ரொம்ப நாள் கழித்து உருப்படியான வேலை எதுவும் இல்லாததால் நேற்று இரவு 2006ல் இந்தியில் வெளியான முன்னா பாய் படத்தின் (2006) இரண்டாம் பாகம் Lage raho munna bhai படம் பார்த்தேன். காந்தியின் கொள்கைகளை வார்த்தைகளில் மட்டுமல்லாது பிராக்டிகலாக செய்து சத்தியமான வாழ்வு வாழ முடியும் என்பதை ஒரு பண்பலை நிகழ்ச்சி செய்து காட்டி சாதிப்பதாய் படம். படத்தின் நாயகன் சஞ்சய் தத் (முரளி பிரசாத் சர்மா) ஒரு ரவுடி. தாதா. ஆனால் ஒரு பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியும் வித்யா பாலன் (ஜானவி) குரலில் தன்னை மறக்கிறார். அவரை பார்த்தே தீருவது என்று முடிவு செய்து தன் டுபாக்கூர் வேலையைக் காட்டி ஒரு காந்தி பற்றிய ஒரு போட்டியில் ஜெயித்து அவரிடம் தன்னை ஒரு பேராசிரியராக அறிமுகமாகி நட்பை பெறுகிறார். பின் காந்தியைப் பற்றி நூலகத்தில் படித்து தெரிந்து கொண்டு தன்னோடு அந்த மகாத்மா காந்தியே வாழ்வதாகவும் கற்பனை செய்து கொள்கிறார். இடையிடையே நாயகியுடன் டுயட்டும் பாடுகிறார். ஒரு பண்பலை நிகழ்ச்சியில் காந்தியிசத்தை பரப்பி பாராட்டு பெறுகிறார். இப்படியாக கதை செல்கிறது. காந்தியிசத்தை பின்பற்றினால் வாழ்வு புனிதமடையும் என்பதை காட்ட முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் இந்த எப்.எம் நிகழ்ச்சி மட்டும் நம்பக்கூடியதாக இல்லை. பண்பலையில் வேலை பார்க்கிற அனுபவத்தில் சொல்கிறேன். அப்படியான நிகழ்ச்சிகளை நடத்தவே முடியாது. எல்லாம் வெறும் மாயை, கற்பனை தான். அந்த நாயகி கூறும் good morning mumbai என்கிற வார்த்தை ஸ்டைலை good morning vietnem என்கிற ஆங்கிலப்படத்திலிருந்து உருவி காப்பியடித்திருக்கிறார் இயக்குனர்.
இதில் எனக்கு ஒரு சந்தேகம் காந்தியிசத்தை கடைபிடித்தால் வாழ்வு வெற்றி பெற்று விடுமா? வாழ்வு புனிதப்பட்டு விடுமா? காந்தியும் காங்கிரசும் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்? இத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
என்னமோ வெள்ளைக்காரன் பிடியில் இருந்து காக்க வந்த ஹீரோ தான் காங்கிரசும் காந்தியும் என்று நமது பாடப்புத்தகங்களில் வேண்டா வெறுப்பாக படித்திருப்போம்.
உண்மையில் காங்கிரசின் பிறப்புக்கு ஒரு வெள்ளைக்காரன் தான் அப்பன். சுதந்திரப் போராட்ட வரலாறில் காங்கிரசின் பிறப்பு கூட முறையாக இல்லை. காங்கிரஸ் பிறந்து தவழும் போதே வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களை நடத்தி விட்டதா என்றால் அதுவும் இல்லை. உண்மையில் அதன் ஆரம்ப காலம் “மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணியார் நீடூழி வாழ்க” என்றே தனது அன்றாடப் பணிகளை ஆரம்பித்தது.
அதற்குப்பிறகு அது வளரும் போது உண்மையான விடுதலைப் போராளிகளுக்கு செய்த துரோங்களும், சூழ்ச்சிகளும் ஒரு தனிக்கதை.
சிறு வயதிலேயே அதிகமாக புத்தகங்களை படித்து ஒரு புரட்சிகரமான விடுதலை உணர்வை மக்களிடையே விதைத்த பகத்சிங்கை காங்கிரஸ் பயங்கரவாதி என்றே அறிவித்தது. பகத்சிங் மற்றும் தோழர்களுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் ஒட்டு மொத்த இந்தியாவே கொந்தளித்துக் கொண்டிருந்த 1931களில் காங்கிரஸோ, காந்தியோ அவர்களைக் காக்க எந்த வித முயற்சியும் எடுக்க வில்லை. காரணம் பகத்சிங் காரல் மார்க்ஸை நேசித்தான் என்பதற்காக. காந்தி கூட ஆங்கிலேய துரை எமர்சனுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களை கராச்சியில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார் இதுவா காந்தியின் மனிதாபிமானம். இவரைத் தான் மகாத்மா என்று தேசம் வணங்குகிறதா? இன்னும் நிறைய இருக்கிறது காந்தியின் திருவிளையாடல்கள்.
தலித் மக்களின் வாழ்வுரிமைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த மாமேதை அம்பேத்காரை அவமானப்படுத்தியவர் தான் இந்த காந்தி. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனித்தொகுதி கேட்டு போராடி 1932ல் பிரிட்டிஷ் பிரதமரே அதை அங்கீகரிக்கிறார். ஆனால் காந்தியோ இது இந்தியாவிற்கு அநீதியானது என்று எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரத்தை அறிவித்து மனித மாண்பை சாகடித்தவர் தான் இந்த காந்தி.
நடைவண்டி பழகும் நாட்களிலேயே பெண்குழந்தைகள் விதவைக் கோலம் பூணும் கோரம் சகியாமல் கொண்டுவந்த “இளம் வயது விவாக விலக்கு மசோதா”வை…… “பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை” என்று சண்டித்தனமாய் எதிர்த்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எம்.கே.ஆச்சாரியார்தான்.
தன் கொள்கைக்காக தன் தென்னந்தோப்பையே வெட்டிச் சாய்த்து விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாத வைக்கம் வீரர் பெரியாரே கூட காங்கிரஸைப் பற்றி கடுமையாக விமர்ச்சித்து இருக்கிறார். அதை நான் கீழே குறிப்பிட்டுகிறேன்.
காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927.
ஆக யாரெல்லாம் மக்களுக்காக போராடியதோ அவர்களை எதிர்த்து சூழ்ச்சிகள் செய்து வளர்ந்தது தான் காங்கிரசும், மகாத்மா காந்தியடிகளும். காந்தியின் தியாகத்தை நான் குறை கூற வில்லை. அதே சமயம் அவரின் தியாகம் வெளியே தெரிய வைப்பதற்காக ஒரு பெரிய உண்மையான விடுதலைப் போராட்ட வரலாறே மறைக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. அந்த வரலாற்றை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவசியமானதும் கூட.....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக