பேரறிவாளன் உட்பட 3 பேரை 7 நாளில் தூக்கில் போட ஜனாதிபதி உத்தரவு இது தான் இன்றைய தலைப்புச் செய்தி. ஏற்கனவே அவர்கள் 20 வருடம் சிறை வாசம் அனுபவித்து விட்டார்கள். இதற்கு மேல் தூக்கில் போட என்ன இருக்கிறது? பேட்டரி எடுத்து கொடுத்ததன் ஒரே குற்றத்திற்காக பேரறிவாளன் காங்கிரஸ் அரசாங்கத்தால் கொலை செய்யப்படப்போகிறார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் அரசாங்கம் நம்மை எதிரியாகப் பார்க்கிறது. வாய் கிழிய அரசியல் பேசும் சிவகங்கைச் சிங்கங்கள் இந்த விசயத்தில் ஊமையாகிப் போனார்கள். ஈழத்தமிழர்கள் என்ன பாவம் செய்து வி்ட்டார்கள்? நாட்டையா கேட்டார்கள்? உரிமை தானே கேட்டார்கள். அதுவும் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமை. மனிதனாக வாழ்வதற்காக உரிமை. உரிமை மறுக்கப்படுவது தீண்டாமை இல்லையா? தீண்டாமை பாவச் செயல் என்று புத்தகங்களில் அச்சடிப்பதோடு ஒரு அரசின் கடமை முடிந்து விடுகிறதா? ஒரு காங்கிரஸ் தலைவரை கொன்றதற்காக தமிழினம் ஒட்டு மொத்தமாக தீவிரவாத இனம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கபட்டது. ஆனால் இதே கட்சியின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்கள் இன்று நாட்டை ஆளும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். திபெத் நாட்டின் பிரச்சனைகளில் தலையிட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மத்திய அரசாங்கம், திபெத் நாட்டின் தலைவர்களுக்கு இடம் கொடுத்த மத்திய அரசாங்கம் தமிழர்களை கை கழுவி விட்டது. நாங்கள் இந்தியர்கள் இல்லையா? நாங்கள் இந்தியாவில் இல்லையா? முதலில் நாங்கள் மனிதர்கள் இல்லையா? உலகத்தமிழினத் தலைவர் எங்கே போனார்?
இன்று அன்னாவின் ஊழல் போராட்டம் உலகத் தொலைக்காட்சிகளில் 24 மணி நேர நேரடி ஒளிபரப்புச் செய்திகளாகிறது. இந்தியாவின் பிரதான பிற மொழிச் செய்திகளில் வலம் வருகிறது. ஆனால் வாழ்வதற்கான உரிமை கேட்கும் இந்த 3 பேரின் குரல்....?
ராதாவைப் பற்றிய கட்டுரையில் இது அவசியம் தானா? என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். ''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்'' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தவன் ராதா. ராதா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் அவன் கனவு நிறைவேறி இருக்கலாம். துரோகிகளை வார்த்தைகளால் சாடி இருந்திருப்பான். வசைமாரி பொழிந்திருப்பான். கலகங்களோடு பிறந்தவன் கனவுகளோடு மாண்டு போனான் .தம் கடைசி வயதில் கூட நாடகங்களில் நடித்தான் படங்களில் நடித்தான். எம்ஜிஆரை சுட்டதாக சொல்லப்பட்ட வழக்கில் தண்டனையாகி விடுதலையான பின்பு தான் வீழ்ந்துவிட்டதாக நினைக்கவில்லை. லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து விடுதலையான எம்கே தியாகராச பாகவதரைப் போல ராதா துவண்டு போகவில்லை. தன் கடைசிப் படமான பஞ்சாமிர்தம் வரையிலும் துவண்டு போகாமல் நடித்தான். எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!
ராதாவை அசர வைக்கும் துணிவு அன்று யாரிடத்திலும் இருக்கவில்லை. எப்போதும் சுயமனிதனாக இருந்தவன் அன்று ராதா மட்டும் தான். நாட்டில் கம்யூனிஸ்ட் தோழர்களை ஒடுக்க அவசர நிலைப் பிரகடனத்தை மத்திய அரசாங்கம் ஏவி விட்ட போது ஆபத்தானவன் என்று அடையாளம் காணப்பட்டு கைதான ஒரே கலைஞன் எனக்குத் தெரிந்து எம்ஆர் ராதா மட்டும் தான். அதைக் கூட அவன் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டான். ஒரு முறை அவன் மனைவியிடம் "உங்க புருசன் இனிமேல் இது போல் செய்ய மாட்டேன்னு எழுதிக் குடுத்தா விட்டுருவாங்க. உங்க புருசன் தான் வீம்புக்கு எழுதித்தர மாட்டுக்காரு" என்று சிலர் ஊதிவிட்டார்கள். அவர் மனைவியும் இதை நம்பி சிறையில் கணவரைப் பார்க்க வந்தபோது "ஏதோ எழுதிக் குடுத்தா விட்டுருவாங்களாமே" என்று கேட்க அதற்கும் ராதா "அடி போடி விவரம் இல்லாதவளே. என்னய எதுக்கு புடிச்சிட்டு வந்துருக்கான்னு எனக்கே தெரியாது. இதுல என்னத்த நான் எழுதிக் குடுக்க? இப்ப நா தூங்கிட்டு இருந்தேன். இனிமே தூங்க மாட்டேன்னு எழுதிக்குடுக்கட்டா?" என்று யதார்த்தம் கலையாத தூக்க கலக்கத்தோடு பதில் சொல்லியிருக்கிறான் ராதா. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது, கலகங்கள் சூழ்ந்தது, யதார்த்தமானது. சுயத்தன்மையை இழக்காமல் முழு மனிதனாகவே வாழ்ந்திருக்கிறான் ராதா. அவனை விருதுகள் அலங்கரிக்கவில்லை. விருதுகளைத்தான் அவன் அலங்கரித்தான்.
1966ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார்.
ஒருமுறை ராதா நாடகம் நடத்தும்போது அவருக்குத் தீராத வயிற்றுப்போக்கு. அவரால் நடிக்க முடியாத நிலை. எனவே தனக்குப் பதிலாகத் தன்மகன் வாசு நடிப்பார் என்று அறிவித்த ராதா, "விருப்பமிருப்பவர்கள் நாடகம் பார்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் கவுண்டரில் சென்று டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்" என்று அறிவித்தார். ஆனால் இன்று இருக்கிற அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகள் தான் தலைவர்களாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களின் கட்சியில் அடிப்படைத் தொண்டனின் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
காமராசரின் மீதும், கருணாநிதியின் மீதும் அன்பும் பாசமும் கொண்டிருந்தான். கருணாநிதிக்கு கலைஞர் என்கிற பட்டம் கொடுத்ததே ராதா தான். அதே சமயம் கம்யூனி்ஸ்ட் இயக்கத்தின் மீதும் தீராத காதல் கொண்டிருந்தான் ராதா. கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட போது ஜீவானந்தத்திற்கு பட்டையடித்து ஒரு வித்தியாசமான தோற்றத்தை வடித்தான் ராதா. சொல்லப்போனால் ஜீவாவின் காதலியாகி பின் மனைவியான பத்மாவதிக்கு காதல் கடிதம் கொண்டு செல்லும் தூதுவனாகவே மாறிப்போனவன் ராதா. ஒருமுறை அந்த கடிதத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று அறியும் ஆசையில் ஜீவாவிடம் கேட்க ஜீவா உண்மையைச் சொல்ல அதற்கு ராதா "நல்ல பொழப்ப எனக்கு குடுத்திய போங்க. நா என்னமோ புரட்சி பண்றீங்கன்னுலா நெனச்சேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். அதற்கு ஜீவா "சாதியென்றும், மதமென்றும் பார்க்கும் இந்தச் சமுதாயத்தில் காதலிப்பதே ஒரு புரட்சி தானே" என்று சொன்னார்.
இப்படி ராதா ஜீவாவின் மேல் வைத்திருந்த அன்பு அளப்பரியது. அன்றைய காலத்தில் வறுமையில் வாடிய இளம் நடிகர்களுக்காகவே நாடகங்களை நடத்தி உதவி செய்து வாழ்ந்தவன் ராதா. இன்று எல்லாம் மாறிப் போனது. நல்லவர்களை நல்லவர்கள் நேசித்தார்கள். இன்று தனிமனித அக்கறை காணாமல் போய்விட்டது. சமூகத்தின் மீதான மக்களின் பார்வை வெகுவாகக் குறைந்து விட்டது. மீண்டும் அந்தப் பழைய சமுதாயம் மலர வேண்டும்.
இது போன்ற வரலாறுகளை, அரசியல் நிகழ்வுகளை வீட்டில் இருக்கும் பெண்களிடமும் விவாதிக்க வேண்டும். இன்று வெளியில் அரசியல் பேசுகிறோம், டீக்கடையில் அரசியல் பேசுகிறோம். ஆனால் வீட்டிற்கு வந்து விட்டதும் செருப்பை வாசலில் கழற்றிப் போடுவதைப் போல அரசியலையும் வாசலோடு விட்டுவிடுகிறோம். அதனால் தான் இன்று எவன் எவனோ அரசியல் பேசுகிறான். அரசியல் பண்ணுகிறான். எதிர்காலம் இப்படியே இருந்துவிடப்போவதில்லை. மாற்றங்கள் நிகழவேண்டும். அந்த மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும். இனி வரும் காலங்களில் எரியப் போகிற புரட்சி தீபத்தின் ஆரம்ப நெருப்பாக நாம் இருப்போம். நன்றி.
தீப் பற்ற வை.
மக்கள் நெருப்பென எழுவார்கள்
- மாவோ
என்றும் புன்னகையுடன்
வெ.அருண் பாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக