வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கலகங்களைக் காதலித்தவன் - 2







எம்.ஆர்.ராதா நாடகம், திரைப்படத்துறையில் பல கலகப் புரட்சிகளை ஏற்படுத்தியதன் காரணம் அவன் பிறக்கும் போதே எழுதப்பட்டு விட்டது. அவன் பிறந்த தினத்தில் ஜெர்மனியின் "எம்டன்" போர்க்கப்பல் சென்னையில் குண்டு வீசிய தருணம். வெடிச்சத்தங்களோடு பிறந்ததாலேயோ என்னவோ அநீதி கண்டு வெடிப்பவனாகவே வாழ்ந்தான் எம்.ஆர்.ராதா என்றழைக்கப்பட்ட மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன். 

ஆரம்ப காலங்களில் நாடகத்துறையில் நடித்துப் பேர் வாங்கி திரைப்படத்துறையில் வந்தவர்கள் பிற்பாடு வளர்த்து விட்ட நாடகத்துறையை மறந்து விடுவார்கள். எம்.ஆர்.ராதா அப்படிப்பட்டவனல்ல. ரத்தக்கண்ணீர் நாடகத்தை திரைப்படமாக எடுக்க நேசகி பிக்சர்ஸ் எம்.ஆர்.ராதாவை அணுகிய போது எம்.ஆர்.ராதா வைத்த நிபந்தனைகள் இரண்டு. 

1. அந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கியவர் கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் என்ற கேபி.சுந்தராம்பாள். நந்தனார் படத்தில் ஆண் வேடமிட்டு நடித்து ஒரு லட்ச ரூபாய் சம்பளமாகப் பெற்றவர். அந்த ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் தந்தால் தான் நடிக்க வருவேன்.

2. நான் நாடகத்துறையில் இருந்து நடிக்க வந்து பிற்பாடு திரைப்படங்களை வெறுத்து மறுபடியும் நாடகத்துறைக்கே சென்றவன் அதனால் பகலில் மட்டும் தான் சினிமா ஷூட்டிங்க்கிற்கு வருவேன். மாலை நாடகத்திற்கு சென்று விடுவேன்.

இந்த இரண்டு நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மட்டுமே ரத்தக்கண்ணீர் படமானது.

உன் கொள்கை தெளிவானது என்றால் தொடர்ந்து செல், ஊர் வாய் உளறட்டும் என்ற மாமேதை காரல் மார்க்ஸின் வரிகளில் வாழ்ந்து காட்டியவன் இவன். 'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டால் "எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம்" என்ற பதில் தான் அவனிடம் இருந்து வரும்!

எம்.ஆர்.ராதா நடித்த திரைப்படங்கள் மொத்தம் 118. 1963ல் மட்டும் 22 படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரே நடிகன் அநேகம் ராதாவாகத்தான் இருக்கமுடியும். ராதாவின் நாடகங்களைப் பார்த்த ராதா நிச்சயம் குறைந்தது பட்டப்படிப்பாவது படித்திருப்பார் என்றே நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மை அதுவாக இருக்கவில்லை. சிறுவயதிலேயே படிப்பை வெறுத்து, "தான் ஒரு அநாதை" என்று பொய் சொல்லி ஆலந்தூர் அரங்கசாமி நாடகக்குழுவில் சேர்ந்தான். வசனங்களை எழுதி மனப்பாடம் செய்து அதை நாடகத்தில் அச்சு அசலாக பேசும் திறன் ராதாவுக்கே உரியது. அதே சமயம் திடீர் வசனங்களால் பார்ப்போரை அதகளப்படுத்திவிடுவான் ராதா. 

வழக்கமாக ஒரு ஊரில் நாடகம் நடக்கிறதென்றால் அந்த ஊரின் உயரதிகாரிகள் சிறப்பு பாஸ் வாங்கி முன் வரிசையில் அமர்ந்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தையும் விட்டு வைக்கவில்லை ராதா. நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்பு பேசுவது ராதாவின் இயல்பு. அதில் அந்த நாடகத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லி, அந்த நாடகத்திற்காக தான் படித்த புத்தகங்கள் போன்ற தகவல்களை சொல்லி முடித்த பின்பே நாடகத்தை ஆரம்பிப்பான். திருநெல்வேலியில் ஒரு முறை நாடகம் நடக்கும் போது பேச ஆரம்பித்தான். "காசு கொடுத்து விட்டு கடைசி ரோவில் அமர்ந்திருக்கும் கலா ரசிகர்களே, ஓசி பாஸ் வாங்கி முன் வரிசையில் அமர்நதிருக்கும் கனவான்களே!" முதல் வரிசை காலியானது.

(எம்.ஆர்.ராதா அவர்களை எப்போதும் என் தோழனாகவே நினைக்கிறேன். ஆகவே உரிமையோடு ராதாவை அவன்-இவன் என்று அழைத்திருப்பேன். தவறு இருப்பின் பொறுத்துக் கொள்ளவும். தோழமை எப்போதும் மரியாதையை எதிர்பார்க்காது)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக