"மச்சி ஊர் பக்கம் வரணும்னு ரொம்ப ஆசையா இருக்குடா. வர்றதுக்கு நேரமே கெடைக்க மாட்டக்கு. அப்படி வந்தாலும் ரெண்டு நாள் மேல இருக்க முடியிறது இல்ல. கம்பெனில கூப்டு உயிரு எடுத்துருதானுங்க" இது சென்னையில் இருக்கும் என் நண்பன் கனகராஜ் என்னிடம் போனில் பேசும் போதெல்லாம் தவறாமல் சொல்லும் வரிகள். வரிகள் என்பதை விட புலம்பல் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவன் சென்னைக்கு சென்று இன்றோடு 5 வருடங்களுக்கு மேலாகிறது. மூன்று வருடத்திற்கு முன் தீபாவளியன்று அவனை திருநெல்வேலியில் வைத்துப் பார்த்தேன். ரொம்பவும் ஸ்டைலாக இருந்தான். திருநெல்வேலியின் விடலைப் பசங்களுக்குரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் சென்னை இளைஞர்களின் நாகரீகம் அவனை அப்பட்டமாக அப்பியிருந்தன. குறுந்தாடி, ஸ்பைக் ஹேர் ஸ்டைல், கையில் கலர்கலராக கயிறுகள், முழுக்க முழுக்க நாக்குகளில் சரளமான சென்னைத் தமிழ். பள்ளியில் என்னோடு படித்த கனகராஜ் இவன் தானா என்று பலத்த சிந்தனைக்குப் பிறகே முடிவுக்கு வந்தேன். பார்ப்பதற்கு ஓரளவு வசதியானவனாகவே தெரிந்தான்.
"டேய் மச்சி, நல்ல சம்பாதிக்க ஆரம்பிச்சிட்ட போல இருக்கு. மெட்ராஸ்க்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் ஆளே ஒரு கோப்பா மாறிட்டியேடே. அங்கன எனக்கும் ஒரு வேல கீல இருந்தா சொல்லு. வந்து செட்டிலாகிடுறேன். ஊருக்குப் போனதும் எனக்கு ஒரு வேல ரெடி பண்ணீட்டு போன் பண்ணு" என்றேன் விபரம் புரியாமல். அவனும் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினான். அன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை கனவுகள். சென்னை போய் சேர்ந்ததும் குறைந்தது பதினைந்தாயிரம் சம்பளத்தில் ஒரு வேலைக்குச் சேருவது. முடிந்த வரை வீட்டுக்கு அனுப்புவது. அப்படியே ஒரு பைக் வாங்கி விடுமுறை நாட்களில் ஜாலியாக ஊர் சுற்றுவது. கொஞ்சம் கலராக இருப்பதால் தாராளமாக ஒரு காதலியோ அல்லது தோழியோ கிடைத்துவிடுவாள். அவளோடு பொழுதைக் கழிப்பது போன்று பல எதிர்காலத் திட்டங்கள் மனதுக்குள் வட்டமிட ஆரம்பித்தன. யதார்த்தம் மீறியதாக இருந்தாலும் ஏதோ ஒரு சிறு மயக்கம். சென்னையில் இருக்கும் பெண்கள் ஏதோ என்னைப் போன்ற பசங்களுக்குத் தான் காத்துக் கொண்டிருப்பதாக ஒரு எண்ணம்.
சென்னை சென்று செட்டிலாகும் முன்பு ஒரு முறையாவது சென்னைக்கு தனியாக சென்று விசிட் அடிப்பது என்று முடிவு செய்தேன். சென்னை செல்வதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே. நண்பனின் அக்காவுக்கு திருமணம் என்றும், நான் வரவில்லை என்றால் அவன் அக்கா கல்யாணமே செய்து கொள்ள மாட்டார்கள் என்கிற அளவில் அப்பாவிடம் கதை விட்டு, கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக சென்னைக்கு கிளம்பிவிட்டேன். அங்கே எக்மோரை சென்றடைந்ததும் நண்பன் மேளதாளத்தோடு வரவேற்பான் என்ற எதிர்பார்ப்போடு இறங்கி அவனுக்கு போன் செய்தேன். "மச்சி நான் ஆபிஸ் கெளம்புற பிசியில இருக்கேன்டா. நீ ஒண்ணு பண்ணு. நேரா வெளியில வந்து 27G பஸ்ல ஏறி கலைவாணர் ஸ்டாப்புக்கு டிக்கெட் எடுத்து வந்து எறங்கிடு. அங்க வந்து ஒரு முடுக்கு வழியா நேர வா. டிரிப்பிலிகேன் பிக் ஸ்ட்ரீட்க்கு வந்துடலாம். அங்க வந்து அம்பிகா மேன்சன் எங்க இருக்குன்னு கேளு சொல்லிடுவாங்க. அங்க வந்ததும் எனக்கு போன் பண்ணு" என்று சொல்லி போனை கட் செய்து விட்டான். சிறு ஏமாற்றம். என்ன செய்ய இப்போதைக்கு சென்னையில் இவனை விட்டால் வேறு எவனையும் தெரியாதே. கூட படிச்ச பயலுக நெறய பேரு இங்கன தான் கெடக்கானுங்க தெரியும். ஆனா எவனையும் தெரியாதே. வேறு வழியில்லாமல் எனது பையை கஷ்டப்பட்டு தூக்கி வெளியே வந்தது தான் தாமதம். குறைந்தது பத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் மேல் "சார் எங்க போகணும்" என்று மொய்த்து விட்டனர். "ப்ரண்ட் கார் எடுத்துட்டு வந்துட்டு இருக்கான்" என்று சற்றும் பொருந்தாத ஒரு பொய் சொல்லி அந்த காக்கி கூட்டத்திலிருந்து விடுபட்டு பஸ் ஸ்டாப்புக்குச் சென்று அந்த டிரைவர்கள் கண்ணில் படாதவாறு மறைந்து நின்று கொண்டேன். வருகின்ற பஸ் 27G தானா என்று ரோட்டுக்கு வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னையே வெகுநேரம் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் "தம்பி எங்க போகணும்" என்று கேட்டார். "கலைவாணர் அரங்கம் ஸ்டாப்" என்றேன். "தம்பி அந்த பஸ் இங்கன நிக்காது பக்கத்து ஸ்டாப்க்கு போ" என்றார். ஒருவழியாக அங்கேயும் சென்று காத்திருந்ததில் அரை மணி நேரம் வீணானது. பசி களைப்பையும், களைப்பு பசியையும் மாறி மாறி தூண்டியது.
பஸ் கிடைத்து ஏறியதும் உள்ளே செம கூட்டம். எல்லோரும் ஏதோ போருக்கு போகிற ராணுவ வீரர்கள் மாதிரி உம்மென்று சென்று கொண்டிருந்தனர். யார் முகத்திலும் சிரிப்போ, சிரிப்பின் அடையாளங்களோ கொஞ்சம் கூட இல்லை. அதில் ஒரு பக்க இடது சீட் காலியாக இருந்தும் யாரும் அமராதது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. கால் வலியெடுக்க சீட்டில் அமர்ந்தேன். நடத்துநர் வந்து "என்னப்பா ஊருக்கு புதுசா? இது லேடிஸ் சீட் உட்காரக்கூடாது" என்று நமட்டுச் சிரிப்பில் சொன்னார். வேறு வழியில்லாமல் ஒரு சிரமமான புன்னகையுடன் எழுந்தேன். பஸ் குலுங்கிக் குலுங்கி சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிக்னல்கள், எரிச்சலூட்டும் காத்திருப்புக்கள், ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டும் இடித்துக் கொண்டும் செல்லும் வாகனங்கள் சென்னை சாலைகளை அடைத்துக் கொண்டிருந்தன. பயணத்தின் இடையில் காற்றில் மிதந்து வந்த நாற்றம் கூவத்தின் இருப்பை உறுதி செய்தது. கண்டக்டரிடம் தனது ஸ்டாப் வந்ததும் ஞாபகப்படுத்தச் சொல்லி அவரது வாயிலிருந்து எந்த வார்த்தை வந்தாலும் எனது ஸ்டாப்பாக இருக்குமோ என்று பதறியபடியே வந்தேன். ஸ்டாப் வந்ததும் கூட்டத்தை விலக்கி இறங்குவதற்குள் கரும்புச் சாறு பிழியும் மிஷினுக்குள் சென்று வந்த உணர்வு. "யப்பா என்னடா வாழக்க இது. சென்னைக்கு வந்து வேல கெடச்சதும் மொத வேலயா ஒரு பைக் வாங்கணும். பஸ்லலாம் போய்ட்டு வந்தா உயிரே போய்டும்"
இனி நடப்பதற்கு தெம்பி்ல்லாமல் போனதால் ஆட்டோ பிடிக்க வேண்டியதாகப் போனது. நான் சொன்ன இடத்தில் ஆட்டோக்காரன் இறக்கி விட்டு சுளையாக 80 ரூபாயை உருவிக் கொண்டு போய்விட்டான். மீண்டும் நண்பனுக்கு போன் போட்டு அவன் ரூம்க்கு போய் சேரும் வரை சத்தியமாக என் உயிர் என்னிடத்தில் இல்லை. மேன்சனி்ல் ஒரே நேர் வரிசையில் 5 அறைகள். 3 மாடிக் கட்டிடம். கனகராஜின் அறை இரண்டாவது மாடியில் இருந்தது. "டேய் மச்சி, குளிச்சிட்டு ரெஸ்ட் எடு. கீழ பக்கத்துல தான் மெஸ் இருக்கு. சாப்ட மறந்துடாத. ஈவினி்ங் பேசிக்கலாம்" சொல்லிக் கொண்டே விடைபெற்றான் கனகராஜ். ஒரு சிறிய அழுக்கான அறை. ஆங்காங்கே நடிகைகளின் படங்கள். அந்த அறையில் அவனோடு 4 பேர் தங்கியிருந்தனர். பாத்ரூமைத் தேடினேன். 5 அறைகளைத் தாண்டி ஒரு பொதுவான குளியலறை. உடைந்த பிளாஸ்டிக் வாளி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டது. கடலில் குளித்தது போன்று கண்களை எரிச்சலூட்டும் உப்பு நீர். எப்படியோ குளி்த்தாகி விட்டது.
கீழே வந்து மெஸ்ஸைத் துழாவினேன். அங்கே இட்லி மட்டும் இருந்தது. அதுவும் ஆறிப்போய்...... ஒரு இட்லி 5 ரூபாய். அநியாயம் தான். வேறு வழியில்லை. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். மீண்டும் மேன்சனுக்கு வந்து களைப்பில் உறங்கிப் போனேன். தூக்கம் கலைந்து எழுந்திரிக்கும் போது மணி 3. நண்பன் வர இன்னும் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக ஆகிவிடும். என்ன செய்வது என்று புரியாமல் வெளியே வந்து நடை போட ஆரம்பித்தேன். மெயின் ரோட்டுக்கு வந்து நேரே சென்றால் மெரினா என்று சொன்னார்கள். வெயில் கொஞ்சம் பயமுறுத்தியது. ரூமில் கிடந்து அல்லாடுவதை விட கடலைப் பார்க்கலாம். நடந்தேன். வழியெங்கும் கடைகள், கரை படிந்த அழுக்கான மனிதர்கள். யாரையும் கண்டுகொள்ளாத தன் வேலையை மட்டுமே பார்க்கும் மனிதர்கள்.
பீச்சில் ஆங்காங்கே குடைகள் தெரிந்தன. குடைகளுக்குள் இரு உருவங்கள் தெரிந்தன. சில குடைகள் காக்கிகளைப் பார்த்ததும் மடிந்து கொண்டு கிளம்பி வேறு இடம் தேடத் தொங்கின. சில குடைகள் வெயிலின் உஷ்ணத்தோடு தன் உஷ்ணத்தையும் கலக்கிக் கொண்டிருந்தன. எட்டிப் பார்க்க மனமில்லை. இதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை. நடந்தேன். வெப்பமடிக்கும் கடல் காற்று. ஆங்காங்கே முளைத்திருக்கும் சிறு கடைகள். மிளகாய் பஜ்ஜி, மாங்காய், சுண்டல் விற்கும் சிறுவர்கள். பாவம் ஏழ்மையும், ஏக்கமும் கண்களில் தெரிந்தது. இருந்தாலும் கடல் கொஞ்சம் ஆறுதல் தந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல். நேரம் போகப் போக வெப்பம் தணியத் தொடங்கி பரவசமூட்டும் குளிர் காற்று வீசத் தொடங்கியது. சனிக்கிழமையாதலால் கரைகளெங்கும் மனிதர்கள். சில மனிதர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர். சில மனிதர்கள் கால்களை நனைத்து கடலை அழுக்காக்கிக் கொண்டிருந்தனர். அலைகளும் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டன. நேரம் ஆறைத் தாண்டியது. கடலிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்.
போகும் வழியில் போதை மனிதர்கள் தன்நிலை மறந்து ரோட்டின் ஓரத்தில் வேறு ஒரு உலகத்தைத் தேடிக்கொணடிருந்தார்கள். அறைக்கு வந்து சேர்ந்தபோது நண்பனின் அறையிலிருந்த மற்றவர்கள் என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு அவர்கள் வேலையில் மூழ்கிப் போனார்கள். எல்லோரும் புதியவர்கள் என்பதால் பேச கூச்சம். நண்பன் வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். உடலின் சக்தி எல்லாம் வற்றிப் போய் மிகவும் களைத்துப் போய் வந்தான் நண்பன். பார்க்கவே பாவமாக இருந்தது. அவனோடு வெளியே ஊர் சுற்றப் போகும் எண்ணத்தை மனதிலேயே புதைத்துக் கொண்டேன். வந்தவன் நேராக முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டான். "என்ன மச்சி இவ்ளோ டையர்டா வந்து பேஸ் மட்டும் கழுவிருக்க. ப்ரெஸ்ஸா குளிச்சிட்டு வரவேண்டியதானேடா" என்றேன். "குளிக்கவா? டேய் இது நம்ம ஊர் இல்ல. மெட்ராஸ். நெனச்ச நேரத்துக்கு தண்ணி வராது. காலைல மட்டும் தான் தண்ணி வரும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் குளி்ச்சிக்கணும். நானே வாரத்துக்கு 4 நாள் தான் குளிப்பேன்னா பாத்துக்கோயேன்" என்றான். உண்மையில் சென்னை அவனை ரொம்பவே மாற்றியிருந்தது. எங்கள் ஊரில் அவனுக்கு க்ளீன் கனகராஜ் என்ற பெயர் உண்டு. பள்ளி நாட்களில் ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது குளிப்பான். சுத்தம் விசயத்தில் ரொம்பவும் அக்கறை காட்டுகிற இவனா இப்படி மாறிப் போனான் என்று ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்.
அப்படியே அவனது வேலையைப் பற்றியும், சென்னையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். இரவு உணவை முடித்து விட்டு அறைக்குத் திரும்பியதும் அவன் களைப்பாக இருக்கிறதென்று உறங்கப் போய் விட்டான். மற்றவர்கள் யார் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தனர். உறவுகள் இல்லாத தேசத்தில் அவர்களின் ஒரே ஆறுதல் செல்போன் தானே. நானும் உறங்கலாம் என்று நினைத்து படுக்கையை விரித்தேன். தூக்கம் வரவில்லை. கொஞ்ச நேரத்தில் நண்பனின் செல்போனுக்கு அவன் வீட்டிலிருந்தது கால் வந்தது. அவனை எழுப்பினேன். செல்லை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசி விட்டு எரிச்சலோடு உள்ளே வந்தான். என்னவாக இருக்கும் என்று அறியும் ஆசையில் "என்ன மாப்ள வீட்ல இருந்து கூப்டாங்களா? என்ன சொன்னாங்க?" என்றேன். "அட போடா. அத ஏன் கேக்குற, தங்கச்சி வயசுக்கு வந்துட்டாளாம். நாளைக்கி தண்ணீ ஊத்தப் போறாங்க. செவ்வாய்க் கிழம விசேசம் பண்ணனுமாம். ஊருக்கு கெளம்பி வரச் சொல்றாங்க. இப்ப கம்பெனில செம டைட் ஒர்க். லீவு கெடைக்க சான்ஸே இல்ல. அதோட கையில கொஞ்சம் கூட காசே இல்ல. ஒரு தடவ ஊருக்குப் போய்ட்டு வந்தாலே கொறஞ்சது ரெண்டாயிரம் ரூவா காலியாயிருது. இதுல சொந்தக்காரனுங்க வேற ஊர்ல இருந்து வர்றப்ப அத வாங்கிட்டு வா, இத வாங்கிட்டு வா ன்னு உசுற வாங்கிடுறானுங்க. அவங்களுக்கு பயந்தே ஊருக்கு வர மனசு இல்ல. என்னமோ நா இங்க ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சி வீட்டுக்கு அனுப்புறதா அவங்களுக்கு நெனப்பு. என்ன பண்ணு. இங்கன நா நாய் பொழைப்பு பொழைக்கிறது அங்க எவனுக்கு தெரியப்போவுது. மாசம் ஐம்பதாயிரம் ரூவா சம்பளம் வாங்குனாலும் இங்க காணாது மச்சி. இங்க ரூவா மட்டும் தான் பேசும். ரூவா இருக்குறவனுக்கு மெட்ராஸ் ஒரு சொர்க்கம். என்ன மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு இது நரகம் தான்.........." பேசப் பேச எனக்குள் நான் கட்டி வைத்திருந்த கோட்டை தவிடு பொடியாகிக் கொணடிருந்தது. சென்னையில் வேலை தேடி செட்டிலாக வேண்டும் என்று மயக்கத்திலிருந்த என்னை எழுப்பி விட்டு அவன் மறுபடியும் உறங்கத் தொடங்கினான். அவன் நிம்மதியாய் உறங்குகிறானா? சந்தேகம் தான்......
தொடரும்...............
என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக