ராதாவின் நாடகங்கள் பலரால் எதிர்க்கப்பட்டாலும் யாரும் ராதாவின் நாடகங்களை வெறுக்கவில்லை. அந்த காலத்தில் ராதாவின் நாடகம் ஒரு நாடகம் ஓரிடத்தில் போடப்படுகிறது என்றால் அந்தப் பகுதிகளின் மேல் சர்ச்சைகளும், பரபரப்புகளும் தானாக வந்தமர்ந்து கொள்ளும். ராதாவின் நாடகங்களும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் தட்டுத்தடுமாறி இருக்கும். மறக்காமல் ஒவ்வொரு நாடக கொட்டகையிலும் ஒரு போர்டை எடுத்து மாட்டிவிடுவார் ராதா.
அந்த போர்டில் உள்ள போர்டில் உள்ள வாசகங்களை எழுத்துக் கூட்டி படித்தால் "உள்ளே வராதே" என்று இருக்கும். எனது நாடகத்தைப் பார்த்துவிட்டு யாருடைய மனதாவது புண்படுகிறது என்றால் தயவு செய்து உள்ளே வராதே என்று எல்லா நாடகங்களிலும் சொல்வார் எம்.ஆர்.ராதா.
அதையும் மீறி நாடகத்திற்குச் சென்றால் மேடையே புத்தகங்களின் நூலகமாக ஆக்கி வைத்திருப்பான். "என் நாடகம் பார்த்துவிட்டு எவனுக்காவது சந்தேகம் வருகிறதென்றால் இதிலிருக்கும் புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்" என்று வெளிப்படையாகவே பேசுவார் எம்.ஆர்.ராதா. ஏறக்குறைய "கீமாயணம்" நாடகமும் அப்படித்தான் நடந்தது.
'உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, மானுட விடியலின் சின்னமான அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!
பெரியாரோடு சேர்ந்ததால் தான் ராதா மதத்தை, பார்ப்பனியத்தை எதிர்த்தார் என்று நீங்கள் நினைக்கலாம். நம்பலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நான் முதல்பதிவிலேயே அந்த சம்பவத்தை சொல்லியிருந்தேன். சொல்லப்போனால் பெரியாரோடு எம்.ஆர்.ராதா சேரவில்லை, எம்.ஆர்.ராதாவோடு தான் பெரியார் சேர்ந்தார்.
"அறிவைத் தடுப்பாரை
மானம் கெடுப்பாரை
மண்ணோடு பெயர்க்க வந்த
கடப்பாறை தந்தை பெரியார்"
என்று பெரியாரைப் பற்றி 4 வரிகளில் முடிக்கிறார் காசி ஆனந்தன். அப்படிப்பட்ட பெரியாரா எம்.ஆர்.ராதாவோடு சேர்ந்தார் என்று நீங்கள் சந்தேகப்படலாம். உண்மை அது தான். அதே சமயம் அண்ணாவும் ராதாவின் தீவிர ரசிகன் என்றால் உங்கள் நம்ப முடியாது.
''திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 1967-ல் தமிழகத்தை ஆண்டு வந்தது காங்கிரஸ். பக்தவச்சலம் முத( ை)லமைச்சராக இருந்தார். அப்போது ஏற்பட்ட அரிசிப் பஞ்சமும், காங்கிரஸின் அலட்சியமும் காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டியடித்தது. தேர்தலில் காங்கிரஸூக்கு மக்கள் சரியான பாடம் புகட்டினார்கள். பின் 1967ல் அண்ணாவின் திராவிடர்கழக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தது. அப்போது ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார் என்பது தனிக்கதை.
ஒருமுறை பேரறிஞர் அண்ணா ராதாவின் ஒரு நாடகத்தைப் பார்த்து விட்டு பெரியாரின் காதில் ஒரு விசயத்தைச் சொல்கிறார். "ராதான்னு ஒருத்தன் நாடகம் போடுறான். பார்த்துருக்கீங்களா?", "இல்லை" என்று பதில் வருகிறது. "அவன் உங்களோட கருத்த தான் நாடகமா போடுறான். கூட்டம் அள்ளுது" என்றார். பெரியாரும் ஆவலாக ராதாவின் நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெரியாரும், அண்ணாவும் விழுப்புரத்திற்கு வருகிறார்கள். நாடகத்தைப் பார்க்கிறார்கள். மெய்சிலிர்ந்து போகிறார் தந்தை பெரியார். நாடகம் முடிந்ததும் பெரியார் மேடையேறி ராதாவைப் புகழ்ந்து பேசுகிறார். ஏற்கனவே ராதாவின் மனதில் பெரியார் எனும் பிம்பம் மதிப்பு மிகுந்ததாக வரையப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் பெரியார் ராதாவின் தலைவர், நண்பர் ஆனார். அதற்குப் பிறகு ராதாவின் நாடகம் தொடங்குவதற்கு முன்னர் பெரியாரின் உரை கட்டாயம் தவறாமல் இடம் பெறும்.
இப்படித்தான் ஒருமுறை ராதாவின் நாடகம் தொடங்குவதற்கு முன்பு பெரியார் பேச ஆரம்பித்தார். அப்போது தான் பெரியாரே எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. அது என்னவெனில்..........
(தொடரும்.........)
என்றும் புன்னகையுடன்
வெ.அருண் பாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக