புதன், 22 ஜூன், 2011

அவனும்...... அதுவும்........

       அது அவனுக்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம். அது அவனுக்கு கிடைத்தலிருந்தே இயல்பான மனநிலையிலிருந்து தவறிப் போய் இருந்தான். உலகத்தின் இயல்பு நிலைக்கு ஆட்படாத, நியாயம் கற்பிக்கப்படுகின்ற தவறுகள் எதுவுமே செய்யத் தெரியாத சாதாரண அரசு ஊழியன் அவன். சத்தியத்திற்கு பயந்து லஞ்சம் வாங்கக் கூட தெரியாததால் கடந்த இருபது வருடங்களாக பல்வேறு தண்டனைகளுக்கு உட்பட்டு பதவி உயர்வுகள் ரத்து ஆகி தாசில்தார் அலுவலகத்தில் கீழ்மட்ட அலுவலக உதவியாளனாகவே "ஊழியம்" செய்து வருகிறான். ஓரே வார்த்தையில் சொல்வதென்றால் சரியான "அம்மாஞ்சி". ஓட்டை வாடகை வீட்டில் வசிக்கின்ற அவனுக்கு ஒரு சைக்கிளைத் தவிர பெரிய சொத்து என்று எதுவுமில்லை. மனிதனுக்குரிய எந்த குணங்களும் இல்லையென்று இவனுக்கு வாழ்க்கைப்பட்ட உத்தமி தன் பிறந்த வீட்டிற்கே நிரந்தரமாக புகுந்துவிட்டாள். அதைப்பற்றிய கவலையோ, துக்கமோ இவனை எதுவும் செய்து விட வில்லை. தன் வறட்டுக் கொள்கைகளில் உறுதியானவனாகவே இப்போதும் இருக்கிறான். இப்படிப்பட்ட "விசித்திர" குணாதிசயங்கள் நிறைந்த இவனுக்கா போயும், போயும் அது கிடைக்க வேண்டும்.

                அன்று சனிக்கிழமை. இரவு 9 மணி இருக்கலாம். சக ஊழியர்கள் அவனிடம் திணித்து விட்டிருந்த அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு கொஞ்சம் நிதானமாக தன் சைக்கிளில் உலகம் பிறந்தது எனக்காக பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். யாருமற்ற சாலையின் திருப்பத்தில்தான் அதைப் பார்த்தான். பளபளக்கும் நிறத்தில் இருந்ததால் அது அவன் கண்ணில் பட்டிருக்கலாம். அது வேறொன்றுமில்லை. இந்த நவீன நாகரீக உலகின் தொழில்நுட்ப "புரட்சி"யின் குழந்தை என கருதப்படுகின்ற செல் போன் தான். அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்ட நவீன உயர்தர செல்போன். விலை பத்தாயிரம் இருக்கலாம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். சாதாரண சம்சாரிக்கு அதன் விலை எப்படித் தெரியும்? அது அப்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது.

       யாருடையது என்று விசாரிப்பதற்கு சுற்றும் முற்றும் பார்த்தான். அவனைத்தவிர வேறு யாரும் அங்கு இருப்பதாய் தெரியவில்லை. அதைக் கீழே போட மனசும் இல்லாமல், வைத்துக் கொள்ளவும் திராணி இல்லாமல் ஐந்து நிமிடங்கள் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தான். பின்பு எங்கிருந்தோ வந்த தைரியம் யாரும் பார்க்காத வண்ணம் மெதுவாய் அதை தன் பையில் போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் அவனை சைக்கிளில் ஓட்டமெடுக்கச் செய்தது.

              அவனது முகம் ஒருவித பதட்டத்தின் உச்சியில் இருந்தது. யாருடைய குரலோ தன் பெயரைக் கத்திக் கொண்டே தன்னைத் துரத்தி நெருங்கி வருவதாய் உணர்ந்து திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. சைக்கிளின் வேகம் கூடியது. வீட்டை நெருங்கினான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன், "என்னாய்யா ராமசாமி! ஆடு திருடுவனாட்டம் திரு திருன்னு முழிக்கிறீரு. என்ன விசயம்?" என்றார். அதற்கு பதிலேதும் பேச முடியாமல் ஒரு போலிப் புன்னகையை வரவழைக்க தோற்றுப் போய் வீட்டிற்குள் பாய்ந்தான்.

             வீட்டிற்குள் நுழைந்ததும் முகத்தைக் கழுவி, பதட்டத்தைப் போக்க தண்ணீர் குடித்தான். இயல்பு நிலைக்கு வந்தது போல் காட்டிக் கொள்ள வெகு நேரமானது. அதற்குப்பின் வீட்டுக்கதவு, சன்னல் எல்லாவற்றையும் அடைத்து விட்டு அந்த செல்போனை வெளியே எடுத்தான். அதில் ஏதோ ஒரு இடத்தில் அவன் கை விரல் பட்டதும் செல்போன் அழகிய வெளிச்சத்தில் உயிர் பெற்றது. பதறிப் போனான். பதட்டத்தில் ஏதேதோ செய்து பார்த்தான். பின் சிறிது நேரம் கழித்துதான் அது தன் பழைய மெளன நிலைக்குத் திரும்பியது. "செல் போன் திருடர்கள் கைது - திருட்டைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்" போன்று என்றோ அவன் படித்த செய்திகள் அன்று ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தித் தொலைத்தது.

                ரொம்ப நேரம் அந்த பிசாசையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு வெறுத்துப் போய் தூங்கப் போனான். புரண்டு, புரண்டு படுத்துப் பார்த்தான். தன் வீட்டிற்கு போலிஸ் பட்டாளமே வந்தது போலவும், தன்னை அடித்து தரதரவென்று இழுத்துச் செல்வது போலவும், பக்கத்து வீட்டுக்காரன் "நான் அப்பவே நெனச்சேன்யா. களவாணிப்பய மாதிரில்லா படபடத்துட்டு வந்தீரு. நான் சந்தேகப் பட்டது சரியாப் போச்சி. சரியான ஆளுய்யா நீரு" என்று கேலி செய்வதுமாக காட்சிகள் விரிந்தன.

          எழுந்து அமர்ந்தான். "சே! இந்தச் சனியன தெரியாத்தனமா கொண்டு வந்துட்டோமே. ஒரு நிமிஷத்துல என் புத்தி கோணலா போய்ட்டே. இது இருக்குற வரைக்கும் நமக்கு நிம்மதியே இல்ல. பேசாம நாளைக்கி மொத வேலையா இத போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போய் ஒப்படைச்சிட வேண்டியது தான். அடிமடியில பூனைய கட்டிட்டு அலைஞ்ச கதையால்லா இருக்கு. எவனுக்கும் ஒரு பாவமும் நினைக்காத எனக்கா இந்த சோதன வரணும்.  எல்லாம் என் தல விதி" என்று நொந்து போனான். நாளை காலை எப்படியும் போலிஸ் ஸ்டேசன் சென்று இந்த செல்போன் பூதத்தை ஒழித்துக் கட்ட வேண்டியது என்ற தீர்க்கமான முடிவில் தூங்கினான்.

          அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகாலையிலேயே அவனுக்கு முழிப்பு தட்டியது. வெளியே வந்து பார்த்தான். தெரு அமைதியாய் தன் உறக்கத்தை தொலைத்துக் கொண்டிருந்தது. பால்காரனின் மணிச்சத்தம், பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் தண்ணீரைத் தெளிக்கும் "சளப் சளப்" என்ற சத்தம், பறவைகள் பறந்து போகும் சத்தம் போன்ற சத்தங்கள் ரம்மியமான அதிகாலை உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. வானம் யாரோ செவ்வண்ணத்தை குழப்பி தீட்டியது போன்று இருந்தது. இதையெல்லாம் அனுபவிக்க இவனுக்கு நேரமில்லை. முகத்தை தண்ணீரால் கழுவினான். ஒரு செம்பில் பால் வாங்கிக் கொண்டு வந்து வீட்டிற்குள் வந்தான். பாலைக் காய்ச்சி சுட வைத்து டீ போட்டுக் குடித்தான். போலிஸ் ஸ்டேசன் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். கடிகாரத்தில் சின்ன முள் கீழேயும் பெரிய முள் மேலேயும் செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. வெந்நீர் போட்டு குளித்தான். வேட்டி, சட்டை அணிந்து கொண்டு அந்தச் செல்போனை ஒரு பையில் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினான். மணி ஏழு ஆகி இருந்தது.

           எங்கும் நிற்காமல், யார் பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளாமல் விறுவிறுவென்று நடந்து நேராக போலிஸ் ஸ்டேசன் சென்றடைந்தான். அவன் சென்ற நேரத்திற்கு அங்கே ஒரே ஒரு போலிஸ்காரர் மட்டுமே இருந்தார்.

              "ஐயா உள்ள வரலாமா?" தயக்கத்துடன்.....

             "யாருய்யா இந்த நேரத்துல......" தன் தூக்கம் கலைந்த எரிச்சலுடன்.....

            "ஐயா... அது.... வந்து...... இன்ஸ்பெக்டர் ஐயாவ பாக்கணும்"

           "யோவ்! அவர் என்ன உங்க வீட்டு வேலக்காரனா? நீர் நெனச்ச நேரத்துல பாக்குறதுக்கு. ஐயா இல்ல. என்ன விசயம்? என்ட்ட சொல்லும்"

              "அது இல்லிங்க. ஐயாவ பார்த்தா கொஞ்சம் செளகரியமா இருக்கும்"

         "யோவ் என்ன பார்த்தா உமக்கு போலிஸ்காரனா தெரியலியோ? இவரு பெரிய கலெக்டரு பாரு. நேரா இன்ஸ்பெக்டர் ஐயா பார்த்துத் தான் பேசுவாரு. வந்த விசயத்த சொல்லும்யா. காலங் காத்தால வந்து என் உசுர எடுத்துக் கிட்டு......." வார்த்தைகளில் தொனித்தது எரிச்சலின் நெடி. வேறு வழியில்லாமல் நடந்ததை எல்லாம் ஒப்பித்தான் அவன்.

          அவனை ஏற, இறங்க பார்த்த அந்த போலிஸ்காரர், "உமக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காய்யா! ரோட்ல என்னத்த விழுந்து கெடந்தாலும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துருவீரோ? இப்பல்லாம் இதுல தான் பெரிய பெரிய குண்டுல்லாம் வச்சி அனுப்புறானுங்க. சரி, சரி இங்க வந்துட்டீருல்லா. நாங்க பார்த்துகிறோம். நடந்தத எல்லாம் ஒண்ணுவிடாம இந்தப் பேப்பர்ல எழுதி கையெழுத்து போட்டு குடும். மறக்காம அட்ரசையும் சேர்த்து எழுதும். ஏதாவது விசாரிக்கணும்னா கூப்டு அனுப்புவோம். மறக்காம ஆஜராகிடணும். இந்த செல்போனால என்னன்ன பூதம் கெளம்பப் போவுதோ! அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.".

               அவனுக்கு பகீர் என்று இருந்தது. வேறு வழியில்லாமல் போலிஸ்காரர் கேட்டபடி எழுதிக் கொடுத்து விட்டு கிளம்பினான்.

                அவனுக்கு ஏண்டா இங்க வந்தோம் என்று தோன்றியது. மடியில இருக்கிற சுமைய இறக்கிவிடப்போய் மனசுல கூட கொஞ்சம் சுமையை ஏற்றிக் கொண்டதாக நினைத்தான். வாலு போய் கத்தி வந்த கதையா நம்ம பொழப்பு ஆகிட்டே என்று புழுங்கிக் கொண்டே வெளியேறினான்.

                  ராமசாமி போனதை உறுதி செய்து கொண்ட அந்த போலிஸ்காரர் ராமசாமி எழுதிக் கொடுத்த கடிதத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார். அந்தச் செல்போனில் இருந்த சிம்கார்டை தூர எறிந்து விட்டு செல்போனை தன் பையில் போட்டுக் கொண்டார். ராமசாமியிடம் இருந்த பதட்டமோ, பயமோ அந்த போலிஸ்காரரிடம் துளி அளவும் இருக்கவில்லை.

                                                 - வெ.அருண்பாரதி

                                                                                            

1 கருத்து: