிறான். அதே பேச்சு, மழலைப் பேச்சு. என்னைப் பார்த்து என்னிடம் வந்தவன், "ஏ அருண் உங்க அம்மா செத்து போச்சாமே. நீ சரியா அம்மாவ பாத்துக்கலயா? பாத்துக்காம வேற என்ன செஞ்சிட்டு இருந்தே" என்று கேட்டான். என் அம்மா இறந்து 7 வருடங்களுக்கு மேல் ஆகிறது. நானே சில சமயங்களில் மறந்து இருக்கிறேன். ஆனால் இவன் சரியாக ஞாபகம் வைத்திருந்தான். அவனைப் பார்த்து பதில் சொல்லி விட்டு அகன்றேன். 

                நாங்கள் பேசும் செளராஷ்டிரா மொழிக்கு எழுத்துருவம் யாருக்கும் தெரியாது. வெறும் வழக்கு மொழியாகவே இன்றளவும் அந்த மொழியை பேசியே காப்பாற்றி வருகிறோம். சொல்லப்போனால் எங்கள் மொழியை சிறுவயதிலிருந்தே கற்றுக் கொள்ளாமலேயே மிகத் தெளிவாய் பேசுவான் வில்சன். பிறந்தது வேற்று மதமாக இருந்தாலும் எங்கள் குடும்பங்களில் ஒருவனாகவே இன்றளவும் இருந்து வருகிறான்.

              ஊரில் எது நடந்தாலும் இவனுக்கு தெரிந்து விடும். தெரிந்த விசயத்தை கேட்கும் போது சொல்லவே மாட்டான். சொல்ல வேண்டும் என்று அவனாக நினைத்தால், விரும்பினால் மட்டுமே சொல்வான். ஊர்ப் பெரியவர்கள் எப்படியாவது அவனது வாயில் இருந்து விசயத்தை வரவழைக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

           அனைவரிடமும் வெகு சகஜமாக பழகுவான். ஆனால் இவனை பைத்தியம் என்றோ, கோட்டி என்றோ, கிறுக்கு என்றோ யாராவது அழைத்து விட்டாலோ, சீண்டி விட்டாலோ போதும் அவர்களிடம் அதற்குப் பிறகு பேசவேமாட்டான். அவர்கள் வீட்டிற்கு போகவே மாட்டான். இருந்தாலும் இவனை பலர் சீண்டிப் பார்த்திருக்கிறேன். இவன் தந்தை மின் ஊழியர். தாயார் இல்லத்தரசி. இவனுக்கு இவனது தந்தை குடிப்பார் என்ற காரணத்திற்காகவே பிடிக்காது. 

           ஒருமுறை இப்படி தான் பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். "லூசுப் பய என்ன லூசுன்னு சொல்றான். அவன் தான் லூசு. அந்த பார்வதி அம்மா பாவம். உடம்பு சரியில்லாத  அம்மாவ கைநீட்டி அடிக்கிறது தப்புன்னு கூட தெரியாத அவன் லூசு தான்" தெருவே அதிரும் படி கத்திக் கொண்டே சென்றான். அதற்குப் பக்கத்து வீட்டில் கணவன் மனைவியின் சண்டையை இன்னொரு கணவன் மனைவி ரசித்துக்கொண்டிருந்தார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக