இன்றைய காலத்தில் ஆட்சியாளர்களாக இருக்கட்டும். நம்மைப் போன்ற சமானிய மக்களாக இருக்கட்டும் வாய்ச்சொல்லில் வீரர்களாக இருக்கிறோம். மற்றவர்களின் செயல்களை தீர்மானிக்கிற நீதிபதியாகவும், நம்முடைய செயல்களுக்கு வழக்கறிஞர்களைப் போலவும் செயல்படுபவர்களாக இருக்கிறோம். தன் தவறுகளை ஒத்துக் கொள்கிற மனப்பக்குவம் கூட நம்மில் யாருக்கும் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் செயல்பாடு என்று வந்துவிட்டால் பூச்சியம் தான். காரணம் நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள். இன்றைய குடும்பங்கள் உறவுச்சூழல்கள் கூட போராடும் குணத்தை, உதவும் மனப்பாங்கை ஊக்குவிப்பதில்லை. தான், தனது, தனக்கு என்கிற மனோநிலை ஏறக்குறைய எல்லாருக்கும் வந்துவிட்டது. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்கிற எண்ணத்தில் வாழ்பவர்கள் இன்று பெருத்துவிட்டனர். அதனால் தான் தேர்தல் என்பதைக்கூட வெற்று சம்பிரதாயமாக பார்க்கிறார்கள். ஓட்டுப் போடுவது என்பது நம் அனைவரின் கடமை. நாம் உரிமைகளைப் பெறுவதில் எந்த அளவுக்கு நமக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதே ஆர்வம் கடமைகளை நிறைவேற்றுவதிலும் இருக்கவேண்டும்.
இன்று யாராவது ஏதாவது வித்தியாசமாக செய்கிறார்கள் என்றால் அவருக்கு எந்தளவுக்கு ஆதரவுக்குரல் வருகிறதோ, அதே அளவுக்கு எதிர்ப்பும் வலுத்து விடுகிறது. எகிப்தின் துனிஷியா போன்ற வெளிநாடுகளில் சாதாரண பதினாறு வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் பேஸ் புக் பதிவு கூட புரட்சியை பற்ற வைக்கும் தீக்குச்சியாகிவிடுகிறது. ஆனால் இங்கே சுதந்திரம் வாங்கி 64 வருடங்கள் ஓடிய பின்பும் இன்னும் அனைத்து மக்களுக்குமான சமூக விடுதலை என்பது நிறைவேறாத கனவாகவே விளங்குகிறது.
" பாலுக்கு அழும் குழந்தை
கல்விக்கு ஏங்கும் சிறுவன்
வேலைக்கு அலையும் இளைஞன்
இல்லாத இந்தியாவே உண்மையான
சுதந்திர இந்தியா "
என்ற மாவீரன் பகத்சிங்கின் கூற்று, கனவு வெறுங்கனவாக, ஏட்டில் எழுதப்பட்ட வெற்று எழுத்தாகவே இருக்கிறது. கண்களை திறக்க வேண்டிய கலைமகளே கண்கள் குருடாக்கப்பட்டு காசுள்ளவர் பாதையில் கயவர்களின் கைக்கோர்ப்பில் போய்விடுகிறாள். ஏழைக்கு கல்வியும், நல்ல உணவும், பாதுகாப்பான வாழ்வும் எட்டாக்கனியாகவே இன்னும் இருக்கிறது. மக்களுக்காகவே தாங்கள் வாழ்வதாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், நித்யானந்தா போன்ற "அவதாரப்புருஷர்"களும் மக்களை என்னவெல்லாம் செய்து ஏமாற்ற முடியுமோ, வாய்ப்பேச்சில் வீழ்த்த முடியுமோ அதைச் செவ்வனே செய்து வருகிறாகள். இன்றைய சினிமாக்காரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் ராதா தான் என்ன நினைத்தானோ அதையே பேசினான். எதைப் பேசினானோ அதையே செய்தான். எதிர்ப்புகளுக்கு அவன் அஞ்சவே இல்லை. மிரட்டல்களுக்கு என்றும் அடிபணிந்ததே இல்லை. அதனால் பெரியார் போன்ற தலைவர்களே வியந்து போகிற அளவுக்கு அவனால் இருக்க முடிந்தது. "விதவையின் காதல்" நாடகத்தைப் பார்க்க வந்த பெரியாரும், அண்ணாவும் வியந்து "நாங்கள் நடத்தும் நூறு மாநாடுக்கு ராதாவின் ஒரு நாடகமே சமம்" என்று வாயாரப் புகழமுடிந்தது.
பொதுவாக பெரியார் என்ற மனிதரிடம் சான்று வாங்குவது என்பது குதிரைக் கொம்பான விசயம். மனதில் பட்டதை நேராகவே பேசிவிடும் குணமுள்ளவர் பெரியார். ஒரு முறை விழுப்புரத்தில் புகையிலை, வெற்றிலை வியாபாரிகள் மாநாட்டிற்குப் பெரியார் தலைமை தாங்க அழைப்பு விடுக்கப்பட்டார். பெரியாரும் கலந்து கொண்டு இப்படி பேச ஆரம்பித்தார் "இந்த மாநாட்டோட தொழில விட்டுறணும். என்னயா வியாபாரம் இது புகையிலை, வெற்றிலை. இது உடம்புக்கு கேடுன்னு தெரியாதாக்கும். இதப்போய் வித்துகிட்டு மாநாடு வேற நடத்துறீங்க. அதுக்கு வெங்காயம் என்னயப் போய் பேசக்கூப்டுருக்கீங்க" அதோடு அவர்கள் விட்டுவிட்டார்கள் தொழிலை அல்ல. பெரியார் போன்ற தலைவர்களை அழைப்பதை.
இப்படிப்பட்ட பெரியாரே ரசித்த கலைஞன் தான் ராதா. "விதவையின் காதலு"க்குப் ராதா நாடகம் தொடங்குவதற்கு முன்பாக மேடையேறி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் பெரியார். ராதாவும் அதையே விரும்பினார். ஒரு முறை இப்படித்தான் பெரியார் பேச ஆரம்பிக்கிறார். கீழே நாடகத்தைப் பார்க்க வந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. பெரியாரை எதிர்க்கும் எதிர்கட்சிக்காரர்கள் ஒரு சிலர் "ஓய் ராதா நாங்க உன் நாடகத்த தான் பாக்க வந்துருக்கோம், இந்த கெழவனோட பேச்ச கேக்க வரல" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்கள். பெரியாருக்கு சங்கடமாகப் போய் விடுகிறது. ஏனெனில் நாடகத்தைப் பார்க்க வருகிறவர்கள் கட்டணமாக பணம் செலுத்தி அல்லவா நாடகம் பார்க்க வருகிறார்கள். அனுமதி இலவசமாக இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் இது கட்டணம் வசூலித்தல்லவா நடத்தப் படுகிறது. பெரியார் பேச்சை நிறுத்தி கீழிறங்க முயற்சிக்கிறார்.
மேக்கப் அறையில் இருந்த ராதா வெளியே வந்து நடந்ததை விசாரிக்கிறான். பின் பெரியாரை நிறுத்தி மேடைக்கே அழைத்து வந்து "நாடகம் இத்துடன் நிறைவு பெற்றது. இனி பெரியார் தான் பேசுவார். இருக்க இஷ்டம் இருந்த இரு. இல்லன்னா எந்திரிச்சி ஓடு. உன் 5 பேருக்காக மட்டும் நா நாடகம் நடத்தல" என்று எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுத்தான். இந்த பதிலை பெரியாரே எதிர்பார்க்கவில்லை. ஒரு நடிகனின் வீரம் அவன் சிந்தனையில் மட்டும் இல்லை. அவன் செயல்பாட்டில் தான் இருக்கிறது என்பதை நிரூபி்த்தவன் ராதா.
அவனின் நாடகங்கள் இந்துத்துவத்தையும், மூடபழக்கங்களையும் காரணம் இல்லாமல் எதிர்க்கவில்லை. காரணங்கள் நிறைய ராதா கைவசம் வைத்திருந்தான்.
(தொடரும்......)
என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி

Arumai
பதிலளிநீக்கு