பொதுவாக மேடைகளில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் அதை அவர் முதலில் பின்பற்றுவாரா என்பது சந்தேகம் தான். இப்படிப் பட்டவர்களுத்தான் ஒரு பழமொழி இருக்கிறது ஊருக்குத் தான் உபதேசம், தனக்கு இல்லை. ராதா அப்படிப்பட்டவனல்ல. அவனது வார்த்தைகள், நாடகத்தில் அவன் பேசும் வசனங்கள் எல்லாம் அவன் வாழ்க்கையிலிருந்து தான் எடுத்துக் கொண்டான். இன்று தமிழினத் தலைவர்களாக தன்னை காட்டிக் கொள்பவர்கள், தமிழுக்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்று வீர வசனம் பேசியவர்கள், மக்களுக்காகவே தான் அரசியல் நடத்துவதாக புளங்காகிதம் அடைபவர்கள் யாரும் தன் சொந்த இன மக்கள் அந்நிய தேசத்தில் கொத்துக்குண்டுகளால் கொல்லப்பட்ட போதும், கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளால் கருவறுக்கப்பட்ட போதும் தன் மகன்களுக்கு மந்திரி பதவி கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தினரே தவிர தனக்கு ஓட்டு போட்ட மக்களை நினைக்கவே இல்லை. இன்று இருக்கிற பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஈழப்பிரச்சனையை ஓட்டு அரசியலாக மாற்ற முயன்றனரே தவிர, அப்பிரச்சனையை தங்கள் சுயலாபத்துக்காக மாற்றச் செய்தனரே தவிர நம் சொந்த மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கவேயில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு வார்த்தை வேறு, வாழ்க்கை வேறு. இன்றைய நடிகர்களாக இருக்கட்டும், மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் கொஞ்சம் பிரபலமாகி விட்டால் போதும் உடனே கட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது நாங்கள் தான் என்று உளர ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் ராதா தன் நாடகங்களைப் பிடித்து, தன் கொள்கைகளைப் பிடித்து தன்னைப் பின்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் வந்தபோதும் ''போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா'' என்று அவர்களை விரட்டியடித்தாரே தவிர கூட்டம் சேர்க்கவில்லை. இவனைப் போன்ற நல்ல மனிதர்கள் இனி கிடைப்பது என்பது மிகவும் அரிது.
எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் தன் கருத்தை வெளிப்படையாக சொல்பவனே உண்மையான கலைஞன். யாருக்காகவும் தன் கருத்தை விட்டுக்கொடுக்காதவனே நல்ல தலைவன். ராதா நல்ல கலைஞனாகவும், கூட்டம் சேர்க்காத நல்ல தலைவனாகவும் வாழ்ந்தான். “கலை கலைக்காகவேன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான். வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது”, என்று உண்மையை உரைக்கக் கூறியவன் ராதா.
நாடகத்தைப் பார்க்க வந்தவர்கள் நாடகத்தைப் போடச்சொல்லி கத்திய போது கோபம் கொண்டு பாதி மேக்கப்பிலேயே ஒரு நாயைப் பிடித்து மேடைக்கு வந்து ராதா நாயைப் பார்த்துச் சொன்னான் " ஏழு மணியின்னா ஏழு மணிக்கு தான் பிஸ்கட் போடுவேன். இடையில எவ்வளவு கொலைச்சாலும் போட மாட்டேன்" என்று நாடகம் பார்க்க வந்தவர்களையே நாய் என்று யாருக்கும் பயப்படாமல் சொன்னான். கூட்டம் அதற்கும் கை தட்டியது. இதைப் பார்க்கும் போது காசி ஆனந்தனின் ஒரு கவிதை தான் எனக்கு ஞாபகம் வரும்.
"ஆடாய், மாடாய் போனாயடா தமிழா என்றேன்.
கை தட்டினார்கள்"
நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, தன் சொந்த வாழ்க்கையிலும் சரி ராதா கொச்சைத் தமிழ் தான் பேசினான். நல்ல தமிழ் பேசிய நடிகர்கள் எல்லாம் நாட்டை குப்பையாக்கிய போது கொச்சைத் தமிழ் பேசிய ராதா தான் நாட்டை சுத்தமாக்குகிற வேலையைச் செய்தான். செல்வந்தர்களை, அதிகாரப் மமதையிலிருப்பவர்களை ராதா மதித்ததே இல்லை.
அந்த காலத்தில் ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா போன்ற கார்கள் மிகப் பிரபலம். இந்த கார்கள் அப்போது சிவாஜி போன்ற பெரும் நடிகர்களிடம் மட்டுமே இருந்தது. ராதாவிடம் கூட இப்படிப்பட்ட கார்கள் இருந்தன. இருந்தாலும் பணக்காரன் என்ற கர்வமோ, ஆணவமோ ராதாவிடம் துளியும் இல்லை. தன் இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்!
"விதவையின் கண்ணீர்" என்ற நாடகத்தின் மூலம் ஆசாரமான இந்து குடும்பங்களில் வாழும் விதவைப் பெண்கள் சந்திக்கும் அவலங்களுக்கு சாட்டையடி கொடுத்தான் ராதா. நாடகத்தை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. வழக்கின் நீதிபதி ஒரு கணேசன் ஐயர். அவர் நாடகத்தைப் பார்க்காமல் தீர்ப்பு சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டார். நீதிபதி மேடைக்கு கீழே அமர்ந்திருக்க நாடகம் தயாரானது. ராதாவின் நாடகத்தில் நடிக்கின்ற நடிகர்கள் ஒரு வித பதட்டத்திலேயே இருந்தனர். ராதாவிடம் பயமோ, பதட்டமோ துளி அளவும் இல்லை. அன்றைய நாடகத்தில் எந்த ஒரு வசனத்தையும் குறைக்கவில்லை. ஆனால் அந்த பிராமண நீதிபதிக்காகவே சர்ச்சைக்குரிய ஒரு புதிய வசனத்தை சேர்த்திருந்தான் ராதா.
தொடரும்...........
தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக