செவ்வாய், 14 ஜூன், 2011

வேற்றுக் கிரகம் தேடி.....


சித்திரை மாதப் பொழுதுகளில்
அக்கோ! அக்கோ!
என்று 
காற்றிலே சோகத்தை 
விதைத்துச் செல்கிற
அக்காக் குருவிகளின் 
கேவல்களை
இனி யாரேனும் 
கேட்க நேரிட்டால்
என்னிடம் சொல்லுங்கள்.

கிடைத்த இரைக்காக 
சண்டையிடாமல்
பகிர்ந்துண்ணும் பழக்கம் கொண்ட
காக்காக் கூட்டங்களை
யாரேனும் பார்க்க நேரிட்டால்
என்னிடம் சொல்லுங்கள்.

கிளிகளின் சிவப்பான அலகுகளால்
கொத்தப்பட்டு மீதமிருக்கின்ற
அந்தப் பழங்களை
நீங்கள் சுவைக்க நேரிட்டால்
என்னிடம் சொல்லுங்கள்.

பார்வை கிடையாதெனினும்
நுண்ணதிர்வு அலைகளால்
திசைகளை யூகித்துக் கொள்ளும்
வெளவால்கள் உங்களைக் கடந்தால்
என்னிடத்தில் சொல்லுங்கள்.

அலைபேசிக் கோபுரங்களின்
அலைவரிசைக் கதிர்களாலும்
கலாச்சாரத்தை காலில் மிதித்து
கார் ஏறிப் போகின்ற
நாகரீகக் கட்டிடங்களின் பெருக்கத்தாலும்
வேற்றுக்கிரகம் தேடி
அப்பறவைகள் போய்விட்டதென
ஆதர்சனம் கூறுகிற
என் நண்பனிடம் 
நான் வாதம் செய்ய வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக