People laugh, Becasue am different;
i laugh because they are all same.
- Vivekanandar
மேற்கண்ட இந்த வரிகள் மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நிச்சயம் ராதாவிற்குப் பொருந்தாமல் போகாது. ஒரு கலைஞனின் வீரம் என்பது அவனது படைப்புக்களில் விட அவன் அதை வெளிக்கொணர்கிற விதத்தில் தான் தெரியும். இன்று ஆட்சியாளர்கள் மாறும்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தவறாமல் புகழந்து தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ளத்துடிக்கும் திரையுலகம் ஒரு நிமிஷமேனும் ராதாவை நினைத்துப் பார்க்க வேண்டும். ஆட்சி அதிகாரம், மக்கள், மதம், பார்ப்பனியம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை ராதா. தடைகள் ஆயிரம் வந்தாலும் தன் கருத்தை ஓங்கியே சொல்லி வந்திருக்கிறான். இன்று "silent" என்பதைக் கூட சத்தமாகத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ராதாவின் "கீமாயணம்" சந்தித்த தடைகள் இதுவரை எந்த நாடகமும் சந்தித்த வரலாறு இல்லை. திரையிட்ட எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள். ராதாவின் நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை அவனது எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை. அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பான். 'நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில் எழுதியும் வைப்பான்!
அந்த காலத்தில் நடிகர்களுக்கு குறிப்பாக நாயகர்களுக்கென்று ஒரு எழுதப்படாத இலக்கணம் உண்டு. ஒரு பிரபலமான நாயகன் என்றால் அவன் கடவுளுக்கு நிகரானவன். மனிதனுக்குரிய குணங்கள் எதுவும் அந்த நாயகனுக்கு இருக்காது. அந்த காலத்தில் எந்த படத்திலும் அறிமுகக் காட்சியில் நடிகன் கைகால்களை சொறிந்து கொண்டு அறிமுகம் ஆகிறபடியான காட்சிகள் இருக்காது. எந்த நடிகனும் முதுகைக் காட்டி நடிக்க மாட்டான். சாதாரண மனிதனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கே இந்த நிலைமை என்றால் கடவுள் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகனின் அறிமுகக்காட்சி எப்படி இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த இலக்கணத்தை எல்லாம் தூக்கி எறிந்தான் ராதா.
தனது "கீமாயணம்" நாடகத்தின் அறிமுகக் காட்சியே ராதாவின் தனித்தன்மையை காட்டி விடும். அந்த நாடகத்தில் ராமனாக நடித்தார் ராதா. ராமன் தன் அறிமுகக் காட்சியில் மேசையில் தன் காலை வைத்து "பரக்.... பரக்...." என்று சொறிவான். போகப் போக ராமனும் ஒரு மனிதன் தான் என்பதை சொல்லாமல் சொன்னான் ராதா. கீமாயணத்தில் சீதை ராமனைப் பார்த்து "ராமா, ராமா" என்று ஒருமையில் தான் அழைப்பதாக காட்சிகள் வைத்தான். இப்போது வரையிலும் எந்த வீட்டிலும் கணவனின் பெயரையே சொல்ல முடியாத நிலைமை தானே இருக்கிறது. இதில் கணவனை எப்படி ஒரு மனைவி ஒருமையில் அழைக்கமுடியும்? உண்மை என்னவெனில் கன்னட ராமாயணத்தின் படி ராமனை விட சீதாவுக்கு வயது அதிகம். ஆகவே கீமாயணத்தில் சீதா ராமனை ஒருமையில் அழைத்ததாக காட்சிகள் வைத்தான் ராதா. சும்மா விடுமா ஆணாதிக்க, மதம் எனும் போதை ஏறிப்போன தமிழ்சமூகம். ராதா கடவுளை கொச்சைப் படுத்துவதாக வழக்கு போட்டது.
கும்பகோணத்தில் கீமாயணத்தை திரையிட்ட போது ராதாவை கைது செய்ய போலிஸ் வந்தது. கைது செய்ய வந்தவர்களை ராதா கொஞ்சம் காத்திருக்க சொன்னான். உள்ளே போய் ராமனின் வேஷத்தில் வந்து "இப்ப கைது பண்ணிக்க.ஏன்னா மேடையில பேசுனவன் ராதா இல்ல ராமன். நீ கைது பண்றதா இருந்தா ராமன தான் கைது பண்ணனும். இப்ப நான் ராமன் வேசத்துல இருக்குறதுனால நான் ராதா இல்ல ராமன். இப்ப கைது பண்ணிக்கடா" என்றான்.
உலக நாடக வரலாற்றில் முதன்முறையாக இந்துக்களின் கடவுளான ராமன் காவல்துறையால் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை கும்பகோணம் தெருக்கள் பார்த்துக் கொண்டிருந்தன.
(தொடரும்..........)
என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக