செவ்வாய், 28 ஜூன், 2011

எங்கு காணினும் ..........


எங்கு காணினும் 
தகித்துக்கொண்டிருக்கிறது
கோடைவெயில்
இப்புவியை முழுதாய் 
எரித்துவிடும்படி....................


பசுமை தொலைத்த 
நகரத்து வீதிகளெங்கும் 
பற்றி எரிகிறது
வெறுமையின் உஷ்ணங்களில்.......


பட்டுப்போன மரங்களெல்லாம்
மழைக்காக தவமிருக்கின்றன
மிச்சம் தொட்டுக் கொண்டிருக்கும்
உயிரைக் காக்கும்படி....................


ஆறு, குளம், ஏரியெங்கும்
பிசுபிசுக்கிறது
நெருப்பின் குழம்பு.........


கோடையின் வெப்பத்தால்
வெயிலின் தகிப்பால்
இப்புவியில் எல்லாம் 
பற்றி எரிகிறது
நம் ஏழை வீட்டின் 
அடுப்பைத் தவிர................

திங்கள், 27 ஜூன், 2011

காலத்தால் அழியாத தமிழ் சினிமாக்கள் (பாகம்-3)


                எம்.கே.தியாகராச பாகவதர் ஆரம்பத்தில் திருச்சித் தியாகராசன் என்றே அழைக்கப்பட்டார். ஒரு முறை தியாகராசர் பாடிய கச்சேரி நடைபெற்றது. அதில் அவரது குருவான மதுரை பொன்னு தேசிகர் வயலின் வாசிக்க, தட்சிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிராவும் இசைக்க கச்சேரி வெகு ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தியாகராசரின் குரல்வளத்தால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து கொண்டிருந்தார். கச்சேரியின் முடிவில் தட்சிணாமூர்த்திப் பிள்ளை தியாகராசரின் திறமையை வியந்து எண்ணி அவருக்குப் "பாகவதர்" என்ற பட்டத்தை வைத்து விட்டார். 

              பொதுவாக பட்டைப்பெயர் வந்த விதத்தைக் கேட்டால் மிக அருமையாக இருக்கும். ரோட்டில் நின்று எருமை மாடு என்று கத்திப் பாருங்கள். எருமை மாடுகள் திரும்பிப் பார்க்கிறதோ இல்லையோ குறைந்த பட்சம் ஐந்து பேராவது திரும்பிக் பார்ப்பார்கள். எனக்குக் கூட ஒரு பட்டைப் பெயர் உண்டு. 11ம் வகுப்பு படிக்கும் போது தான் அந்தப் பெயர் வந்தது. சூப்பர் ஸ்டார் கூட ஒரு படத்தில் சொல்லுவார். இது நா வச்சிக்கிட்ட பேரு இல்ல. மக்கள் எனக்கு வச்ச பேருன்னு (சூப்பர் ஸ்டார உதாரணத்துக்கு சொல்றதுனால கதை சூப்பரா இருக்கும்னு நெனைக்காதிங்க) நா மொக்க வாங்குன கதை தான். என் நண்பனின் வீடு மரங்களும், கிளிகளும், புறாக்களும் என எப்பவும் நிறைந்து இருக்கும். எனக்கு ஒரு தடவையாவது கிளி புடிக்க வேண்டும் என்று ஆசை. நண்பனிடம் சொல்லி கண்ணியை ஏற்பாடு செய்தேன். கண்ணி விரித்து கிளிக்காக காத்திருந்தேன். நினைத்தது போல் கண்ணியில் இருக்கும் பழத்திற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டது. ஆனால் கிளி அல்ல. காக்கா. இதை தெரியாமல் வகுப்பில் சொல்ல, எனது கணக்கு வாத்தியார் எனக்கு கிளி என்றே பட்டைப் பெயர் வைத்து விட்டார். நான் பள்ளி முடித்து 6 வருடங்களுக்கு மேல் ஆகியும் இப்ப கூட அந்த கதையைச் சொல்லி மாணவர்களிடம் என் "புகழ்" பரப்பி வருகிறாராம்.

              ராதாகிருஷ்ணன் என்ற ஒரு பழம் பெரும் நடிகர் ஒருவர் உண்டு. அவரும் திருச்சியைச் சேர்ந்தவர் தான். அவர் பெயரை மட்டும் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. "காக்கா" ராதா கிருஔ்ணன் எனும் அவரின் பட்டைப் பெயருடன் சொன்னால் தான் தெரியும். வசூல் ராஜா படத்தில் கிரேசி மோகன் அவர்களின் தந்தையாக கேரம் விளையாடும் தாத்தாவாக நடித்திருப்பார். அவருக்கு இந்த காக்கா அடைமொழி எப்படி ஒட்டிக் கொண்டது என்பது சுவையான விசயம். அவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் குழுவில் தான் ரொம்ப காலமாக இருந்தார். மங்கையர்கரசி படத்தில் அரண்மனையில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் "காக்கா பிடிச்சா தான் வேலை கிடைக்கும்" என்று என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதை மறைந்திருந்து கேட்ட ராதாகிருஷ்ணன், ஐந்தாறு நிசக் காக்காய்களை பிடித்து வந்து "அம்மா நா காக்கா புடிச்சிட்டேன், எனக்கு அரண்மணையில வேல கெடச்சிடும்" என்று சொல்லுவார். அதிலிருந்து தான் அவருக்கு காக்கா ராதாகிருஷ்ணன் என்று பெயர் வந்தது.

        பக்கோடா கல்யாணராமன் "மெட்ராஸ் டு பாண்டிச்சேரி" படத்தில் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் அவரின் பெயரில் பக்கோடா அடைமொழியாக சேர்ந்து கொண்டது.

           ஜெமினியின் கதை இலாக்காவில் பங்கேற்று "மிஸ் மாலினி" படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த சீதாராமன் எனும் என்னும் நடிகர் தான், "ஏழை படும் பாடு" படத்துக்கு கதை, வசனம் எழுதி, அதில் "ஜாவர்" என்ற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை ஏற்று நடித்ததால் ஜாவர் சீதாராமனாக பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டார் (திரை வளர்த்த தமிழ்)

       இப்படி பட்டைபெயர்களையும்,பெயர்க்காரணங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

                  சரி நம்ம கதைக்கு வருவோம். தியாகராசர் பாகவதர் ஆனதும் அவரது புகழ் மேலும் பரவத் தொடங்கியது. ஆரம்ப நாட்களில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியவர். பிற்பாடு நாடகத்தின் கதாநாயகனாகவே மாறிவிட்டார். 1926ல் "பவளக்கொடி" என்ற நாடகம் தான் பாகவதர் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம். அதற்கு பிற்பாடு அவரது இசையும், நாடகமும் தமிழகம் மட்டும் அல்லாது பர்மா, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளையும் பரவி மக்கள் மனதை கொள்ளை கொண்டது.

                குறிப்பாக அவரது இசைப்புலமையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நவீன சாரங்கதாரா படத்தில் சாருகேசி ராகத்தில் பாடிய "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல் தான் இசைத்தட்டில் வெளிவந்த முதல் பாடல். மேலும் சாருகேசி ராகத்தை கர்நாடக பிரியர்களுக்கு விருந்தாய் அளித்த பெருமை பாகவதரையே சாரும். மேலும் அவரின் மறக்கமுடியாத "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" என்ற பாடல் கூட இதே ராகத்தில் பாடப்பட்ட பாடல் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பிறகு டி.எம்.செளந்தர்ராஜன் "வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்" என்ற பாடல் இதே ராகத்தில் வந்தது. 

         இசையிலும், நாடகத்திலும் புகழ் பெற்ற நம் பாகவதர் பிற்பாடு சினிமாவில் கொடிகட்டிப் பறந்ததையும், அவரின் புகழைக் குலைக்க நடந்த ஒரு நிகழ்ச்சியையும் அவசியம் நான் பதிந்தே ஆக வேண்டும். 
(ஆனால் அடுத்த பதிவில்.........)

(தங்களின் மேலான கருத்துக்களையும் சுவையான தகவல்களையும் எதிர்பார்க்கிறேன்).

                                                                                                     என்றும் புன்னகையுடன் 
                                                                                                             வெ.அருண்பாரதி 





வெள்ளி, 24 ஜூன், 2011

காலத்தால் அழியாத சினிமாக்கள் (பாகம் 2)


               தியாகராச பாகவதர் நடித்த "டம்பாச்சாரி" இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. கும்பகோணம் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. நாடகத்தைப் பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க அரசாங்கம் திணறியது. அவர்களுக்காக தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு ஒரு சிறப்பு ரயிலையே அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.

           பொதுவாக அந்த காலத்து நாடகங்கள் சினிமாக்களைப் ஏதோ இரண்டு மூன்று மணி நேரங்களில் முடியக்கூடிதல்ல. வள்ளித்திருமண நாடகம் மாலை தான் தொடங்கும். நாடகத்தின் துவக்கத்தில் பபூனாக வரும் கலைஞர் "வாங்க வாங்க உக்காருங்க, வந்த காலில் நிக்காதிங்க" போன்ற பல பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பார். ஆரம்பத்தில் ஜோராக மக்கள் ரசித்து நாடகத்தை விசில் சத்தம் சகிதமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். நாடகத்தின் நாயகன் முருகன் வான வேடிக்கைகள், தாரை தப்பட்டைகள் முழங்க அதிகாலை 4 மணிக்கு மேல் தான் மேடைக்கே வருவார். வரும் போதே "காயாத கானகத்தே நின்றுலா உனர்காரிகையே மேயாத மான்" என்று மானைத் தேடி வருவார். தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் சுவிட்ச் போட்டார் போல ஒரே நேரத்தில் எழுந்து ஆர்ப்பரிப்பார்கள். விடிய விடிய அந்த நாடகம் நடைபெறும். மக்களும் அதற்கேற்றவாறு உணவு, தலையணை போன்ற சகல பொருட்களையும் கொண்டு வந்து விடுவார்கள். நாடகம் நடைபெறும் மைதானத்திலேயே சமைத்து சாப்பிட்ட ஒரு இனிமையான அனுபவங்களும் அன்றைய கால மக்களிடம் இருந்தது. நிஜமாகவே அந்த காலத்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். 

           நானும் சிறுவயதில் சில நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கு நினைவுள்ள வரை அவை அனைத்தும் சமூக நாடகங்கள் தான். எங்கள் ஊரில் மாணவர் சங்கம் என்னும் அமைப்பு பொங்கலுக்கு அடுத்த நாள் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் அதில் நான் பார்த்த குமுதம், பொஞ்ச் (பஞ்சாயத்து) போன்ற நாடகங்கள் என்னால் இன்றும் மறக்க முடியாதவை. அதில் பஞ்சாயத்து நாடகம் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஊரில் தேவையில்லாமல் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டு ஒற்றுமையைக் கெடுக்கும் ஊர்ப் பெருசுகளைக் கிண்டல் செய்யும் நாடகம் அது. பெருசுகளின் பலத்த எதிர்ப்புடன் என்று விளம்பரம் செய்யாத குறையாக நாடகம் தொடங்கும். நண்பர் துளசி ராமன் தலைமையிலான நாடகக்குழு இப்படிப்பட்ட நாடகங்களைப் போட்டிருக்கிறார்கள். 

             அந்த மேடையில் கடைசியாக அவர்கள் போட்ட நாடகம் "மார்டன் சுயம்வரம்". இது போன்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் என்று எங்கள் ஊர் மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற அண்ணன் ரவிக்குமாரும் அந்த நாடகங்களில் நடிப்பதை மிகச் சிறு வயதில் ஆர்வத்துடனும் பொறாமையுடனும் பார்த்திருக்கிறேன். தன் பல குரல் திறமையால் பார்ப்பவரை கட்டிப் போட்டு விடுவார். மேலும் என் பெரியப்பா ஜி.டி.ரகுநாதன் அவர்களும் அந்த காலத்திய நாடக நடிகராக இருந்திக்கிறார். இப்படியாக கடந்த 26 வருடங்களாக பாளையங்கோட்டையில் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கதையாக சொல்லி வைத்தாற் போல 90 சதம் இளைஞர்கள் வேலை தேடி வெளியூருக்கு சென்று விட்டதாலும், மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று உள்ளூரை மறந்துவிட்டதாலும், மக்களும் தங்கள் அன்றாட பிழைப்புக்குள்ளும், தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளும் மூழ்கிப் போனதாலும் எங்கள் ஊரும், அந்த பொங்கல் விழாவும் வெறிச்சோடி விட்டது.

         சரி நம்ம தியாகராச பாகவதர் கதைக்கு வருவோம். இப்படியாக அவர் நடித்த பல நாடகங்கள் சக்கை போடு போட்டிருக்கின்றன. அவர் நடித்த முதல் நாடகமே ஏறக்குறைய அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது. அவர் நடித்த முதல் நாடகம் அரிச்சந்திர நாடகம். அதில் லோகிதாசன் கதாபாத்திரத்தை ஏற்று திறம்படச் செய்தார் நம் எம்.கே.தியாகராச பாகவதர். மதுரையைச் சேர்ந்த வயலின் கலைஞர் மதுரைப் பொன்னு ஐயங்கார் தானே முன் வந்து தியாகராச பாகவதருக்கு கருநாடக சங்கீதத்தை எந்த வித கட்டணமும் பெறாமல் சொல்லித்தந்தார். இசையை கற்கும் நேரம் தவிர நடராச பாகவதரிடம் நாடகம் கற்றுக் கொண்டார். நடராஜர் வேறு யாருமல்ல இசையரசர் கிட்டப்பாவினால் இசையமைக்கப்பட்டு மிகப் புகழ் பெற்ற காயாத கானகத்தே பாடலின் ஆசிரியர் இவர் தான். தியாகராச பாகவதரும் மிகச் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்து விட்டார். பாகவதரின் நாடகங்கள் புகழ் பெறக் காரணம் பாகவதரிடம் இருந்த இசைஞானம் தான். அந்த காலத்தில் இசை வித்வான்கள் பயன்படுத்தாத பல ராகங்களை அவர் நமக்கு தந்திருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய ராகங்கள் என்னென்ன? எம்.கே.தியாகராசருக்கு பாகவதர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள்? 

அடுத்த பதிவில் தொடருவோம்.

என்றும் புன்னகையுடன் 
வெ.அருண்பாரதி  

(தங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்)




வியாழன், 23 ஜூன், 2011

காலத்தால் அழியாத சினிமாக்கள் (பாகம் - 1)



         ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு திரைப்படத்தை நேற்று கே டிவியில் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டேன். காதலிக்க நேரமில்லை தான் அந்தப் படம். பொதுவாக இந்த மாதிரியான முழுநீள நகைச்சுவைப்படங்களை எத்தனை தடவையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தை பார்த்ததிலிருந்து  பழைய சினிமாக்களைப் பற்றியும் சினிமா விசித்திரங்களைப் பற்றியும் நான் படித்தறிந்த, பார்த்து அதிசயித்துப் போன செய்திகள் என் மனதில் வந்த வண்ணம் இருந்தது. அந்த சிந்தனை ஓட்டத்தை அப்படியே பதிவு செய்யலாம் என்றும் தோன்றியது. இப்போது இதையே ஏன் தொடர்கட்டுரையாக எழுதக்கூடாது என்று கேள்வி என்னுள் எழுப்பிக் கொண்டு சினிமா பற்றிய என்னிடம் இருக்கும் பல புத்தகங்களுடனும், என்னுடைய அனுபவங்களின் துணையுடனும் இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கிவிட்டேன். 

பொதுவாக சினிமா மக்களோடு கலந்து விட்ட ஒன்று. சினிமாவையும் மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்தக் காலத்திலிருந்து மக்கள் சினிமாவை வெறும் பொழுதுபோக்காக பார்க்கவில்லை. மாறாக சினிமாவை, அதில் நடித்த நடிகர்களை தன் ரேசன் கார்டில் சேர்க்காத குறையாகத் தான் மக்கள் சினிமாவை நேசித்து வருகிறார்கள். அந்த காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் மற்றும் பிற நடித்த திரைப்படங்கள் புதிதாக வரும் சமயங்களில் ஒரு ஊரே ஒட்டு மொத்தமாக திரையரங்குக்கு வந்து குடியமர்ந்தது போல இருக்கும். சினிமாவை மக்கள் கொண்டாடுகிறார்கள். அதைப் போலவே சினிமா நடிகர்களும் பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு மக்களை மகிழ்வித்து இருக்கிறார்கள். அன்றைய சினிமாவின் தந்தையாக நாடகத்துறை விளங்கி இருக்கிறது. ஆனால் தற்போது நாடகங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டதென்றே கூறலாம். எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற சில சினிமா பிரபலங்களும், முற்போக்கு சங்கத்தின் கலைஞர்களும் நாடகத்தை காப்பாற்றி வருகிறார்கள். அந்தக் காலத்தில் போடப்பட்ட புராண நாடகங்களான சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரன், வள்ளித் திருமணம் போன்ற நாடகங்களை இன்றைய தலைமுறையினர் மறந்துவிட்டனர். அதில் நடித்தவர்கள் வேறு தொழில் தெரியாமல் வரலாற்றிலிருந்து காணாமல் போனது ஒரு சோக வரலாறு.



           அது கிடக்கட்டும். முதலில் எம்.கே.தியாகராச பாகவதர் கதையிலிருந்து வருவோம். எம்.கே.தி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற இவர் தமிழ்சினிமாவின் பொக்கிஷம் என்றே கூறலாம். அவரின் பாடல்களும், அதில் வெளிப்படும் அவரின் பாவனையும் குரலும் எளிதில் நம்மை வசியப்படுத்திவிடும். அந்த காலத்தில் சினிமா நடிகர்கள் தன் சொந்தக்குரலிலே தான் பேசியிருக்கிறார்கள் பாடி இருக்கிறார்கள்.

                  அந்தக் காலத்தில் தியாகராச பாகவதர் மேல் மக்கள் பைத்தியமாகவே இருந்தார்கள் எனலாம். அவரின் வீடு திருச்சியில் இடைத் தெருவில் இருக்கிறது. அவர் வெளியூர் பயணங்களை முடித்து விட்டு வீடு திரும்பும் போது அவர் போகிற வழியெங்கும் மக்கள் திரளாக கூடி இருக்கிறார்கள். அவரை ஒரு முறை தொட்டுவிட்டால் போதும் தான் பிறவிப் பயன் அடைந்து விடுவோம் என்று கருதி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரின் அழகும், புகழும் மக்களை வசியப்படுத்தி வைத்திருந்திருக்கிறது.

            ஒருமுறை எம்.கே.தியாகராச பாகவதரின் "டம்பாச்சாரி" என்ற நாடகத்தை கும்பகோணத்தில் போட்டிருக்கிறார்கள். அந்த நாடகத்திற்கு முதன் முதலாக இலங்கையிலிருந்து ஒரு நடிகை வந்து நடித்திருக்கிறார்கள். அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கும், நடிகையைப் பார்ப்பதற்கும் பெருங்கூட்டம் கூடியிருக்கிறது. கூட்டத்தை சமாளிக்கத் திணறிய அரசாங்கம் என்ன செய்தது தெரியுமா?

                                                   

அடுத்த பதிவில் தொடர்கிறேன். 
(தயவு செய்து தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்)

                                                      என்றும் புன்னகையுடன்
                                                                  அருண் பாரதி

புதன், 22 ஜூன், 2011

அவனும்...... அதுவும்........

       அது அவனுக்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம். அது அவனுக்கு கிடைத்தலிருந்தே இயல்பான மனநிலையிலிருந்து தவறிப் போய் இருந்தான். உலகத்தின் இயல்பு நிலைக்கு ஆட்படாத, நியாயம் கற்பிக்கப்படுகின்ற தவறுகள் எதுவுமே செய்யத் தெரியாத சாதாரண அரசு ஊழியன் அவன். சத்தியத்திற்கு பயந்து லஞ்சம் வாங்கக் கூட தெரியாததால் கடந்த இருபது வருடங்களாக பல்வேறு தண்டனைகளுக்கு உட்பட்டு பதவி உயர்வுகள் ரத்து ஆகி தாசில்தார் அலுவலகத்தில் கீழ்மட்ட அலுவலக உதவியாளனாகவே "ஊழியம்" செய்து வருகிறான். ஓரே வார்த்தையில் சொல்வதென்றால் சரியான "அம்மாஞ்சி". ஓட்டை வாடகை வீட்டில் வசிக்கின்ற அவனுக்கு ஒரு சைக்கிளைத் தவிர பெரிய சொத்து என்று எதுவுமில்லை. மனிதனுக்குரிய எந்த குணங்களும் இல்லையென்று இவனுக்கு வாழ்க்கைப்பட்ட உத்தமி தன் பிறந்த வீட்டிற்கே நிரந்தரமாக புகுந்துவிட்டாள். அதைப்பற்றிய கவலையோ, துக்கமோ இவனை எதுவும் செய்து விட வில்லை. தன் வறட்டுக் கொள்கைகளில் உறுதியானவனாகவே இப்போதும் இருக்கிறான். இப்படிப்பட்ட "விசித்திர" குணாதிசயங்கள் நிறைந்த இவனுக்கா போயும், போயும் அது கிடைக்க வேண்டும்.

                அன்று சனிக்கிழமை. இரவு 9 மணி இருக்கலாம். சக ஊழியர்கள் அவனிடம் திணித்து விட்டிருந்த அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு கொஞ்சம் நிதானமாக தன் சைக்கிளில் உலகம் பிறந்தது எனக்காக பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். யாருமற்ற சாலையின் திருப்பத்தில்தான் அதைப் பார்த்தான். பளபளக்கும் நிறத்தில் இருந்ததால் அது அவன் கண்ணில் பட்டிருக்கலாம். அது வேறொன்றுமில்லை. இந்த நவீன நாகரீக உலகின் தொழில்நுட்ப "புரட்சி"யின் குழந்தை என கருதப்படுகின்ற செல் போன் தான். அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்ட நவீன உயர்தர செல்போன். விலை பத்தாயிரம் இருக்கலாம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். சாதாரண சம்சாரிக்கு அதன் விலை எப்படித் தெரியும்? அது அப்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது.

       யாருடையது என்று விசாரிப்பதற்கு சுற்றும் முற்றும் பார்த்தான். அவனைத்தவிர வேறு யாரும் அங்கு இருப்பதாய் தெரியவில்லை. அதைக் கீழே போட மனசும் இல்லாமல், வைத்துக் கொள்ளவும் திராணி இல்லாமல் ஐந்து நிமிடங்கள் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தான். பின்பு எங்கிருந்தோ வந்த தைரியம் யாரும் பார்க்காத வண்ணம் மெதுவாய் அதை தன் பையில் போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் அவனை சைக்கிளில் ஓட்டமெடுக்கச் செய்தது.

              அவனது முகம் ஒருவித பதட்டத்தின் உச்சியில் இருந்தது. யாருடைய குரலோ தன் பெயரைக் கத்திக் கொண்டே தன்னைத் துரத்தி நெருங்கி வருவதாய் உணர்ந்து திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. சைக்கிளின் வேகம் கூடியது. வீட்டை நெருங்கினான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன், "என்னாய்யா ராமசாமி! ஆடு திருடுவனாட்டம் திரு திருன்னு முழிக்கிறீரு. என்ன விசயம்?" என்றார். அதற்கு பதிலேதும் பேச முடியாமல் ஒரு போலிப் புன்னகையை வரவழைக்க தோற்றுப் போய் வீட்டிற்குள் பாய்ந்தான்.

             வீட்டிற்குள் நுழைந்ததும் முகத்தைக் கழுவி, பதட்டத்தைப் போக்க தண்ணீர் குடித்தான். இயல்பு நிலைக்கு வந்தது போல் காட்டிக் கொள்ள வெகு நேரமானது. அதற்குப்பின் வீட்டுக்கதவு, சன்னல் எல்லாவற்றையும் அடைத்து விட்டு அந்த செல்போனை வெளியே எடுத்தான். அதில் ஏதோ ஒரு இடத்தில் அவன் கை விரல் பட்டதும் செல்போன் அழகிய வெளிச்சத்தில் உயிர் பெற்றது. பதறிப் போனான். பதட்டத்தில் ஏதேதோ செய்து பார்த்தான். பின் சிறிது நேரம் கழித்துதான் அது தன் பழைய மெளன நிலைக்குத் திரும்பியது. "செல் போன் திருடர்கள் கைது - திருட்டைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்" போன்று என்றோ அவன் படித்த செய்திகள் அன்று ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தித் தொலைத்தது.

                ரொம்ப நேரம் அந்த பிசாசையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு வெறுத்துப் போய் தூங்கப் போனான். புரண்டு, புரண்டு படுத்துப் பார்த்தான். தன் வீட்டிற்கு போலிஸ் பட்டாளமே வந்தது போலவும், தன்னை அடித்து தரதரவென்று இழுத்துச் செல்வது போலவும், பக்கத்து வீட்டுக்காரன் "நான் அப்பவே நெனச்சேன்யா. களவாணிப்பய மாதிரில்லா படபடத்துட்டு வந்தீரு. நான் சந்தேகப் பட்டது சரியாப் போச்சி. சரியான ஆளுய்யா நீரு" என்று கேலி செய்வதுமாக காட்சிகள் விரிந்தன.

          எழுந்து அமர்ந்தான். "சே! இந்தச் சனியன தெரியாத்தனமா கொண்டு வந்துட்டோமே. ஒரு நிமிஷத்துல என் புத்தி கோணலா போய்ட்டே. இது இருக்குற வரைக்கும் நமக்கு நிம்மதியே இல்ல. பேசாம நாளைக்கி மொத வேலையா இத போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போய் ஒப்படைச்சிட வேண்டியது தான். அடிமடியில பூனைய கட்டிட்டு அலைஞ்ச கதையால்லா இருக்கு. எவனுக்கும் ஒரு பாவமும் நினைக்காத எனக்கா இந்த சோதன வரணும்.  எல்லாம் என் தல விதி" என்று நொந்து போனான். நாளை காலை எப்படியும் போலிஸ் ஸ்டேசன் சென்று இந்த செல்போன் பூதத்தை ஒழித்துக் கட்ட வேண்டியது என்ற தீர்க்கமான முடிவில் தூங்கினான்.

          அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகாலையிலேயே அவனுக்கு முழிப்பு தட்டியது. வெளியே வந்து பார்த்தான். தெரு அமைதியாய் தன் உறக்கத்தை தொலைத்துக் கொண்டிருந்தது. பால்காரனின் மணிச்சத்தம், பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் தண்ணீரைத் தெளிக்கும் "சளப் சளப்" என்ற சத்தம், பறவைகள் பறந்து போகும் சத்தம் போன்ற சத்தங்கள் ரம்மியமான அதிகாலை உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. வானம் யாரோ செவ்வண்ணத்தை குழப்பி தீட்டியது போன்று இருந்தது. இதையெல்லாம் அனுபவிக்க இவனுக்கு நேரமில்லை. முகத்தை தண்ணீரால் கழுவினான். ஒரு செம்பில் பால் வாங்கிக் கொண்டு வந்து வீட்டிற்குள் வந்தான். பாலைக் காய்ச்சி சுட வைத்து டீ போட்டுக் குடித்தான். போலிஸ் ஸ்டேசன் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். கடிகாரத்தில் சின்ன முள் கீழேயும் பெரிய முள் மேலேயும் செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. வெந்நீர் போட்டு குளித்தான். வேட்டி, சட்டை அணிந்து கொண்டு அந்தச் செல்போனை ஒரு பையில் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினான். மணி ஏழு ஆகி இருந்தது.

           எங்கும் நிற்காமல், யார் பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளாமல் விறுவிறுவென்று நடந்து நேராக போலிஸ் ஸ்டேசன் சென்றடைந்தான். அவன் சென்ற நேரத்திற்கு அங்கே ஒரே ஒரு போலிஸ்காரர் மட்டுமே இருந்தார்.

              "ஐயா உள்ள வரலாமா?" தயக்கத்துடன்.....

             "யாருய்யா இந்த நேரத்துல......" தன் தூக்கம் கலைந்த எரிச்சலுடன்.....

            "ஐயா... அது.... வந்து...... இன்ஸ்பெக்டர் ஐயாவ பாக்கணும்"

           "யோவ்! அவர் என்ன உங்க வீட்டு வேலக்காரனா? நீர் நெனச்ச நேரத்துல பாக்குறதுக்கு. ஐயா இல்ல. என்ன விசயம்? என்ட்ட சொல்லும்"

              "அது இல்லிங்க. ஐயாவ பார்த்தா கொஞ்சம் செளகரியமா இருக்கும்"

         "யோவ் என்ன பார்த்தா உமக்கு போலிஸ்காரனா தெரியலியோ? இவரு பெரிய கலெக்டரு பாரு. நேரா இன்ஸ்பெக்டர் ஐயா பார்த்துத் தான் பேசுவாரு. வந்த விசயத்த சொல்லும்யா. காலங் காத்தால வந்து என் உசுர எடுத்துக் கிட்டு......." வார்த்தைகளில் தொனித்தது எரிச்சலின் நெடி. வேறு வழியில்லாமல் நடந்ததை எல்லாம் ஒப்பித்தான் அவன்.

          அவனை ஏற, இறங்க பார்த்த அந்த போலிஸ்காரர், "உமக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காய்யா! ரோட்ல என்னத்த விழுந்து கெடந்தாலும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துருவீரோ? இப்பல்லாம் இதுல தான் பெரிய பெரிய குண்டுல்லாம் வச்சி அனுப்புறானுங்க. சரி, சரி இங்க வந்துட்டீருல்லா. நாங்க பார்த்துகிறோம். நடந்தத எல்லாம் ஒண்ணுவிடாம இந்தப் பேப்பர்ல எழுதி கையெழுத்து போட்டு குடும். மறக்காம அட்ரசையும் சேர்த்து எழுதும். ஏதாவது விசாரிக்கணும்னா கூப்டு அனுப்புவோம். மறக்காம ஆஜராகிடணும். இந்த செல்போனால என்னன்ன பூதம் கெளம்பப் போவுதோ! அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.".

               அவனுக்கு பகீர் என்று இருந்தது. வேறு வழியில்லாமல் போலிஸ்காரர் கேட்டபடி எழுதிக் கொடுத்து விட்டு கிளம்பினான்.

                அவனுக்கு ஏண்டா இங்க வந்தோம் என்று தோன்றியது. மடியில இருக்கிற சுமைய இறக்கிவிடப்போய் மனசுல கூட கொஞ்சம் சுமையை ஏற்றிக் கொண்டதாக நினைத்தான். வாலு போய் கத்தி வந்த கதையா நம்ம பொழப்பு ஆகிட்டே என்று புழுங்கிக் கொண்டே வெளியேறினான்.

                  ராமசாமி போனதை உறுதி செய்து கொண்ட அந்த போலிஸ்காரர் ராமசாமி எழுதிக் கொடுத்த கடிதத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார். அந்தச் செல்போனில் இருந்த சிம்கார்டை தூர எறிந்து விட்டு செல்போனை தன் பையில் போட்டுக் கொண்டார். ராமசாமியிடம் இருந்த பதட்டமோ, பயமோ அந்த போலிஸ்காரரிடம் துளி அளவும் இருக்கவில்லை.

                                                 - வெ.அருண்பாரதி

                                                                                            

திங்கள், 20 ஜூன், 2011

நம் பால்யத்தின் நட்பை........


மாந்தோப்பின் மாமரத்தில்
பழுத்துக் கிடக்கும்
மாம்பழங்களை
காவல்காரனுக்குத் தெரியாமல்
பறித்துப் பகிர்ந்து கொண்ட 
மகத்தான நாட்கள்....


பள்ளிக்கு போவதாய்
பெற்றோரை ஏமாற்றி விட்டு
குறுக்குத்துறை ஆற்றில்
முங்கு நீச்சல் போட்ட 
அந்த ஈரமான தருணங்கள்....


பரீட்சைக்குப் படிப்பதாய்
சொல்லி விட்டு
டூரிங் டாக்கிஸின்
தரை மணலில் 
கற்றுக் கொண்ட 
வாழ்க்கைப் பாடம்


இப்படியாகக்
கடந்து போன 
நம் பால்ய கால நட்பு...


இரை தேடும் வலியும்
வாழ்வின் தேவைகளும் 
கிடுக்கிப்பிடிகளாய்
நம்மை நெருக்க
வேதனையுடன் பிரிந்தோம்.


இப்பொழுது
நாம் பரிமாறிக் கொள்ளும்
வெற்று எஸ்.எம்.எஸ் ஸூம்
இ மெயிலும்
காட்டி விடுமா? 
நம் பால்யத்தின் நட்பை........

வியாழன், 16 ஜூன், 2011

வெளியே......






டிவி,
பிரிடஜ்,
வாஷிங் மெஷின்,
ஏசி,
மைக்ரோவேவ் ஓவன்,
டிவிடி பிளேயர்,
ஹோம் தியேட்டர்,
கேஸ் ஸ்டவ்,
கிரைண்டர்,
கம்ப்யூட்டர்,
இன்டர் நெட் 


இவைகளெல்லாம்
இன்று
வீடுகளுக்குள் 
அடைபட்டுக் கிடக்கின்றன.


சந்தேசமும், நிம்மதியும்
சுற்றித் திரிகின்றன
வெளியே
சுதந்திரமாக........

ஒரு நதி போல...........


உன்னை நானோ,
என்னை நீயோ,
உன்னை வேறொருவனோ,
என்னை வேறொருத்தியோ,
உன்னுடன் வாழும் ஒருவன்
இன்னொருத்தியோ,
என்னுடன் வாழும் ஒருத்தி
இன்னொருவனையோ,
முன்னொரு காலத்தில்
காதலித்து இருந்திருக்கலாம்.


காதலிப்பவர்கள் சேர்ந்து
வாழ்வதும் 
சேர்ந்து வாழ்பவர்கள்
காதலிப்பதும்
சாத்தியமில்லை இப்போதெல்லாம்.


ஆயினும் 
காதலும், வாழ்க்கையும்
நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
ரகசியங்கள் புதைந்து கிடக்கும் 
ஒரு நதி போல...........

புதன், 15 ஜூன், 2011

மலேசியா வாசுதேவன்




இன்று வரையும் என்னால் ஒரு பாட்டைக் கேட்காமல் தூங்கமுடியாது. முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா, என் பாட்டை விரும்புமா என்ற பாடல் தான். இந்தப் பாட்டுக்கு அடிமையாக என்னைப் போன்று பலரும் உள்ளனர். இந்தப் பாட்டை யார் பாடியது என்று தெரியாத வயதிலிருந்தே இந்தப் பாட்டை ரசித்து வருகிறேன். என்னே அருமையான குரல், பாடல் வரிகளோடு நம்மை மிதக்க வைக்கின்ற குரல். பாடலின் சூழலுக்கேற்ப குரலிலும் ஒரு சோகம் கலந்திருக்கும். அந்த வசீகரக்குரலின் சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் என்று பிற்பாடு தான் எனக்குத் தெரிய வந்தது. ஒரு கைதியின் டைரி யில் தொடங்கி ஊர்க்காவலன், முதல்வசந்தம் போன்ற படங்களில் அவர் செய்த வில்லத்தனத்தை தமிழ் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
உண்மையில் அவர் நடிகராகவே தமிழில் அறிமுகமானார். மலேசியத் தமிழர்கள் எடுத்த இரத்தப்பேய் என்ற படம் அவரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது. ஆனால் தன்னை ஒரு பாடகனாகவே அவரின் மனகோட்டோவியங்களில் வரைந்து வைத்திருந்தார் போலும். ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற படத்தில் தொடங்கிய அவரது இசைப்பயணம் 16 வயதினிலே படத்தின் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலின் மூலம் உச்சத்துக் சென்றது. பட்டி தொட்டி எங்கும் அவரின் பாடல், அவரின் குரல். 
இப்படிப் புகழேடு விளங்கிய அவரின் வாழ்விலும் சறுக்கல்கள். 1990 களில் நீ சிரித்தால் தீபாவளி படமெடுத்து தன்னை கையைச் சுட்டுக் கொண்டார். அவரால் புகழடைந்தவர்கள், மேலே வந்தவர்கள் அவரை மறந்து போயினர். 
உடற்கோளாறு காரணமாக பாடவே முடியாத நிலைக்கு வந்தார் வாசுதேவன். மருத்துவ செலவுகளுக்குக் கூட உதவியின்றி தவித்தார். திரையுலகம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கடைசியாக தன் இறுதி நாட்களை எப்படியோ கழித்து 2011 பிப்ரவரி 20ல் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். நாளை அவருக்குப் பிறந்த நாள். வாழ்த்து சொல்ல நாம் இருக்கிறோம். ஆனால் வாழ வேண்டிய அவர் எங்கே?

செவ்வாய், 14 ஜூன், 2011

சென்னை, சிறுமி பிரணதியின் மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை


சென்னை எர்ணாவூர் பாரத் நகரைச் சேர்ந்தவர்கள் திரு.ரோசையா-திருமதி.மரியம்மா தம்பதி. இவர்களின் 3 வது மகள் சிறுமி பிரணதி. 13 வயது நிரம்பிய பிரணதி சென்னை வள்ளலார் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில், வசிக்கும் காவலர்கள் திரு.உலகநாதன்-திருமதி.துர்கப்பிரியா தம்பதியினரின் வீட்டில் வேலை பார்த்து வந்தார். 12-3-2011 அன்று திரு.உலகநாதன்-திருமதி துர்கபிரியாவின் வீட்டில் 13 வயதான சிறுமி பிரணதி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை அறிவித்தது. ஆனால், இது தற்கொலையல்ல, இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பிரணதியின் பெற்றோர்களுடனும், அந்தப் பகுதி மக்களுடனும் இணைந்து அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.Image
இந்நிலையில், காவல் துறையில் விசாரணை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால், இதில் உண்மையறியும் பொருட்டு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சென்று விசாரிக்க, பேராசிரியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர், எழுத்தாளர் என்று ஒரு உண்மையறியும் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் விவரம் :
Image

 பேராசிரியர் சரசுவதி (ஓருங்கினைபாளர் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் தோழமை மையம்) பேராசிரியர் க.சிவக்குமார் (முன்னாள் முதல்வர், அரசுக்கலைக் கல்லூரி குடியாத்தம்) தோழர் வே.மதிமாறன் (எழுத்தாளர்) தோழர் சிவ.அமிர்தவள்ளி, தோழர் அங்கையர்கன்னி (எ) கயல் (பெண்கள் செயற்களம், உயர்நீதி மன்ற வழுக்குறைஞர்) தோழர் ஆர்.சுசீலா (மாநிலக்குழுத் தலைவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்) தோழர் இரா.அன்புவேந்தன் (மாநில அமைப்பாளர், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம்)

இக்குழுவினர் பிரணதி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சென்று விசாரித்த விவரங்களையும் அதனை ஒட்டி சில கேள்விகளையும், பரிந்துரைகளையும் அறிக்கையாக தரப்படுகிறது.

காவலர் குடியிருப்பு


முதலில் சென்னை வள்ளலார் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில், வசிக்கும் காவலர்கள் திரு.உலகநாதன்-திருமதி.துர்கப்பிரியா தம்பதியினரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு உலகநாதன் மட்டுமே இருந்தார். தன் மனைவி உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்குச் சென்று இருப்பதாகவும். இனிமேல்தான் அவரை சென்று அழைத்துவர வேண்டும் என்றும் கூறினார்.

‘பிரணதி யாரையோ லவ் பண்ணியிருக்கு, நானும் என் மனைவியும் காலையில் வேலைக்குப் போனபிறகு, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில போயிடும். நாங்களே சிலநேரம் வீட்டு வாசலில் வந்து காத்திருப்போம்’ என்றார்.

‘ஒரு வேளை நீங்கள் சொல்வது போல், பிரணதி காதலித்திருந்து, காதலரை சந்திக்கத்தான் வெளியில் செல்வதாக இருந்தால், அதற்கு சரியான இடம் யாருமற்ற உங்கள் வீடுதான். ஏன் உங்கள் வீட்டை தவிர்த்து விட்டு வெளியில் செல்ல வேண்டும்?’ என்று கேட்டதற்கு எந்த பதிலும் தராமல், அமைதியா இருந்தார் திரு. உலகநாதன்.

‘சரி, அப்படி வெளியில் இருந்து எந்தப் பையனாவது, அந்தப் பெண்ணை தேடி வீட்டுக்கு வந்திருக்கிறானா? அக்கம் பக்கத்தில் யாராவது அதுபோன்ற உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா?’ என்று கேட்டதற்கு, ‘இல்லை’ என்றார் உலகநாதன்.

‘அப்படியானால், எதை வைத்து அந்தப் பெண் யாரையோ காதலித்ததாக சொல்கிறீர்கள்?’ என்றதற்கு,

‘பிரணதி, என் மனைவியிடம் அவுங்க வீட்டுக்கிட்ட சிவாவோ, செல்வமோ என்ற பெயர் கொண்ட ஒருவரை காதலிப்பதாக.. சொல்லியிருக்கு..’ என்றார்.

‘சரி, பிரணதி இறந்த விசயத்தை ஏன் நீங்கள் அவர்களின் பெற்றோர்களிடம் சொல்லவில்லை?’

‘நாங்க அவுங்களுக்கு போன் பண்ணோம்… நாட் ரீச்சபள்னு வந்தது.’

‘காவல் துறை மட்டும் எப்படி, அதே எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசியிருக்கு?’

அமைதியாக இருக்கிறார் திரு.உலகநாதன். திரும்ப அதே பதிலலையே தருகிறார்.

‘சரி, காவல் நிலையம் வந்தபிறகும் பிரணதி பெற்றோர்களிடம் நீங்கள் தகவல் சொல்லமால், காவல்துறை அதிகாரி மூலமாக சொல்ல வைத்தது ஏன்?’

‘பிரணதியோட அப்பாவுக்கு, உடல்நிலை சரியில்லை. அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டு. அதனால் அதை உடனடியாக சொன்னால், அவருக்கு பிரச்சினையாகிவிடும் என்பதால் நாங்கள் சொல்லவில்லை.’

‘அவருக்கு ரத்தக் கொதிப்பு இருப்பது, காவல் துறைக்கு தெரியுமா?’

‘தெரியாது’

‘அவர் நோயாளி என்பது தெரியாத, காவல் துறை அதிகாரி, அவரிடம் அக்கறையோடு எப்படி சொல்வார்? அவரின் உடல் நிலைக்குறித்து அக்கறையோடு பேசுகிற, நீங்கள்தானே அவரிடம் பக்குவமாக சொல்லி, ஆறுதல் படித்திருக்கவேண்டும். ஏன் அதை செய்யவில்லை?’

மவுனமாக இருக்கிறார் உலகநாதன்.

சிறுமி பிரணதி இறந்த செய்தி அவருக்கு காலை 11 மணியளவில்தான் தெரியும். அதையும் அவரின் மாமனார், திருமதி.துர்கப்பிரியாவின் தந்தை திரு.மனோகரன்தான் போனில் சொன்னதாகவும், அவர்தான் முதலில் பிரணதி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தை பார்த்ததாகவும் சொன்னார். அவரின் மாமனார் மனோகர் ஒரு தனியார் செக்யுரிட்டி நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், அவர் வாய்ப்புக் கிடைக்கும்போது வீட்டுற்கு வருவார் என்றும், இந்த சம்பவத்திற்கு முதல்நாள் கூட வீட்டிற்கு வந்து சென்றதாகவும் சொன்னார்.

பிரணதியிடமும் அவரின் பெற்றொர்களிடமும் மிகுந்த அக்கறையாகவும், அன்பாகவும் இருந்ததாகவும், ஆனால், பிரணதி ஏன் இப்படி தற்கொலை செய்து கொண்டது என்பது தெரியவில்லை, என்று ஆரம்பத்தில் கூறியவர், பிறகு அவரின் காதல் பிரச்சினையை காரணமாக சொல்ல முயற்சித்தார். 11ஆம் தேதி, பிரணதி பெற்றோர்களைப் பார்க்க அவரின் வீட்டுக்குச் சென்று வந்த பிறகு மிகவும் சோர்வாக இருந்தாக சொன்னவர், பிறகு பிரணதிக்கு மாதவிலக்கு நாள் என்று தன் மனைவி தன்னிடம் சொன்னதாகவும் சொன்னார்.

இப்படி பல்வேறு காரணங்களை ஒரு கதம்பமாக திரு. உலகநாதன் சொன்னதின் நோக்கம் பிரணதி மனஉளைச்சாலால் தான் தற்கொலை செய்து கொண்டார், என்பதை சொல்வதற்காகவே.

H 1 காவல் நிலையம்

இந்த வழக்கில் காவல் துறையின் விசாரணயிலும் அவர்களின் அறிக்கையிலும் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள H1 காவல் நிலையம் சென்றோம்.

ஆய்வாளர் திரு.குணவர்மன், வெளியில் சென்றிருக்கிறார் வருவதற்கு மாலையாகும் என்றார்கள். அதனால், DEPUTY COMMISSINER திரு.செந்தில் குமரனை சந்திக்க சென்றோம். அவரை பார்ப்பதற்காக காத்திருந்தபோது, ஒரு காவலர், ‘யார் நீங்கள்? என்ன வேணும்?’ அதட்டும் பாவனையில் கேட்டார். விசயத்தைச் சொன்னோம்.

‘இப்போது கரண்ட் இல்ல… அய்யாவ பாக்க முடியாது.’ என்றார்.

‘இல்லிங்க அவர் கிட்ட பேசறதுக்கும், கரண்ட் இல்லாம இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றதும், ‘உங்கள் பெயரை எழுதிக் கொடுங்கள்’ என்றார். கொடுத்தோம். உள்ளே சென்றவர். பின் பக்கமாக வெளியே வந்து வேறு வேலையை பார்க்க போய்விட்டார்.

நாங்கள் சந்தேகப்பட்டு பின் வழியாக போய் பார்த்தபோது DEPUTY COMMISSINER வெளியில் புறப்பட்டு தன் வண்டியின் முன் வந்து நின்றுவிட்டார்.

நாங்கள் அவரை வழியில் சந்தித்து, பிரணதி வழக்கு விசயமாக பேசவேண்டும் என்றோம். தனக்கு இரண்டு நிமிடம் கூட நேரமில்லை என்பதை ஐந்து நிமிடத்திற்கும் மேல் விளக்கி பேசினார். தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்பதாக இருந்தது அவரின் அவசரமும் கோபமும்.

தேர்தல் முடிவுகளுக்கு முன் ஆய்வாளர் திரு.குணவர்மனை பார்க்க சென்றபோதும் பார்க்க முடியவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சென்றோம். அப்போதும் ஆய்வாளர் திரு.குணவர்மன் எங்களை சந்திப்பதை தவிர்த்தார். காவல் துறையை பொறுத்த மட்டில், ஆட்சி மாறினாலும், காட்சி மாறாது போலும்.

காசிமேடு இடுகாடு
இடுகாட்டின் பொறுப்பாளரை சந்தித்துப்பேசினோம். அவருக்கு இந்த மரணத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. காவல் துறை கொடுத்த தகவலின் பெயரிலேயே, செய்திருக்கிறார்கள். அதுவும் பிரணதிக்கு வயது 15 என்ற தவறான தகவலோடு.

முகப்பேர்


உலகநாதனின் மாமனார் திரு.மனோகர், வீடு சென்னை முகப்பேரில்தான் உள்ளது. அங்கு சென்றோம். 12ஆம்தேதி காலை 10.30 மணியளவில் தன் மகள் வீட்டுக்கு சென்றதாகவும், அப்போது வீடு உட்பக்கம் தாழ்பால் போடாமல், மூடியிருந்தது, வாசலில் திரை இருந்தது. நான் கதவை திறந்த உடன், அந்த அறையில் பேத்தி (உலகநாதன்-துர்கப்பிரியாவின் குழந்தை) கட்டிலில் படுத்திருந்தது.

‘படுக்கை அறையில் சென்று பார்த்தபோது, பிரணதி கட்டிலுக்கு மேல், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததது, நான் பதட்டமாகி உடனே என் மருமகனுக்கு (உலகநாதன்) போன் செய்தேன்’ என்றார் திரு. மனோகரன்.

‘சரி முதல்நாள் சாயந்திரம் வந்த நீங்கள் மறுநாள் காலையிலும் எதற்கு வந்தீர்கள்?’

‘முதல்நாள் மாலை நான் அங்கு போகவில்லை’ என்றார்.

திரு.உலகநாதன் சொன்னதிலிருந்து அவரின் இந்தத் தகவல் மாறுபட்டதாக இருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் வீட்டில் திருமதி.துர்கப்பிரியாவும் இருந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு துர்கப்பிரியா இங்குதான் இருப்பதாகவும் சொன்னார். இதுவும் உலகநாதன் சொன்னதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. பிரணதியின் மீது மிகுந்த அன்பாக இருந்ததாகவும், அவர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை என்றார் துர்கப்பிரியா. திரு.உலகநாதன் ஏற்கனவே நம்மிடம் சொன்னதையேதான் இவரும் சென்னார். உள் அறையில் இருந்து திரு.உலகநாதனும் வெளியில் வந்தார்.

பிரணதி ஒருவரை காதலித்ததாக பிரணதியின் அம்மா தன்னிடம் சொன்னதாக துர்கப்பிரியா சொன்னார். பெயர் தெரியவில்லை என்றவர், உலகநாதனின் ஆலோசனைக்கு பிறகு, சிவா, செல்வம் என்ற பெயர்களை சொன்னார்.

ஆனால், சிவா, செல்வம் என்ற பெயர்கள், உலகநாதனுக்கு நினைவிருந்ததைப் போல், துர்கப் பிரியாவிற்கு இல்லை. இத்தனைக்கும் பிரணதியின் காதல் பற்றி தன் மனைவிதான் தன்னிடம் சொன்னதாக காலையில் நம்மிடம் சொன்னதே உலகநாதன்தான்.

‘இருவரும் பிரணதியியை தங்கள் வீட்டில் வேலைக்கு வைக்கவில்லை. ஒரு மகளைப் போல்தான் வளர்த்தோம்‘ என்றார்கள். மறக்காமல் பிரணதிக்கு 15 வயது இருக்கும் என்பதை திரு.உலகநாதன், திருமதி.துர்கப்பிரியா, திரு.மனோகரன் மூன்று பேரும் தொடர்ந்து சொன்னார்கள்.

பிரணதியின் பெற்றொர்கள்

தங்கள் மகள் தூக்குப்போட்டு கொள்கிற அளவிற்கு அவளுக்கு தெரியாது. இது தற்கொலையல்ல என்று உறுதியாக நம்புகிறார்கள். உலகநாதன்-துர்கப்பிரியா தம்பதிகள், எதுவாக இருந்தாலும் தன்னிடம் உடனுக்கு உடன் போன் பண்ணி பேசுவார்கள், ஆனால், ‘எங்கள் மகள் இறந்த செய்தியை ஏன் எங்களிடம் கடைசிவரை சொல்லவே இல்லை’ என்கிற கேள்வியை தொடர்ந்துகேட்டுக் கொண்டிருந்தார்கள், திரு.ரோசையாவும் திருமதி மரியம்மாவும்.

‘நாங்கள் கிறித்துவர்கள் ஆனால், எங்கள் மகள் உடலை எங்களிடம் கூட ஒப்படைக்காமல், ஏன் இந்து சுடுகாட்டில் போலிசார் அடக்கம் செய்தார்கள்?’ இந்தக் கேள்வி தொடர்ந்து அவர்கள் பேச்சில் இடம் பிடித்தது.

‘உங்கள் மகள் யாரையோ காதலித்ததாக, நீங்கள் சொன்னதாக துர்கப்பிரியா சொன்னார்‘ என்று கேட்டோம். அதை முற்றிலுமாக மறுத்தார்கள்.

‘என் மகள் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு, துர்கப்பிரியா எனக்கு போன் செய்து. உங்கள் மகள் இங்கு (போலிஸ் குடியிருப்பில்) யாரையோ காதலிக்கிறாள்’ என்றார். நான் கோபமாக அப்படி எல்லாம் என் மகள் செய்யமாட்டாள் என் பொண்ண உடனே என் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்’ என்றேன். அதற்கு உடனே துர்கப்பிரியா, ‘இல்லப்பா… சும்மாதான் சொன்னேன்.’ என்றார், என்று அதைப் பற்றி சொன்னார் திரு.ரோசையா.

நாங்கள் பிரணதியின் வீட்டைச் சுற்றி இருந்த அக்கம் பக்கத்திலும், பிரணதியின் தோழிகளிடமும் விசாரித்தபோது, பிரணதிக்கு, காதலோ, சிவா, செல்வம் என்ற பெயர் கொண்ட நபர்களோ இல்லை என்றே தெரிந்தது.

ஸ்டான்லி மருத்துவர்


பிரணதியின் உடலை போஸ் மார்டம் செய்த ஸ்டான்லி மருத்துவர் சுதர்சன், மிகுந்த தயக்கத்திற்கு பிறகு பேசினார். 12-3-20011 அன்று 3 மணிக்கு போலீஸ் போன் செய்து, ஒரு பாடி வரும் என்றார்கள், 4 மணிக்கு பாடி வந்தது 4.15 POSTMORTEM செய்தோம்’ என்றார்.

இப்படித்தான் எல்லா கேசுகளிலும் அவசரமாக செய்வீர்களா?’ என்றதற்கு தெளிவான பதில் இல்லை.

பிரணதியின் மரணத்தில் எந்த வித வன்முறையும் இல்லை. அது தற்கொலைதான் என்றார். தனது அறிக்கையில் என்ன இருக்கிறதோ அதை தாண்டி மருத்துவ ரீதியான சந்தேகத்தைக்கூட பேச மறுத்தார்.

‘ஒருவரை மயக்க நிலையில் ஆழ்த்தி அவரை தூக்கில் தொங்க விட்டால்கூட, அது தற்கொலைபோல் தெரியும் அல்லவா?’ என்று கேட்டதற்கு. ‘ஆம், தெரியும்’ என்றார்.

பதில்கள் அற்ற கேள்விகள்

1. உலகநாதன்-துர்க பிரியா இருவரும், பிரணநிதியின் பெற்றோர்களின் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை அதனால் பிரணதி இறந்த செய்தியை சொல்ல முடியவில்லை என்கின்றனர். உண்மையிலேயே தொலை பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று சொல்ல ஏன் முயற்சிக்கவில்லை? செல்போன் டவர் கிடைக்கவில்லை என்பதால் விட்டுவிடுகிற செய்தியா இது?

ஆனால், 12.3.2011 மதியம் 1.30 மணியளவில் பிரணதியின் தந்தை திரு.ரோசையாவிடம் திரு.உலகநாதன் செல்போனில் பேசியிருக்கிறார். அதில், எந்த தகவலும் சொல்லாமல், உடனடியாக தங்கள் வீட்டுக்கு வர சொல்லியிருக்கிறார். ஏன் இதை மறைத்தார்?

2. ரோசையா வேலையாக இருந்ததால், தன் மனைவி மரியம்மாவை காவலர் குடியிருப்புக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், அங்கு உலகநாதன்-துர்க பிரியா இல்லை. வேறு யாரோ இருவர், திருமதி.மரியம்மாவை H1 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களும் பிரணதி இறந்த செய்தியை மரியம்மாவிடம் சொல்லவில்லை? யார் அந்த இருவர்?

3. H 1 காவல் நிலையத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு 4 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி, மரியம்மாவிடம் உங்கள் மகள் வயிற்று வலியால் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லியுள்ளார். மரியம்மாவிடம் உலகநாதன் சொல்ல வேண்டிய செய்தியை காவல் துறை அதிகாரி உலகநாதன் சார்பாக சொல்லவேண்டிய காரணம் என்ன?

4. பெற்றோருக்கு தெரியாமல், பிரணதியின் உடலை அவசரமாக POSTMORTEM செய்ய வேண்டிய அவசியம் என்ன?

5. ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடும் பழக்கம் உள்ள திரு.ரோசையாவிடம், வெள்ளைத்தாளில் கைரேகை வாங்கியது ஏன்?

6. POSTMORTEM முடிந்த பிறகு பிரணதியின் உடலை பெற்றொர்களிடம் ஒப்படைக்காமல்,காவல் துறையே முன்னிறுந்து அடக்கம் செய்தது ஏன்? எல்லா தற்கொலை வழக்குகளிலும் காவல்துறை இப்படித்தான் நடந்துகொள்ளுமா?

7. ரோசையா கிறித்துவராக இருக்க, பிரணதியின் உடலை உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்து மயானத்தில், காவல்துறையினர் அடக்கம் செய்தது ஏன்?

8. பிரணதியின் பிறப்பு சான்றிதழில் 31.10.1997 என்று இருக்க, திரு. உலகநாதன் குடும்பமும், DEPUTY COMMISSINER திரு.செந்தில் குமரன் உட்பட அனைத்து காவலர்களும் பிரணதியின் வயதை 15 என்று குறிப்பிடுவதின் நோக்கம் என்ன?

9. காசிமேடு இந்து மயான நகராட்சி என்று இறப்பு சான்றிதழில் இருக்க, காவல்துறையின் மரண அறிக்கையில் கிறித்துவ கல்லரை என்று குறிப்பிட்டதற்கான காரணம் என்ன?

10. திரு.உலகநாதன், திருமதி துர்கபிரியாவை குடும்பத்தினரைத் தவிர வேறு யாரிடமும் பிரணதியை பற்றியும், அவரின் மரணம் குறித்தும் விசாரிக்காதது ஏன்?

11. சட்டத்திற்கு புறம்பாக, தன்வீட்டில் குழந்தை தொழிலாளர் முறையை கடைப்பிடித்த திரு.உலகநாதன், திருமதி. துர்கபிரியவின் வாக்குமூலத்தை உண்மை என்று நம்பியது ஏன்?

12. பிரணதி தூக்கில் தொங்கியதாக, சொல்லப்படுகிற திரு.உலகநாதனின் வீட்டில் உள்ள இடம் பொறுத்தமற்றதாக இருக்கிறது. ஆனால், அது குறித்து காவல் துறைக்கு சந்தேகம் வராமல் போனது ஏன்?

13. பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றதின் மூலமாக மனஉளைச்சலுக்கு ஆளான குழந்தைகள் கூட தீக்குளிப்பு போன்ற கொடுமையைத்தான் தேர்தெடுத்து இருக்கிறார்கள். 13 வயதே நிரம்பிய ஒரு சிறுமிக்கு, தூக்குப்போடுவது குறித்தான் முறைகள் எப்படி தெரியும்?

14. பிரணதி மர்மமான முறையில் இறந்த வீட்டில் உள்ளவர்களை தற்கொலைக்கு தூண்டியதாகக்கூட சந்தேகப் படாமல், யார் என்றே உறுதியாக தெரியாத யாரோ ஒருவரை காதலின் பேரில் குற்றவாளியாக முயற்சிப்பது ஏன்?

15. யாரோ ஒரு பையன்தான் பிரணதி தற்கொலைக்கு காரணம் என்றால், அது யார் என்று அடையாளம் காண எந்த முயற்சியும் காவல் துறை செய்யாதது ஏன்?

இறுதியாக…

1. இது கொலையல்ல, தற்கொலை என்று காவல் துறை உறுதியாக சொல்கிறது. இது தற்கொலையும் அல்ல என்று நாங்கள் சொல்கிறோம். கொலைக்கான மோட்டிவேசனோ, தடயங்களோ, ஆதாரங்களோ இல்லை என்று காவல்துறை சொல்வது போலவே, தற்கொலைக்கான காரணங்களும் சரியானதாக, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வலுவானதாக இல்லை.

2. பிரணதியின் தற்கொலைக்கு மன அழுத்தம் காரணம் என்பது, இறந்த பிறகு யூகித்து சொல்வததாகத்தான் இருக்கிறது. காவலர் குடியிருப்பில் உள்ளவர்களோ, பிரணதியின் எர்ணாவூர் வீட்டினறகே உள்ளவர்களோ பிரணதியின் மன அழுத்தம் குறித்து எதுவும் சொல்லவில்லை. திரு.உலகநாதன் குடும்பத்தினர்கூட அதை உறுதியாக சொல்லவில்லை.

3. இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததைப் போல் உண்மையறியும் குழுவிடம் நடந்து கொண்ட DEPUTY COMMISSINER திரு.செந்தில் குமரன், பிரணதியின் புதைக்கப்பட்ட உடலை RE – POSTMORTEM செய்ய வேண்டியதை மறுத்து, உயர்நீதிமன்றத்திற்கு அளித்த கடிதத்தில், திரு.உலகநாதன் உண்மையறியும் குழுவிடம் என்ன சொன்னாரோ, அதையேதான், கடிதமாக்கித் தந்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தை எழுதிக் கொடுத்து திரு.உலகநாதனோ அல்லது திரு.உலகநாதனுக்கு வழக்கு விசயமாக எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது DEPUTY COMMISSINER திரு.செந்தில் குமரனோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு DEPUTY COMMISSINER கடிதமும், திரு.உலகநாதன் எங்களிடம் சொன்ன விவரங்களும் பின்னி பிணைந்து இருக்கிறது. அதில் குறிப்பாக தனது கடித்தில் DEPUTY COMMISSINER பிரணதியை, Four months back Ms.pranidhi eloped with one boy… என்று குறிப்பிட்டு இருக்கிறார். eloped இந்த வார்த்தைக்கு திருட்டுத்தனமாக என்று அர்த்தம். எந்த ஆதாரமும் இல்லாமல், ஒரு 13 வயது சிறுமியைக் குறித்து இப்படி ஒரு கடுமையான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் DEPUTY COMMISSINER.

4. பிரணதி, தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி. அதனாலேயே கேட்க நாதியில்லை என்பதைப் போல் இந்த வழக்கில் மிக அலட்சியமாக நடந்திருக்கிறார்கள், H1 காவல் நிலைய ஆய்வாளர் திரு.குணவர்மனும், வண்ணாரப்பேட்டை, DEPUTY COMMISSINER செந்தில் குமரனும்.

ஆகவே இந்த வழக்கை விசாரிக்க, தொடர்ந்து நடத்த இவர்களுக்கு எந்த வகையிலும் உரிமையில்லை. ஏனென்றால், இவர்களே விசாரிக்கப்படவேண்டியவர்கள்தான்.

இவர்கள் தொடர்ந்து பிரணதியின் வழக்கை விசாரித்தால், இவர்களே சிவா அல்லது செல்வம் என்ற பெயரில் திரு.ரோசையாவின் உறவினரையோ அல்லது அந்தப் பெயர் கொண்ட யாராவது ஒரு இளைஞனையோ பிடித்து, மொத்தக் குற்றத்தையும் அவரின் தலையில் கட்ட வாய்பிருப்பதாக சந்தேகம் எழுகிறது.

ஆகவே இந்த வழக்கை H1 காவல் நிலையத்திலிருந்து மாற்றி சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டியின் விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட்டு, உண்மைகளை கண்டறியவேண்டும், என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவண்

பிரணதி மரணம் குறித்த உண்மையறியும் குழு

நன்றி அதிகாலை இணையதளம்