திங்கள், 13 ஜூன், 2011

எளிமை கடினமானது

சமீபத்தில் பள்ளியில் என்னோடு படித்த ஒருவனை சாலையில் சந்தித்தேன். அவன் அவனின் நண்பனோடு பைக்கில் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு பேச வந்தான். என்னால் அவனை கொஞ்ச நேரத்துக்கு அடையாளம் கண்டு கொள்ளவே முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு அவன் மாறி இருந்தான்.

ஸ்டைலான ஒரு ஷூ. குறைந்தது 20 பைகளைக் கொண்ட கிழிந்தும் கிழியாததுமான ஒரு பேண்ட் (லேட்டஸ்ட் ஸ்டைல் கார்கோ பேண்ட்டாம்). இடுப்பில் பெல்ட் தொங்கிக் கொண்டிருந்தது. சட்டையில் பைகள் உட்பட கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தது. கொத்தத் தெரியாதவன் தலையை கொத்தியது போல ஒரு முடி வெட்டு, கண்ணில் கான்ட்டாக் லென்ஸ் வேறு. ஷேவ் செய்யும் போதே பாதியில் எழுந்து வந்தது போல ஒரு தாடி. கண்ணுக்கு போட வேண்டிய கூலிங் கிளாஸை தலைக்கு மாட்டியிருந்தான்.  மேற்கத்திய கலாச்சாரம் அளவுக்கதிகமாகவே அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

அருகில் வந்தவன் நீ அருணாசலம் தானே என்று ஆரம்பித்தான். ஆமாம் என்றேன். நீங்க யாரு என்று கேட்டேன். டேய் என்ன தெரியலயா? நா தான் இவன் என்று தன்னைப் பற்றி எனக்கு ஞாபகப்படுத்தினான். அப்போது தான் அவன் யாரென்றே ஞாபகம் வந்தது. ஸ்கூல் படிக்கும் போது எளிமையாக இருந்த இவன் இப்போது அதற்கு நேர்மாறாக இருந்தான். 

என்ன அருணாசலம் கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்க. அதே மாதிரி இன் பண்ணுன சட்ட, அதே மாதிரி சிம்பிள் பேண்ட். இன்னும் பழைய காலத்துலயே இருக்காத. லேட்டஸ்ட் ஸ்டைலுக்கு மாறிக்கோ என்று அறிவுரை வழங்கினான். நீ என்ன பண்ற என்று நான் கேட்டேன். அதற்கு அவன் இங்க ஓரு காலேஜ்ல படிச்சேன். பட் எனக்கு கோர்ஸ் புடிக்கல, சோ டிஸ்கண்டினியுவ் பண்ணீட்டு இப்ப சென்னைல இருக்கேன். கினிமால ஒர்க் பண்ணீட்டு இருக்கேன். வெஸ்ட்டர்ன் டான்ஸ் படிச்சிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் படத்துல ஒர்க் பண்ண ஆரம்பிச்சுடுவேன், நெறய ப்ரோகிராம் பண்ணீட்டு இருக்கேன் என்றான். நீயும் ஸ்கூல்ல இருக்குறப்போ நெறய ப்ரோகிராம் பண்ணீருக்கல்லா. இப்டி அம்மாஞ்சி மாதிரி டிரஸ் பண்ணீருந்தா சினி பீல்ட்டுக்கே வரமுடியாது என்றான். இதற்கு மேல் பேசினால் என்னை கிமு காலத்துக்கு அனுப்பி விடுவான் என்று விடைபெற்றுக் கிளம்பினேன்.

அவனை சந்தித்ததிலிருந்தே ஆயிரம் கேள்விகள். சினிமா உலகம் இவர்களைப் போன்றவர்களுக்காக தானா? இவனைப் போன்று மாடார்னாக  இருப்பதைப் போன்று நடித்தால் தான் பிராகாசிக்க முடியுமா? அல்லது இயல்பாக இல்லாமல் பொய்யாக இருந்தால் தான் சினிமா வசப்படுமா? எளிமைக்கும் சினிமாவிற்கும் சம்பந்தமே இல்லையா என்பது போன்ற பல கேள்விகள்.

பிறகு சிறிது நாள் கழித்து ஒரு வேலை விசயமாக அவனது வீட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. அவன் அப்போது சென்னையில் இருந்தான். வீடு மிக எளிமையாக இருந்தது. அவனது அம்மாவும், அப்பாவும் மிக எளிமையாக இருந்தார்கள். ஆனால் அவர்களையும் மீறி அந்த வீட்டில் வறுமையின் அடையாளங்கள். என்னைப் பார்த்ததும் நலம் விசாரித்தார்கள். என்னை அவர்கள்  நினைவில் வைத்திருந்தது சந்தோசமாக இருந்தது. வந்த வேலையை சொல்லி விட்டு அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அவனா தம்பி, சென்னைல இருக்கான். அவன 12 முடிச்சி அவன கேட்டுட்டு தான் காலேஜ்க்கு சேர்த்தேன். புடிக்கலன்னா  மொத்தல்லயே சொல்ல வேண்டியதானே. 2வது வருசம் காலேஜ்க்கு போக புடிக்கல, நா சினிமாவுல வேல பாக்கப்போறேன்னு சென்னைக்கு கெளம்பிட்டான். அவன எவ்வளவோ தடவ சொல்லிப் பார்த்தாலும் கேக்க மாட்டுக்கான். சினிமா ரொம்ப மோசம்டா. சரியா முடிவு எடுக்கலன்னா வாழ்க்கையே வீணா போய்டும் என்று தன் ஆற்றாமையை சொன்னார்கள். எனக்குப் பாவமாக இருந்தது. பரவாயில்ல சார். சினிமால ஜெயிக்கணும்னா விடாமுயற்சி தான் முக்கியம். உங்க பையன் உங்கள எதிர்பார்க்காம ஜெயிப்பேன்னு சொல்லிட்டு முயற்சி பண்றான்லா. கண்டிப்பா பெருசா வருவான் பாருங்க என்று சொல்லி ஆறுதல் படுத்த முயற்சி செய்தேன். 

அவனா உருப்படப்போறான் தம்பி. மாசா மாசாம் நா தான் அவனுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம்ன்னு அழுறேன். முன்னேறணும்னு நெனச்சிருந்தா எப்பவோ முன்னேறி இருப்பான். அவன் அதுக்காகல்லாம் அங்க இல்ல தம்பி. பணக்காரனா தன்ன காட்டிக்கணும். பசங்க முன்னாடி தன்ன பெரிய ஆளா காட்டிக்கணும். அதான் தம்பி அவன் எதிர்பாக்குறான். நா இங்க எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் அனுப்புறேன்னு அவனுக்கு புரியாது தம்பி. இதற்கு மேல் அங்கே நிற்பதற்கு மனம் ஒத்து வராததால் அவர்களிடம் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டேன். அப்போது தான் நான் ஒரளவு சரியாகவே இருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. எளிமையாக இருப்பது தான் வாழ்க்கையில் கடினமான ஒன்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக