அன்புள்ள தோழனே,
இன்று உனக்குப் பிறந்த நாள். நீ பிறக்கும் போது உன் தாய் நினைத்திருக்க மாட்டாள் இன்று பிறந்திருக்கும் என் மகன் நாளைய உலகின் ஆதர்சன நாயகன் என்று. உன் தந்தை நினைத்திருக்க மாட்டார் ஆஸ்துமா உன்னால் தோற்கடிக்கப்படும் என்று. அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் கொஞ்சமும் நினைத்திருக்காது தன்னை ஓட ஓட விரட்டும் ஒரு நட்சத்திரம் முளைத்ததென்று. காலமும், நீ சந்தித்த களங்களும் உன்னை போராளியாக்கியது. என்னைப் போன்ற இளைஞர்களின் நாயகனாக்கியது. மருத்துவம் படித்து எதிரிகளை பந்தாடும் போர் வீரனானாய். பொருளாதாரம் படிக்காமலே கியுபாவின் பொருளாதார அமைச்சராகி நாட்டை உயர்த்தினாய். உன் வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் எங்களுக்குப் பொக்கிஷம். நீ காட்டிய பாதை எளியதன்று. நீ சந்தித்த சூழல்கள் அசாதாரணமானவை. யதார்த்தமானவனாய் நீ அன்று இருந்ததால் தான் அசாதாரணங்களை உன்னால் கனவு காண முடிந்தது. சத்தியமாய் சொல்கிறேன் நீ இன்னும் இறக்கவில்லை. உன் பெயரைச் சொன்னாலே ஏகாதிபத்தியம் மூச்சு விடுவதை ஒரு நிமிடம் நிறுத்தி வைத்து மூர்ச்சையாகிறது. நீ இன்னும் வாழ்கிறாய். சத்தியமாய் சொல்கிறேன். அநீதி கண்டு கோபப்படும் ஒவ்வொரு உயிரிலும் உன் உயிர் கலந்திருக்கும். உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக