திங்கள், 13 ஜூன், 2011

ஆகவே நான் உன்னை......


என் அன்பே,
உனக்காக
இதோ என் சுவாசத்தை
பேனா சிரிஞ்சி மூலம்
செலுத்துகிறேன்


இதை பார்ப்பதும்,
வெட்டிப் பார்ப்பதும்,
போர்த்திப் படுப்பதும்,
உன் கைக்குத் தெரியுமென்று
என் மனதுக்குத் தெரியும்


தயவு செய்து தனிமையில் மட்டும்
என்னை இருக்க விடாதே
இது உன் பொறுப்பு.
இல்லையெனில்
இப்படி ஏதாவது
கிறுக்க ஆரம்பித்துவிடுவேன்.


இப்பொழுதெல்லாம்
நிராதரவான தனிமைகளில்
அனாந்தர இரவுகளில் 
ஏதோவொரு 
அதிசயம் நிகழ்ந்ததாய்
தேவ ரகசியம் பேசுகிறேன்.


விழியை விழிக்க வைத்து
கஞ்சத்தனமாக உறங்குகிறேன்


உறக்கம் இல்லாத உணர்வுகள்
உறங்க மறுத்து
அடம்பிடிக்கின்றன,


ராத்திரி ஆனால் 
உன் கனவை 
விரித்துப் போட்டு
உறங்குகிறேன்.


போர்வைக்குள்
மண்புழுவாய்
உறக்கமின்றி நெளிகிறேன்


மனசைக் காய்ச்சி வடித்து
செல்லமாக
கவிதை வடிக்கின்றேன்.


வடித்த கவிதையில் 
எழுத்துக்கள் 
வெட்கப்பட்டு நிற்பதை
பார்த்து பார்த்து
ரசிக்கின்றேன்.


பூக்காத பக்கங்களை
புரட்டி, புரட்டி
உன் தரிசனம் கேட்கின்றேன்.


நீ உதிர்த்த
புன்னகையை
மொழி பெயர்த்து
மொழி பெயர்த்து
புதுக்கவிதை
ஒன்றை வடிக்கிறேன்.


என் எழுதுகோல் பேசும்
பாஷை 
எனக்கு மட்டுமே கேட்கிறது.


வெள்ளைத்தாளின்
எழுதப்படாத கவிதைகள்
எனக்கு மட்டுமே 
புரிகிறது.


இப்பொழுதெல்லாம்
என் வயிற்றிற்கு இல்லை
எனினும்
என் கவிதைகளுக்குப் பஞ்சம்
வருவதேயில்லை.


மரணம் தழுவிய 
கவிஞர்களை எழுப்பி
சண்டை போடுகிறேன்.
"என்னவளைப் பற்றி
பாடாமல் 
மண்ணுக்குள் என்னடா
தேடுகிறீர்கள்?"
என்று.


நீ பசியாக இருக்கையில்
உணவை வெறுக்கிறேன்.


வள்ளுவனின் 
காமத்துப்பாலை கடன் வாங்கி
காலையில் காப்பி 
குடிக்கிறேன்.


மெல்லிய மனதோடு
இமைப்போர்வை 
போர்த்தாத விழியோடு
தினமும் உன்னைக் காண்கிறேன்.


என் நிழலும்
வெட்கமடைகிறது
ஒளிந்திருந்து
உன்னைப் பார்க்கையில்....


இப்பொழுதெல்லாம்
என் வானின் நிலவு 
இன்னும் அழகாய்த் தெரிகிறது.


எனக்காக நீ 
உதிர்த்துச் சென்ற
அந்தப் புன்னகை
என்னுடலின் உஷ்ணத்தை
உசுப்பி விடுகிறது.


உள் நாக்கு ஓரத்தில்
உன்னுயிர் ஞாபகம்
ஊஞ்சலாடுகிறது.


உன்னால்
உயிர் வழிய,
உணர்வு ஒழுக
காற்றடைத்த பையாக
மாறிப்போனேன்.


துண்டு துண்டு கனவுகள்
முள்ளாய் குத்துகிறது.


திடீரென முளைத்த
சிறகு கொண்டு
வானை அளந்திடத் துடிக்கும்
சிறு பறவை
போலாகிவிட்டேன்.


ஊனமாகி முடங்கிக் கிடப்பது
என் உடல் தான்
தவிர 
மனது அல்ல.


உன்னை நினைவுபடுத்தி
என்னை பாடாய் படுத்தும்
என் தலையணைக்கு
தினமும் பூஜை செய்கிறேன்.


இதயத்தின் அறைகளான
ஆரிக்கிளும், வெண்ட்ரிக்கிளும்
உனக்காக மூடாமல்
காத்துக் கிடக்கிறது.


என் ஆக்சிஜன் மண்டலமே
வா வா
அவசரமாக 
வா வா
நான் சுவாசிக்க வேண்டும்.


என் நுைரயீரல்
மெளனம் சாதித்து
விரதமிருக்கிறது.
சீக்கிரம் வா
என் உயிர் சுவாசிக்கட்டும்


கால தாமதமும்,
நேர பாதகமும்
தவணை முறையில்
உயிரைக் கொல்லும்
அவகாசமாகிவிடும்.


நான் உயர்திணையாக இருந்தும்
உன் கார்பன்-டை-ஆக்சைடை மட்டும்
சுவாசிக்கும் மரமாகிப் போனேன்.


விரக்தியின் சிலுவைகளில்
அறையப்பட்ட என் இயேசுக்கள்
உன் நினைவுகளால்
உடனே 
உயிர்த்தெழுதல் புரிகின்றன.


இப்பொழுதும்
சிலுவைகள் சுமக்கின்றேன் 
ஆனால்
பாரம் தெரிவதேயில்லை.


இப்பொழுதும்
பசியை உண்கிறேன்
ஆனால் மரணம் சம்பவிப்பதில்லை.


கரை தேடித் தேடித் 
களைப்படைந்த 
என் கப்பல் பயணம்
கலங்கரை கண்டதாய்
களிப்படைந்து விடுகிறது.


உன் ஊர் செல்லும்
பேருந்துகளில் 
உன் முகச் சாயலை
தேடித் தேடித்
தொலைகிறேன்.


குழந்தைகளை பார்க்கும் போது
குதூகலித்து,
வயது குறைந்து
குழந்தையாகி விடுகிறேன்.


நிமிடங்கள்
வருடங்களாய் தெரிவதும்,
வருடங்கள் 
நிமிடங்களாய் தொலைவதும்
உன்னால் தான்
உணர்கிறேன்.


உன்னோடு 
நான் பேசிய நிமிடங்களை
அடிக்கடி
மறு ஒலிபரப்பு செய்கிறேன்.


நீ எனக்கு
எழுதிய கடிதத்தை
தினமும் குறைந்தது
நூறு முறையாவது படிக்கின்றேன்.


வெட்கப்படுவது
எப்படி என்று
உன்னால் தானே
தெரிந்து கொண்டேன்.


என் உயிருக்குள்
வரையப்பட்ட உன்
ஓவியத்தைக் கண்டு
இதழின் ஓரமாய்
புன்னகை வடிக்கின்றேன்.


மலை போல
ஆசைகளைக் 
கொட்டி விட்டாய்.


எனக்குள்ளும்
இவ்வளவு ஆசைகளா?
எடுத்துக் காட்டி விட்டாய்.....


இப்போது 
எல்லாமே மாறிப் போனது 
உன்னால்... உனதாக.....


வானம் 
நிலத்தின் நீரைக் 
குடித்து குடித்து
ஏப்பமிடும்
இடியைக் கேட்க
பயந்ததில்லை.


சிறு சிறு 
வெண்பொட்டுகளை
நிலத்தில் தட்டி விடும்
மழையில் நனைய 
பயந்ததில்லை.


உன் விரல் மீது
பூக்கள் மோதி
விரல்களுக்குக் காயமாகுமோ?
என்று பயப்படுகின்றேன்.


இரவில் மலரும்
மலரின் ஒலி கேட்டு
உன் தூக்கம் கலையுமோ?
என்று பயப்படுகின்றேன்.


மழையில் நனைந்தாலும்
உன் நினைவு 
வேர்க்க வைக்கிறது.


வெயிலில் குளித்தாலும்
உன் நினைவு
குளிர் காய்ச்சல்
தருகிறது.


காற்றையே சுவாசிக்காத
என் ஜன்னல் கம்பிகள்
இப்பொழுதெல்லாம்
தென்றலின் தீண்டலில்
தேனைச் சொரிகின்றன.


பூவின் வாசம் வரும் போதெல்லாம்
வருவது நீயாக இருக்குமென்று
ஜன்னல் பக்கம் வந்து
எட்டிப் பார்க்கிறேன்.


ஜன்னல் கம்பிகளில்
வருடி தடவி
என் விரலின் 
தடம் பதிக்கின்றேன்.


அன்று என் அன்னை
நிலவைக் காட்டி
சோறூட்டினாள்.
இன்று உன்னைக் காட்டியே
பல அன்னைகள் சோறூட்டுகிறார்கள்.


நீ குடித்து
மிச்சம் வைத்த 
தண்ணீர்க்குவளையில்
ஆரஞ்சு பழச்சுவை
உள்ளதாய்
அவசரத் தகவல் வருகிறது.


நீ குடித்து
மிச்சம் வைத்த
தேநீர்க் கோப்பையில் 
தேன்மணம் வீசுகிறதாம்.
தென்றல் வந்து
அறிவிப்பு செய்கிறது.


நீ குளிக்கையில் 
உன் தேகம் 
தொட்ட தண்ணீர்
நேராக
சொர்க்கத்தைத் தொட்டதாய்
ஒரு சேதி.....


நீ மிச்சம் வைத்து சிந்திய
பருக்கைகளை உண்ண
ஈக்களும், எறும்புகளும்
ஒரு உலகப்போரே 
நடத்துகிறதாம்.
அரசு தரப்பில்
அறிக்கை வருகிறது


என்னைத் தவிர 
யாருக்கும்
கொடுத்து விடாதே
தயவு செய்து....


உன் கூந்தலிலிருந்து
வீசும் மணம்
இயற்கையானதா?
என்று ஆராய்ச்சி செய்த
பாண்டிய மன்னனைப் 
போல் ஆகி விட்டேன்.


என் கேள்விக்கு 
விடை தெரியாமல்
தருமியின் மூலம்
திருவிளையாடல் நடத்திய
அந்தச் சிவனே
ஒரு கணம் 
ஆடிப் போய் விட்டான்.


சில நேரங்கள்
மெளனமாய் சப்தமிட்டும்
சில நேரங்கள்
சப்தமாய் மெளனித்தும்
சாய்ந்து கிடக்கிறேன்.


பாரதி, பாரதிதாசன்,
கம்பன், கண்ணதாசன்,
ஷெல்லி, ஷேக்ஸ்பியர்,
கலில் கிப்ரான், தாகூர்,
வால்ட் விட்மன், வைரமுத்து
இவர்கள் வரிசையில்
என் பெயரும் 
இடம் பெறத் தவிக்கிறேன்.


இப்படியெல்லாம் 
உன்னை வர்ணித்து
கவிதை எழுதிப் பார்த்தாலும்
உன் பெயரை மட்டும்
எழுதிப்பார்த்த திருப்தி
இதுவரை கிடைக்கவில்லை.


உன்னைக் கவரும் 
எந்த பாஷையும்
என்னிடத்தில் இல்லை.


என் இதயம் 
தொலைந்த இடத்தில்
உன்னைப் பார்த்தேன்.


உன்னைப் பார்த்ததால் தான்
என் இதயத்தையே
தொலைத்தேன்.


உன் பிரிவு,
என்மரணம்
இரண்டில் எது வேண்டும்?
என்று 
இறைவன் என்னிடம்
கேட்டால்
இரண்டாவதையே
முதலில் தேர்ந்தெடுப்பேன்.


உன்னுடன் வாழ்வேன்
என்ற நம்பிக்கையில் 
உயிரைப் பத்திரமாய்
சேமித்து வைக்கிறேன்.


இத்தனை வலிகளையும்,
இத்தனை உணர்ச்சிகளையும்
மொத்தமாய் உருக்கி,
சிற்பமாய் செதுக்கி
ஒற்றை வார்த்தையில் 
ஓங்கிச் சொல்ல
அகராதியை அலசுகிறேன்.
அப்படி ஏதும் அது
ஒரு வார்த்தையில் இருப்பதாய் 
எனக்குத் தோன்றவில்லை.


ஆகவே நான் உன்னை............





(கலில் கிப்ரானின் முறிந்த சிறகுகள், என் நண்பரும் கவிஞருமான சரா இளங்கோவின் காதல், காமம் கவிதைத் தொகுப்பும் வாசிக்க நேரிட்டது. அதன் விளைவாய் இந்தக் கவிதை எழுதினேன். கவிதை எழுத காதலிக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. இது காதல் கவிதையுமல்ல. இந்தக் கவிதையில் எங்கேனும் காதல் என்ற வார்த்தையிருந்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்க்கலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக