கோவில்களில் பலியிடுவது
ஆடு மாடுகளைத்தான்;
சிங்கங்களை அல்ல!
- டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் பராசக்தி வெளிவந்த காலகட்டம் அது. சென்னையில் உள்ள வண்ணார்ப் பேட்டையில் ஒரு எளிய குடிசை வீட்டில் வசித்து வந்த தோழர் ஜீவாவை பதட்டத்துடன் அவரது சிஷ்யர்களில் ஒருவர் காண வந்திருந்தார். "ஜீவா, ஜீவா பராசக்தி படம் பாத்தியா. அது உங்க கத ஜீவா. ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நீ எழுதியிருந்தியே. பணக்கார குடும்பம் ஒன்னு, இருக்குற சொத்துல்லாம் பறி போயி குடும்பம் பிரிஞ்சி காணாம போய்டுவாங்கன்னு..... அது உன் கத ஜீவா. படம் பிச்சிக்கிட்டு போய்ட்டு இருக்கு. கதய திருடிட்டாங்கன்னு கோர்ட்ல கேஸ் போட்டா கோர்ட்டுக்கு போகாம நேரா உன்னத்தான் தேடி வருவாங்க லட்சக்கணக்குல பேசி பணம் வாங்குனா இந்த குடிசைய இடிச்சி பெரிய மாடி வீடா கட்டிடலாம்......." என்று ஒரே மூச்சாக பேசி முடித்தார் அந்த சீடர்.
ஜீவா பதட்டப்படாமல் மிகவும் பொறுமையாக "ஏ.... யப்பா. பொறு. பராசக்திங்கிற. என் கதன்னு வேற சொல்ற. நான் செய்த வாளை என்னுடையது என்று அறியாமல் பெட்டியில் துருபிடித்துக் கிடந்ததை என் மகன்களில் எவனோ ஒருவன் கூர்மைப்படுத்தி அதை மக்கள் கையில் தந்திருக்கிறான். அந்த மகனின் கைக்கு முத்தம் தராமல் வழக்கு போடச் சொல்கிறாயே" என்றார் ஜீவா.
பராசக்தி படம் நாம் பார்த்திருப்போம். கலைஞர் கருணாநிதியின் வேலை அந்தப் படத்தின் வசனம் மட்டும் தான். மிகச் சிறந்த கதையம்சத்திற்காகவும், வசனத்திற்காகவும் பேசப்பட்ட படம் அது. அந்த படத்திற்கு கல்கி விமர்சனம் எழுதியிருந்தார். கல்கிக்கும், கருணாநிதிக்கும் முரண்பாடுகள் அதிகம். கல்கி இராஜாஜியின் சீடர். கருணாநிதி பெரியாரின் சீடர். தன்னை பகுத்தறிவுவாதி என்று இன்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்று இருந்தார். ராமாயணத்தை தீயிட்டு கொழுத்து என்றவர் தந்தை பெரியார். ராமாயணத்தை தமிழில் எழுதியது இராஜாஜி. இப்படி எல்லாவற்றிலும் முரண்பாடுகள் இருந்தன கல்கிக்கும், கருணாநிதிக்கும். இருந்தாலும் கல்கி பராசக்தி படம் பார்த்து விமர்சனம் எழுதியிருக்கிறார்.
"தமிழை இது வரையிலும் காதல் மொழி, பக்தி மொழி என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பராசக்தி பார்த்த பின்பு தான் புரிந்து கொண்டேன், தமிழ் வீரமான மொழி என்று"
இப்படி எதிர் துருவத்தில் இருந்தவர்கள் கூட ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நேசித்த காலமது. ஆனால் இன்று...............? சமச்சீர் கல்விக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்று செய்திகள் வெளியாயின. ஏதோ சமச்சீர்கல்வியை கண்டுபிடித்தது கருணாநிதி தான் என்கிற அளவில் பேசுகின்றனர். இந்திய மாணவர் சங்கம் உட்பட இடதுசாரிகளின் போராட்டங்கள் இல்லை என்றால் சமச்சீர் கல்வி கனவாகவே போயிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு திமுக கவுன்சிலர் ஒருவர் சொன்னார் "எங்க கலைஞர் கொண்டு வந்தாருன்னு ஒரே காரணத்துக்காகவே அந்த ஜெயலலிதா சமச்சீர் கல்விய நிப்பாட்டப் பாத்திச்சி. இப்ப எங்க கலைஞர் தான் ஜெயிச்சாரு. எங்க கலைஞர் பேரு வந்துடும்ன்னு ஒரே காரணத்துக்காக தான் புதுச கட்டுன சட்டமன்ற கட்டிடத்த ஆஸ்பத்திரிய மாத்தி பேரு வாங்க பாக்குது ஜெயா". இப்படித்தான் ஆட்சியாளர்களின் மனநிலை இருக்கிறது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் பழைய திட்டங்கள் எல்லாம் மூட்டை கட்டப்படுகின்றன. பழைய அரசுக்கு ஜால்ரா அடித்தவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்கிற அண்ணாவின் வார்த்தை உண்மையாக வேண்டும்.
ஆட்சி அதிகாரங்கள் மாறும் போதெல்லாம் அந்தந்த அரசுக்கு ஏற்ப ஜால்ரா போடுபவர்கள் தான் இன்றைய சினிமாக்காரர்கள் என்று அவர்கள் மேல் ஒரு அவப் பெயர் உண்டு. இதையெல்லாம் தன் வாழ்க்கையின் மூலம் நொறுக்கியவன் தான் ராதா எனும் ஒரு மகா கலைஞன். தன் எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் தன் கருத்தை விட்டுக் கொடுக்காத குணத்தை தான் அவனிடம் பார்க்க முடியும். அது நீதிபதியாக இருந்தாலும் சரி.
"விதவையின் கண்ணீர்" நாடகத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் நீதிபதி கணேசன் ஒரு ஐயர். அவர் நாடகத்தைப் பார்க்காமல் தீர்ப்பு வழங்கமாட்டேன் என்று கூறவே அவர் முன் நாடகம் அரங்கேறுகிறது. ராதாவின் உதவியாளர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். வழக்கமாக நடக்கும் அடிதடிகள், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்துவிட்டால் பிரச்சனையாகிவிடுமே என்று பயந்து நடுங்கினர். ஆனால் பயமோ, பதட்டமோ ராதாவிடம் சத்தியமா இல்லை. அன்றைய நாடகத்தில் எந்த வசனங்களையும் ராதா மாற்றவில்லை. அப்படியே போட்டான். ஆனால் ஒரு வசனத்தை அன்று புதிதாக சேர்த்திருந்தான் ராதா. நாடகம் ஆரம்பிக்கும் போது ஒருவர் ராதாவிடம் வந்து (ராதாவின் ஏற்பாடு தான்) "என்னய்யா நாடகம் போடுத இதல்லாம் எவன்யா பாப்பான்" என்றான். அதற்கு ராதா "அதெல்லாம் பாப்பான் பாப்பான்" (பாப்பான் - பிராமணர்களை குறிக்கும் சொல்)
இப்படி அந்த பிராமணிய நீதிபதியையும் விட்டுவைக்கவில்லை ராதா. நாடகம் முடிந்ததும் நீதிபதி மேடையேறி பேச வேண்டும் என்றார். ராதாவின் உதவியாளர்கள் முடிவே செய்து வி்ட்டார்கள் "போச்சு போச்சு எல்லாம் போச்சு. ராதாண்ண பேசுன பேச்சுக்கு கண்டிப்பா அவருக்கு ஆறு மாசமோ, ஒரு வருசமோ தான். கோர்ட்டே மேடையேறி வந்துட்டு" இப்படி புலம்பவே ஆரம்பித்து விட்டனர். ஆனால் நடந்தது தான் வேறு.
"எங்கள் குடும்பங்களில் எங்கள் பெண்கள் அனுபவிக்கிற கொடுமைகளை இந்த நாடகத்தை விட வேறு எந்த நாடகத்தால் சிறப்பாக சொல்ல முடியும்? இந்த நாடகத்தை தடை செய்யச் சொல்லி தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த நாடகம் இங்கு மட்டுமல்லாது தமிழகமெங்கும் போட அனுமதியளிக்கிறேன்" என்று தீர்ப்பு கூறினார். எதிராளி யாராக இருந்தாலும் என் கொள்கையை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்கிற ஒரு கலைஞனையும், தன் சொந்தச் சாதியில் பிறந்தாலும் தப்பை மறைக்காமல் தப்பு என்று ஒத்துக் கொண்ட அந்த உயர்ந்த நீதிபதியையும் அன்றைய தமிழகம் கண்டு ரசித்தது.
எதையும் கண்டு பயப்படாத துணிச்சல், பகுத்தறிவுக் கொள்கைகளின் மேல் அவன் கொண்டிருந்த தீராத காதல் அவனை யாரிடமிருந்தும் ஒதுக்க முடியாத அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்திருந்தது.
தேர்தலின் போது காமராஜரிடம் பெரியார், "ஏ... அந்த ராதாவ கூப்டு பிரச்சாரம் பண்ணச் சொல்லுங்கப்பா. கூட்டம் வரும்" என்கிறார். ராதாவும் பெரியாருக்காக ஒப்புக் கொள்கிறார். பிரச்சாரம் முடிந்து செல்லும் வழியில் ஒருவர் ராதாவிடம் காமராசர் உங்களுக்கு ஒரு இருபதாயிரம் ரூவா கொடுக்கச் சொன்னாரு என்று பணத்தை கொடுக்க முயல்கிறார். அதற்கு ராதா "ஓஹோ என் பேச்சுக்கு வல இருபதாயிரம் ரூவா தானா? உன் தலைவர் காமராசர் கிட்ட போய் சொல்லு. ராதாவுக்கு வில கெடையாதுன்னு. பெரியார் சொன்னதுக்காக மட்டும் தான் வந்தேனே தவிர இந்தப் பணத்துக்கு ஆசப்பட்டு வரவேயில்ல. உன் தலைவன் கிட்ட சொல்லு எவனாலயும் ராதாவ விலைக்கு வாங்க முடியாதுன்னு" என்று பணத்தை வாங்க மறுத்து திரும்ப அனுப்புகிறார். அது தான் ராதா.
தொடரும்..........
என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக